home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வில்வாத்ரிநாதர் திருக்கோயில், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா :: courtesy- Wiki Commons


வில்வாத்ரிநாதர் திருக்கோயில் ஹனுமார், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா

ஜி.கே.கௌசிக்


திருவில்வாமலா

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா, ஶ்ரீபரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டது. அவர் தன் கோடாளியை கடலில் பாய்ச்சி, அதிலிருந்து நிலத்தை இப்பூமியுடன் இணைத்தார் என்பது புராணம். மேற்கு தொடர்ச்சி மலை கேரளத்தில் கிழக்கு எல்லையாக இருக்கிறது. கேரளத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது, சென்று பார்த்தால் பிரமிப்பூட்டும் வண்ணம் இருக்கும், கண்டால் தான் அதன் அழகை ரசிக்க முடியும். திருச்சூர் மாவட்டத்தில் தாலப்பில்லி தாலுகாவில் இருக்கிறது திருவிவாமலா என்னும் மலைத்தொடர். அருகில் பாரதபுழா என்று அழைக்கப்படும் நீலா நதி ஓடுகிறது.

இம்மலையின் கீழ் பொன்னாலான வில்வ மரம் இருப்பதால் இம்மலையிற்கு திருவில்வாமலா என்று பெயர் வந்தது. ஶ்ரீசிவனுக்கு பூஜை செய்ய மூன்று இதழ்களுடன் கூடிய வில்வ பத்ரம் மிகவும் விசேடமாக கருதப்படுகிறது என்பதை நினைவு கூறுவோம்.

கேரளத்தில் மூன்று ஶ்ரீஇராம க்ஷேத்திரங்கள் மிகவும் பழமையானதும் பிரபலமானதும் ஆகும். அவை திருவில்வாமலா, திருப்பரையார் மற்றும் திருவன்காட் என்பனவாகும். இம்மூன்று ஶ்ரீஇராம க்ஷேத்திரத்தில் வில்வாமலாயில் உள்ள ஶ்ரீஇராமர் மட்டுமே சுயம்பூ. இறைவனின் பெயரில் க்ஷேத்திரங்கள் அழைக்கப்படுவது வழக்கம் ஆனால் இங்குள்ள ஶ்ரீஇராமரோ "வில்வாத்ரிநாதர்" என்று இந்த க்ஷேத்திரத்தின் பெயரிலேயே விசேடமாக அழைக்கப்படுகிறார். ஶ்ரீலக்ஷ்மண ஸ்வாமிக்கு தனி சன்னிதி உள்ளது இந்த க்ஷேத்திரத்தின் மற்றொரு விசேடமாகும்.

தலபுராணம்

வில்வாத்ரிநாதர் திருக்கோயில் நுழைவாயில், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா இரண்டு ஶ்ரீமஹா விஷ்ணுவின் திருமேனிகளால் சீரிய இச்க்ஷேத்திரத்தின் புராணத்தை பதினெட்டு அத்யாயங்கள் கொண்ட "ஶ்ரீவில்வாத்திரி மஹாத்மா" என்னும் ஸம்ஸ்கிருத நூல் விளக்குகிறது. கேரள தேசத்தை ஸ்தாபித்த ஶ்ரீபரசுராமர் க்ஷத்திரியர்களை வதம் செய்து அளவுக்கு அதிகமான பாவத்தை தேடிக்கொண்டார். அதிலிருந்து விடுபட அவர் ஶ்ரீபரமசிவனை வேண்டினார். பரமசிவனும் தான் பூஜை செய்து வந்த ஶ்ரீமஹாவிஷ்ணுவின் திருமேனியை பரசுராமரிடம் கொடுத்து பூஜை செய்யச் சொன்னார். அத்திருமேனியினை பெற்ற பரசுராமர், திருவில்வமலாவின் மேற்கு கடைசி பகுதி தான் இதனை ஸ்தாபனம் செய்ய உகந்த தலம் என முடிவு செய்தார். பொன்னாலான வில்வமரம் இதன் அடியில் பூமியில் இருப்பதனால் இதை தேர்ந்தெடுத்தார். பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட புராணமான இத்திருமேனியை தற்பொழுது கிழக்கு சன்னிதியில் காணலாம். கண்ணை பறிக்கும் அழகு. அதுவும் மிகவும் குறைவான அலங்காரத்துடன் இருக்கும் போது அவரின் ஆகர்க்ஷணம் மிகவும் அதிகமாக இருக்கிறது.

இந்த க்ஷேத்திரத்தில் மேலும் ஒரு மஹாவிஷ்ணுவின் திருமேனி வந்ததின் காரணம், மேற்கூறிய தலபுராணத்தில் காணப்படுகிறது. ரிஷி காஸ்யபரின் மகன் ஶ்ரீஆமலாக்கன் ஶ்ரீமஹாவிஷ்ணுவை குறித்து தவம் இருந்தார். அவர் ஶ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபித்து வந்தார். அவரது தவத்தின் கடுமையை பார்த்த இந்திரன் தவத்தை கலைக்க எத்தனித்தான். ஶ்ரீஆமலாக்கன் தனக்கு ஏதையும் எதிர்பாராது பகவான் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் தரிசிக்கவே தவம் எய்தியிருப்பதனை ரிஷி காஸ்யபர், இந்திரனிடம் எடுத்து கூறினார். இதனால் சாந்தமடைந்த தேவர்கள் ஶ்ரீஆமலாக்கன் தவத்தில் இடையூறு செய்யவில்லை. ஆனால் அசுரர்களுக்கு சந்தேகம் இருந்ததால் தவத்திற்கு இடையூறு செய்து வந்தனர்.

தவத்தின் முடிவில் ஶ்ரீஆமலாக்கன் கண்களை திறந்த பொழுது, எதிரில் தெரிந்த அத்தனை அசுரர்களும் பஸ்பமானார்கள். பின் அச்சாம்பல் பாறைகளாக மாறின. இன்றும் திருக்கோயிலின் தென்கிழக்கு பகுதியில் "ராக்ஷஸபாறை" என்று அழைக்கப்படும் இப்பாறைகளை காணலாம்.

மனம் குளிர்ந்த ஶ்ரீமஹாவிஷ்ணு ஶ்ரீதேவி, பூதேவி, சமேதராக ஆதிக்ஷேஷன் குடைபிடிக்க ஶ்ரீஆமலாக்கனின் முன் தோன்றினார். ஶ்ரீஆமலாக்கன் பிரிமித்து போனார். ஆனந்தத்தில் பேச்சு கூட வரவில்லை. ஶ்ரீமஹாவிஷ்ணு வேண்டிய வரம் அளிப்பதாக கூறினார், ஆனால் ஶ்ரீஆமலாக்கன் ஏதும் வேண்டாது, என்றும் அவரின் பக்தியில் திளைத்திருக்கும் படி தன்னை வைக்க வேண்டினார். கேட்டதை கொடுப்பவர் அல்லவா அப்படியே ஶ்ரீஆமலாக்கனுக்கு எப்படி தரிசனம் கொடுத்தரோ அப்படியே இங்கு உறைந்தார். இப்படி வந்தவரே இந்த சுயம்பூ ஶ்ரீமஹாவிஷ்ணு.

ஶ்ரீஆமலாக்கன் ஶ்ரீஇராம தாரக மந்திரத்தை ஜபித்து தோன்றியதால் மேற்கு சன்னிதியில் இருக்கும் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் இத்திருமேனி ஶ்ரீஇராமராக கொள்ளப்படுகிறார். ஶ்ரீபரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிழக்கு சன்னிதியில் இருக்கும் ஶ்ரீமஹாவிஷ்ணு ஶ்ரீலக்ஷ்மண சுவாமியாக கொள்ளப்படுகிறார்.

ஶ்ரீஇராமர் - சுயம்பூ திருமேனி

வில்வாத்ரிநாதர் திருக்கோயில் வெளிப்பிரகாரம், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா மேற்கு சன்னிதியில் இருக்கும் ஶ்ரீமஹாவிஷ்ணு திருமேனி சுமார் ஐந்து அடி உயரமுள்ளர். அவரது திருமேனி பொன்னாலான கவசத்தால் பாதுகாக்கப்படுகிறது. இக்கவசத்தை அகற்ற முயன்ற பொழுது திருமேனியில் சிறு காயம் ஏற்பட்டது என்பதால் இது நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது. ஶ்ரீஅமலாக்கன் முன் எப்படி பகவான் தோன்றினாரோ அப்படியே நமக்கும் காட்சி தருகிறார் "வில்வாத்திரிநாதர்". வலது திருக்கரத்தில் சுதர்ஸன சக்கரம், வலது பின் திருக்கரத்தில் தமரை மலர், இடது திருக்கரத்தில் சங்கு, இடது பின் திருக்கரத்தில் கதை இவைகளுடன் ஶ்ரீபகவான் தரிசனம் தருகிறார். மாதா ஶ்ரீதேவியும், ஶ்ரீபூதேவியும் அவரின் பக்கத்தில் காட்சி தருகிறார்கள். அனைவருக்கும் குடை பிடித்தால் போல் ஆதிஶேஷன் இருக்கிறார். இக்கர்ப்பகிரஹத்தின் நேர் கீழே பொன்னாலான வில்வ மரம் பூமியில் உள்ளதாக நம்பப்படுகிறது. அதனால் ஶ்ரீஇராமருக்கு இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீவில்வாத்திரிநாதர் என்று பெயர்.

ஶ்ரீவில்வமங்களத்து சுவாமியார் அவர்கள் இந்த க்ஷேத்திரத்தின் இறைவனை "ஶ்ரீவில்வாத்திரிநாதா" என்று போற்றி பரவியுள்ளார்.

க்ஷேத்திரத்தில் ஶ்ரீஹனுமார் திருக்கோயில்

இவ்விரு தேவர்களின் ஆகர்ஷ்ண சக்தியினால் இந்த க்ஷேத்திரத்தின் பெருமையும் புகழும் பரவத்தொடங்கி பின் பல சாதுகளும், மகான்களும், பக்தர்களும் ஈர்க்கப்பட்டனர். பொறாமை கொண்ட தீயோர் [இராக்ஷஸ குணமுடையோர்], பிராமணர் போல் வேடம் அணிந்து மேற்கு சன்னிதியில் இருக்கும் தெய்வ திருஉருவத்தினை தகர்க்க முயன்றனர். அந்த சமயம் பெரும் பூகம்பம் வந்து நிலம் நடுங்கியது. செய்வதறியாது தீயோர் தப்பித்து கோயிலுக்கு வெளியே ஓடினர். பயத்தில் ஆழ்ந்திருந்த அவர்கள் அங்குள்ள குகையின் உள்ளே ஒளிந்தனர். தீயோரை ஶ்ரீவில்வாத்திரிநாதர் [இராமர்] தான் அப்படி பயமுறுத்தி ஓடவிட்டார் என்று நம்பப்படுகிறது. பெரிய கறுங்கல்லினால் குகையின் வாய் மூடப்பட்டுள்ளது.

திருக்கேயிலின் கிழக்கில் அழகிய இராஜகோபுரம் இருந்தது. முன்பு இடியால் தாக்கப்பட்டு கோபுரம் இடிந்து விட்டது. அதன் பின் கோபுரத்தினை திரும்ப கட்டவில்லை. கோயிலில் தீ விபத்து சில நடந்துள்ளது. ஶ்ரீஹனுமார் தான் பெரிய ஆபத்திலிருந்து இந்த திருக்கோயிலை காப்பாற்றியுள்ளார் என்பதால், அவருக்கு பழைய இராஜகோபுரத்திற்கு அருகிலேயே மேற்கு நேக்கிய சன்னிதி கட்டப்பட்டு அதில் அவரை பிரதிஷ்டை செய்தார்கள். திருக்கோயிலின் பாதுகாவலராக அவரை பிரதிஷ்டை செய்த பின் திருக்கோயிலில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

வில்வாமலா ஶ்ரீஹனுமார்

இந்த க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ ஹனுமாரின் சிலை சுமார் மூன்று அடி உயரம் உள்ளது. ஶ்ரீஹனுமார் நின்று கொண்டு இருக்கும் பாங்கே மிகவும் அழகு. நளினமாக சற்றே வளைந்திருக்கும் அவரது இடது கால் பக்தர்களின் குறை தீர்க்க ஓடி வரும் தயார் நிலையில் இருப்பதாகவே இருக்கிறது. சற்றே சாய்ந்துள்ள திருமுகத்தின் லாவண்யம் பார்ப்பவர் கண்களை விட்டு அகலாது. ஶ்ரீஹனுமாரின் அழகிய காந்தகண்களை பக்தர்கள் பார்த்துக் கொண்டே இருக்க வைக்கிறது. சிரத்தில் கிரீடம், அவரது தோள்களில், கழுத்து, ஆயுத, இடுப்பு மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் அவர் அணிந்திருக்கும் அழகான ஆபரணங்கள் அவருக்கு அழகைகூட்டுகிறது,. ஶ்ரீஹனுமாரின் திருகரம் ’கடவுள் ஒருவரே’ என்பதை குறிக்கும் 'த்ராஜனி முத்திரை' காட்டுகிறது. ஸ்ரீ வில்வாத்திரி நாதர் [ஸ்ரீ ராமர்] பக்தர்களின் பிரியர், ஶ்ரீஹனுமார் இந்த க்ஷேத்திரத்தின் பாதுகாவலர், இருவரும் இந்த ஆலயத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் பிரியமானவர் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "வில்வாத்ரிநாதர் திருக்கோயில், திருவில்வாமலா, திருச்சூர்"

 

அனுபவம்
ஶ்ரீஹனுமத், ஶ்ரீலக்ஷ்மண, ஶ்ரீதேவி, ஶ்ரீபூதேவி சமேதராக உள்ள பரம்பொருளான ஶ்ரீஇராமசந்திர மூர்த்தியுடன் இருக்கும் இத்திருக்கோயிலுக்கு வருகை தாருங்கள். இறைவனின் பூமியான கேரளத்தில் இயற்கை அழகை ரசியுங்கள், திருவில்வமலா அழகில் தாங்களை மறந்து, பரிவாரத்துடன் இருக்கும் ஶ்ரீஇராமரை தரிசனம் செய்து ரிஷி அமலக்கன் மாதரி வாழ்வில் நிறைவை உணருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+