சிங்கிரி கோயில் என்னும் சிறு கிராமம் வேலூரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீழ்வல்லம் அல்லது கண்ணமங்கலத்திலிருந்து இங்கு வருவதற்கு சாலையுள்ளது. இக்கிராமம் குன்றின் மேல் இருக்கும் ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயிலினால் மிகவும் பிரபலம். கண்ணமங்கலத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில். கண்களுக்கு குளிர்ச்சியான பச்சைபசேல் என்ற வயல் வெளிகளின் நடுவில் பயணிக்கவேண்டும். தொலைவிலிருந்து குன்றையும் அதன் உச்சியில் கோயிலையும் பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும். தொலைவிலிருந்து தெரியும் கோபுரம் "காலி கோபுரம்" [வெற்று கோபுரம் அல்லது ’காற்று வீசும்’ கோபுரம்] என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுது காலி கோபுரத்தில் ஏறி விளயாடி இருக்கிறோம். இன்று பாறைகள் நகர்ந்து இருப்பதால், அங்கு செல்லமுடியாதது போல் பாதையை மூடிவிட்டார்கள்.
திருக்கோயில் சுமார் நூறு அடி உயரத்தில் குன்றின் மேல் அமைந்துள்ளது. ஐம்பது படிகள் ஏறி திருக்கோயிலை
அடையலாம். சிறிய ஓடை குன்றின் அடிவாரத்தில் ஓடுகிறது. ஓடையை தாண்டிதான் குன்றில் ஏற முடியும். இயற்கையே நம்மை
சுத்தம் பண்ணிதான் கோயிலுக்கு அனுப்புகிறது! மழைகாலத்தில் ஓடையில் நீர்வரத்து சற்று அதிகமாக தான் இருக்கும். குன்றின் மேல்
இருக்கும் கோயிலில் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீகருடர், ஶ்ரீஆஞ்சநேயர் ஆகியவர்களுக்கு சன்னிதிகள் உள்ளன.
மூலவர் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறார். பின்கை இரண்டிலும் சங்கும் சக்கரமும் காணப்படுகிறது. இடது முன் திருக்கரம் அவரது தொடையில் இருக்கிறது. வலது திருக்கரம் தாயார் லக்ஷ்மியின் இடுப்பை சுற்றி வளைத்திருக்கிறது. மூலவரின் மூர்த்தம் சுமார் ஆறடி உயரமுள்ளது. தாயார் லக்ஷ்மி பகவானின் வலது தொடையில் அமர்ந்த வண்ணமுள்ளார். இது மற்ற கோயில்களில் இருப்பதிலிருந்து வித்யாசமானது. மற்ற திருக்கோயில்களில் தாயார் பகவானின் இடது தொடையில் அமர்ந்திருப்பார்.
இத்திருக்கோயில் மிக பழமையானது. கர்ப்பகிரஹத்தை சுற்றி இருக்கும் கல்வெட்டிலிருந்து இத்திருக்கோயிலுக்கு நந்தி வர்மன் கைங்கரியம் செய்திருப்பது தெரிகிறது. இப்பழமையான திருக்கோயிலுக்கு பல பக்தர்கள் வேலூரிலிருந்தும், மாவட்டம் முழுவதிலிருந்தும் மூலவரையும் மற்றும் இங்கு பிரபலமான ஶ்ரீபால ஆஞ்சநேயரையும் தர்சிக்க வருகிறார்கள். ஜாதி மத பேதமின்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈசான்யத்தில் [வடகிழக்கில்] ஶ்ரீபால ஆஞ்சநேயருக்கு சன்னிதி அமைந்திருக்கிறது. இவர் பார்க்க குழந்தை போல் இருப்பதால், இவரை ஶ்ரீபால ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள். அஞ்சலிஹஸ்தனாக கூப்பிய திக்கரங்களுடன் இருக்கும் இவருடைய மூர்த்தம் மிகவும் சிறிதாக இருந்தாலும், இவருடைய கீர்த்தி மிகவும் பெரிது. குழந்தை பாக்யமில்லா தம்பதிகள், இவரை தரிசித்து வழிபட்டு, பெற்றோராகிறார்கள். வேலூரிலிருந்தும், மாவட்டம் முழுவதிலிருந்தும் ஶ்ரீபால ஆஞ்சநேயரை ஜாதி மத பேதமின்றி தர்சிக்க வருகிறார்கள்.
அனுபவம்
அடுத்த முறை வேலூருக்கோ அருகிலோ வருகையில் சிங்கிரியில் தாயாரை வலது
தொடையில் அமர்த்தியிருக்கும் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மரையும், ஶ்ரீபால ஆஞ்சநேயரையும் தரிசித்து, வழிப்பட்டு ஆசிகள் ஆயிரம் பெற்றுச்
செல்லுங்கள்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூலை 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020