கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பொம்மகட்டா என்னும் சிறிய அழகிய கிராமத்திற்கு மாத்வ சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் பலர் அடிக்கடி வருவார்கள். இந்த புனித க்ஷேத்திரத்தை பல மாத்வ மடாதிபதிகள் விஜயம் செய்வார்கள். இங்குள்ள ஶ்ரீஹனுமார் திருக்கோயில் இவர்கள் அனைவரையும் ஆகர்ஷிக்கும் விசேஷம். இங்குள்ள ஶ்ரீஹனுமாரை ஹுலிகுந்தேராயா என்றே அழைப்பார்கள். இந்த ஶ்ரீமுக்கிய பிராண தேவரை ஶ்ரீவியாசராஜா அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள். இந்த க்ஷேத்திரத்தில் நடைப்பெறும் ரத உத்ஸவம் மிகவும் பிரபலம்.
ஒரு சமயம் இக்கிராமத்தை சேர்ந்த இடையர் தனது பசுக்களை இக்கிராமத்தின் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு எப்பொழுதும் போல் அழைத்துச் சென்றார். அன்று அங்கு புதியதாக ஒரு பசுவினை பார்த்தார். மேய்ச்சலுக்கு பின் இப்பசுவும் இவருடைய பசுக்களுடன் தொழுவத்திற்கு வந்துவிட்டது. மறு நாள் அப்பசுவின் பால் கறந்த போது அது அம்ருதத்தினும் அருமையாக இருப்பதை இடையர் பார்த்தார். இறைவனுக்கு இந்த அன்பளிப்புக்கு நன்றி கூறினார். சில நாட்களில் இப்பசுவின் பால் அளவு மிகவும் குறைவானது, இது அவருக்கு மனவருத்தத்தையும் வேதனையும் கொடுத்தது. இப்பசு கூட்டத்துடன் சேராமல் தன்னிச்சையாக மேய ஆரம்பித்தது. தினமும் ஒரு புதருக்கு அருகாமையில் மேய்வதற்கு சென்று விடும் இப்பசு. இவருக்கு இது மேலும் வருத்தத்தை தந்தது. இன்னும் சில நாட்களுக்கு பிறகு இப்பசு பால் கொடுப்பதை நிருத்திவிட்டது. அம்ருதத்துக்கு ஒப்பான பாலை இழந்ததனால், அத்திரமடைந்து சுயபுத்தியை இழந்த இவர் இப்பசுவை கோலால் அடித்து விட்டார். சற்று நேரத்தில் சுய நினைவு வந்து, பசுவை அடித்துவிட்டோமே என வருந்தினார். தனது மன்னிப்பை பசுவிடம் சொல்லி அதனை நம்ஸ்கரித்தார். அப்பொழுது அப்பசுவின் முகத்திலிருந்து ஒரு பிரகாசம் தோன்றியதை கவனித்தார். இது அவரை மேலும் கலவரபடுத்தி விட்டது, தெய்வ குற்றம் செய்துவிட்டதாக எண்ணினார். அன்று இரவு அவரது கனவில் ஶ்ரீபிராண தேவர் [ஶ்ரீஹனுமார்] தோன்றி, இது தனது லீலைதான் என்றும் மேலும் தினமும் அப்பசு மேயும் இடத்தில் தான் இருப்பதாகவும் கூறினார்.
மறுநாள் அவர் ஊர் பெரியவர்களை கூப்பிட்டு நடந்த விவரங்கள் எல்லாவற்றையும் கூறினார். ஶ்ரீபிராண தேவரின் கட்டளையை எடுத்துரைத்தார். ஊர் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இது பட்டது. ஶ்ரீபிராண தேவர் தங்கள் கிராமத்திற்கு வருகை தருகிறார் என்பது மகிழ்ச்சி தராமல் இருக்குமா? எல்லோரும் அப்பசு தினமும் மேயும் இடத்திற்கு சென்றனர். மெதுவாக அங்கிருந்த புதரைகளை அப்புறப்படுத்தினர். பின் அவர்களுக்கு ஶ்ரீபிராண தேவரின் சிலாரூபம் தெரிந்தது. மகிழ்ச்சியில் ஆனந்தித்த மக்கள் மெதுவாக அச்சிலையினை வெளிக்கொண்டு வந்தனர்.
மிகவும் சக்திவாய்ந்த இப்பிராண தேவர் தனது வலது திருக்கரத்தினை உயர்த்தி வைத்துள்ளார். அத்திருக்கரம் பக்தர்களுக்கு அபயம் அளிப்பது போலும், அதே சமயம் அரக்கர்களை அரைவது போலும் இருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது. ஓங்கி உயர்ந்து இருக்கும் வால் பக்தர்களுக்கு தைரியத்தையும், சுறுசுறுப்பையும் புகட்டும். ஶ்ரீபீமசேனனை போல் இவரும் கதையை மற்றொறு திருக்கரத்தில் வைத்துள்ளார். அழகிய தலை முடியை சீவிவாரி நுனியை முடிந்து வைத்துள்ள லாவகம் ஶ்ரீமாத்வாசாரியாரை நினைவு படுத்துகிறது. சிலையின் உச்சியில் சூரியனும், சந்திரனும் இருப்பது ஶ்ரீஜனமேஜயனை நினைவு படுத்துகிறது. அவரது திருபாதங்களின் அடியில் தீயசக்தியின் அடையாளமாக அரக்கன் ஒருவனை அடக்கி வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட சிலாரூபத்தை பார்த்த மக்கள் இம்மூர்த்தம் வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும் என்றும், பின் இறைவனுக்கே தெரிந்த காரணத்தால் இத்தனை நாட்கள் இப்படி இருந்திருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தனர். ஶ்ரீபிராண தேவரை கிராமத்தில் நல்ல இடத்தில் ஸ்தாபனம் செய்து பூஜைகள் செய்வது என்று முடிவெடுத்தனர்.
மறுநாள் கிராமத்து மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, பிரதிஷ்டை செய்ய மூர்த்தத்தை முறைபடி ரதத்தில் எடுத்து வருவது என்று தீர்மானித்து, கிராமத்திற்கு எடுத்து செல்ல, புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஶ்ரீபிராண தேவரை ஏற்றி வைத்தனர். சற்று தொலைவு சென்ற பிறகு ரதத்தை மக்களால் மேலும் எடுத்து செல்ல முடியவில்லை. முயற்சிகள் பல செய்தும் பலிக்கவில்லை. அன்று இரவு கிராமத்தில் ஒரு பெரியவரின் கனவில் ஶ்ரீபிராண தேவர் தான் அங்கேயே இருக்க விரும்புவதாகவும், அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யவும் சொன்னார்.
இறைவனின் ஆணைப்படி ஶ்ரீபிராண தேவர் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. "ஹேலி புதே" என்னும் செடி புதர்களிடையிருந்து தானாகவே வெளிவந்தவர் [தன்னை தானே அடையாளம் காட்டிக்கொண்டவர்] அவர் என்பதால் இவருக்கு இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீஹுலிகுந்தேச ஸ்வாமி [ஶ்ரீஹுலிகுந்தேராயா] என்று பெயர்.
ஶ்ரீவியாசராஜா அவர்கள் இந்த க்ஷேத்திரத்திற்கு வருகை தந்தார். அவரிடம் இந்த ஶ்ரீபிராண தேவரை பற்றி கூறப்பட்டது. அவர் தான் இக்கிராமத்திலேயே "சாதுர்மாஸ்ய விருதம்" அநுசரிக்க விரும்புவதாக கூறினார். இங்கு அவர் தங்கியிருந்த காலத்தில் ஶ்ரீஹுலிகுந்தேராயாவிற்கு பிராணபிரதிஷ்டை செய்தார், மேலும் கர்ப்பகிரஹம் கட்டி கோயிலை சற்று விரிவுபடுத்தினார். அதன் பிறகு பூஜைகள் தினசரி கிரமமாக நடக்க ஆரம்பித்தது.
கோயிலின் கிழக்கில் திருக்குளம் அமைக்க கிராம மக்கள் தோண்ட ஆரம்பித்தப்போழுது அங்கு அவர்களுக்கு புதையல் கிடைத்தது. அந்த பணத்தைக்கொண்டே அவர்கள் திருக்குளத்தை சீராக அமைத்தனர். ஶ்ரீ வாத்திராஜா என்னும் குரு இந்த க்ஷேத்திரத்திற்கு யாத்திரை வந்திருந்த பொழுது, இத்திருக்குளத்தில் ஒரு ருத்ரமூர்த்தி விக்ரஹம் கிடைத்தது. அதனை குளக்கரையில் பிரதிஷ்டை செய்து ஶ்ரீ கங்காதரன் என நாமகரணம் செய்தார்.
1807ஆம் ஆண்டு ஶ்ரீஇராகவேந்திர சுவாமியின் பரம்பரையை சேர்ந்த ஶ்ரீசுபோதேந்திர தீர்த்தர் அவர்கள் ஶ்ரீசீதா, லக்ஷ்மண, ஹனுமார், கருடர் சமேத ஶ்ரீஇராமரை பிரதிஷ்டை செய்தார். இந்த மூர்த்தங்கள் நஞ்சங்கோடுவை சேர்ந்த ஶ்ரீஇராமா சாஸ்த்ரி அவர்கள் கைங்கரியம்.
மைசூரு திவான் ஶ்ரீபூர்ணயா கோயிலில் பல விரிவுகள் செய்துள்ளார். தசாவதாரம் சிலைகளுடன் இராஜகோபுரம் இவரின் கைங்கரியம்.
ஶ்ரீமாத்வ மடத்தை சேர்ந்த பல மடாதிபதிகள் இந்த க்ஷேத்திரத்திற்கு வந்துள்ளனர். ஶ்ரீஹுலிகுந்தேராயாவின் ஈர்ப்பு சக்தியின் பெருமையை இது காட்டுகிறது.
இந்த க்ஷேத்திரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஶ்ரீஹுலிகுந்தேராயாவை ரதத்தில் ஊர் முழுவதும் அழைத்து செல்வது மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது
அனுபவம்
அடக்கத்துடன் இந்த க்ஷேத்திரத்திற்கு வந்து தங்கி ஶ்ரீஹுலிகுந்தேராயாவின்
அருளாட்சியில் திளைத்து ஆசிகள் பல கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: நவம்பர் 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020