home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீபத்ரா மாருதி திருக்கோயில், குஹுல்டாபாத், அவுரங்காபாத், மஹராஷ்ட்ரா


ஶ்ரீபத்ரா மாருதி திருக்கோயில், குஹுல்டாபாத், அவுரங்காபாத், மஹராஷ்ட்ரா

ஜீ.கே.கௌசிக்


குஹுல்டாபாத்

ஶ்ரீபத்ரா மாருதி திருக்கோயில், குஹுல்டாபாத், அவுரங்காபாத், மஹராஷ்ட்ரா மகராஷ்ட்ராவில் மராத்வாடாவை சேர்ந்த அவுரங்காபாத்-இல் இருக்கிறது குஹுல்டாபாத். பத்ராவதி என்று இருந்த ஊரின் பெயரை மொகலாயர்கள் காலத்தில் குஹுல்டாபாத் என்று மாற்றியமைத்தார்கள். பார்சி மொழியில் சொர்கத்தின் நுழைவாயில் என்று பொருள்படும். பத்திராவதி என்றால் பவித்திரமான தலம் என்று பொருள்படும். எப்படி பார்த்தாலும் இது பவித்திரமான தலம் என்பது நமக்கு விளங்கும். பன்னிரண்டு ஜோதிர் லிங்கத்தில் மூன்று ஜோதிர் லிங்கம் மராத்வாடாவில் அமைந்திருப்பது விசேடமே. அவுரங்காபாதின் மற்றொரு விசேடம் உலக புகழ் பெற்ற எல்லோரா குகைகள். இதன் மற்றொரு விசேடம் இந்து, பௌத்தம், ஜையின் ஆகிய மூன்று பிரிவு சித்தாந்தத்திற்கும் கலை பொக்கிஷங்கள் இங்கு உள்ளது தான். இந்த மாவட்டத்தில் மற்றொரு விசேடம் உலக புகழ் பெற்ற அஜந்தா குகைகளும் அதன் சித்திரங்களும்.

ஶ்ரீஹனுமாரின் தனிதன்மை

மேலே கூறிய விசேடங்களை தவிர இங்கு மிக விசேடமாக கொண்டாடப்படும் ஶ்ரீஹனுமார் திருக்கோயிலும் உண்டு. எல்லோரா குகைக்கு மிக அருகில் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில். இந்த க்ஷேத்திரத்தில் இறைவனுக்கு ஶ்ரீபத்ரா மாருதி என்பது திருநாமம். சாய்ந்த நிலையில் உள்ள மாருதி மூர்த்தி பாரதத்தில் வெகு சிலவே, அவற்றில் இதும் ஒன்று. சாய்ந்த நிலையில் இருக்கும் ஶ்ரீமாருதியின் மூர்த்தத்தின் பின் மிக சுவையான புராணம் உள்ளது.

தலபுராணம்

பத்ராவதி என்னும் இவ்விடம் மிக நேர்மையான அரசன் பத்ரசேனன் என்பவர் ஆட்சியில் இருந்தது. அவர் ஶ்ரீஇராமரின் பரம பக்தர். ஶ்ரீஇராமரை உதாரண புருஷராகவும் பரம பவித்திரமானவருமாக அசரன் கருதினான். தான் ஶ்ரீஇராமரை வழிபடுவதற்கு முன் பத்திரகுண்ட் என்னும் திருக்குளத்தில் நீராடுவது வழக்கம். ஶ்ரீஇராமபத்திரரை வழிபட்டுவந்த அரசனுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு பத்திரா என்று பெயர் வைத்தார் அரசன். ஊருக்கும் பத்ராவதி என்று பெயர் வழங்கப்படலானது.

பத்திரசேனா என்னும் ராஜரிஷி

Bhadra Maruti Temple, Khuldabad பத்திரசேனா சங்கீதத்தில் ஆர்வமுள்ளவரும், தேர்ச்சிப்பெற்றவருமாவார். ஶ்ரீஇராமரின் மேல் பல பாடல்கள் எழுதியும் மனமுருக பாடவும் செய்வார். அவர் ஶ்ரீஇராமரின் பெயரில் பாடல்களை பாடும் போது தன்நிலை மறந்து விடுவார், அத்தனை ஈடுபாட்டுடன் பாடுவார். மக்கள் அவரது இசையில் மயங்கி விடுவார்கள், மக்கள் என்ன பத்ராவதியில் பறவைகளும், பசுகளும் கூட மெய்மறந்து இருக்கும். அவர் நேர்மையாக அரசாட்சி செய்து வந்தார், ஆனால் தனது பதவி மீதோ, அல்லது புகழ், கௌரவத்தின் மீதோ எந்த வித பற்றுதலோ கிடையாது. அவரது பற்றற்ற இந்நிலையை கண்ட மக்கள், அவரை ராஜாவான போதிலும் ரிஷியை போல் இருப்பதால் "ராஜரிஷி" என்றே மதித்தனர், அழைத்தனர். ஶ்ரீஇராமரின் பெயரில் இருந்த பக்தியினால் சில சமயம் இரவு முழுவதும் கூட அரசன் பாடிக்கொண்டிருப்பார்.

ஶ்ரீஇராமபக்த ஹனுமார்

எங்கெங்கெலாம் ராமரின் நாமங்களோ அங்கெலாம் ஶ்ரீஇராம பக்த ஹனுமார், கண்ணீர் மல்க பக்தியுடன் வருவார் என்பது நமக்கு தெரியும். அரசன் ஶ்ரீபத்திரசேனா மனமுருகி ஶ்ரீஇராமரின் பெயரில் பாடல்கள் பாடும் பொழுது, ஶ்ரீஇராம பக்த ஹனுமார் பாடல்களை கேட்க பத்திராவதி க்ஷேத்திரத்திற்கு வந்தார். அன்று பத்திரசேனரின் பாடல்கள் மிகவும் இனிமையாக இருந்தது அவர் இதயத்தின் ஒவ்வொரு அணுவும் பக்தியில் உருகியது. அந்த பக்தியின் பிரபாவம் பாடலிலும் அவரது குரலிலும் வெளிப்பட்டது. க்ஷேத்திரமே ஸ்தம்பித்தது போல் பக்தியின் அலை அடித்தது. இரவிலும் பறவைகள், பசுக்கள் பாடலில் உருகின. மரங்கள் காற்றுக்கு கூட அசையவில்லை. தங்கள் அசைவினால் சப்தம் வருமே என்று பயந்தன. அப்படி ஒரு பக்தியின் வெளிப்பாடு.

ஶ்ரீ மாருதியின் பாவசமாதி

ஶ்ரீபத்ரா மாருதி திருக்கோயில் சரித்திரம், அவுரங்காபாத், மஹராஷ்ட்ரா அங்கு வந்திருந்த ஶ்ரீமாருதி பாட்டிலும், பாடகரின் ஶ்ரீஇராம பக்தியிலும் மயங்கிவிட்டார். இவரும் தன்னை மறந்து சற்றே சாய்ந்த நிலையில் ரசிக்க ஆரம்பித்து, தன்னை மறந்தார்; :"பாவசமாதி" என்னும் யோக நிலையை அடைந்தார். தன்னை மறந்து ஶ்ரீஇராமருடன் ஐக்கியப்பட்ட நிலையிலிருந்த ராஜரிஷி பத்திரசேனா, தன் விஞ்சிய நிலையிலிருந்து மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பினார். அவர் அருகில் ஶ்ரீமாருதி பாவசமாதி நிலையில் இருந்தததை கண்டார். இவ்வளவு அருகாமையில் ஶ்ரீமாருதியை கண்டவுடன் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஶ்ரீமாருதியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார். ஶ்ரீமாருதி பாவசமாதி நிலையிலிருந்து வெளி வந்தார். "பத்திரசேனா உமது ஶ்ரீஇராம பக்தியை கண்டு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஶ்ரீஇராமரின் தரிசனம் தாங்களுக்கு சீக்கிரமே கிட்ட வேண்டுகிறேன். தாங்களுக்கு ஏதேனும் இச்சையுண்டானால் கூறுங்கள்" என்றார்.

ராஜரிஷி பத்திரசேனரின் இச்சை

பவ்யத்துடன் ராஜா கூறினார் "பிரபோ! ஶ்ரீஇராமரின் பரிபூர்ண ஆசிகள் பெற்ற நீங்களே எனக்கு ஶ்ரீஇராமர் தான். ஶ்ரீஇராமரின் கிருபையால் தான் தாங்களின் தர்சனம் எனக்கு இன்று கிட்டியது என்பது பூரண உண்மை. தாங்கள் மகிழ்ந்ததால் நான் தன்யன் ஆகிறேன்"

"பிரபோ! இந்த பாவசமாதி நிலையில் தாங்கள் எனக்கு ஆசிகள் வழங்கியது போல், இங்கு வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்க வேண்டுகிறேன். வரும் பக்த கன்னிகளுக்கு நல்ல வரன் அமைய ஆசிகள் தாங்கள் அநுகிரகிக்க வேண்டும்."

ராஜரிஷி பத்திரசேனரை ஆசிர்வதித்த ஶ்ரீமாருதி, இந்த க்ஷேத்திரத்தில் பாவசமாதி நிலையில் இருந்து பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். எல்லா மங்களங்களும் பக்தர்களுக்கு வழங்குகிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீபத்ரா மாருதி திருக்கோயில், குஹுல்டாபாத், அவுரங்காபாத்"

 

அனுபவம்
பாவசமாதி நிலையில் இருக்கும் ஶ்ரீபத்திரா மாருதியிடமிருந்து ஆசிகள் பல பெறுவோம் வாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+