home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

Penna River near Gandikota, Cuddapah. Courtesy: TPN Reddy, tvjagan and wiki common


ஜூல் ஶ்ரீமுக்ய ப்ராணா [ஆஞ்சநேயர்] திருக்கோயில், கடப்பா, ஆந்திரப்பிரதேசம்

திருமதி அகிலா இரகுராமன், கடப்பா


கடப்பா

கடப்பா சோழர்கள் ஆட்சியிலும், பின் காகத்தியர்களின் ஆட்சியிலும், பின் 14ஆம்நூற்றாண்டின் பின்பகுதியில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழும் இருந்தது. கண்டிகோடா நாயக்கர்கள் விஜயநகர சாம்ராஜ்ய பிரதிநிதிகளாக சுமார் இருநூறு ஆண்டுகள் கடப்பாவை ஆட்சி செய்தனர். 1565ஆம் ஆண்டு கோல்கொண்டா நவாப் மையானா நவாப் நாயக்கர்களை வெற்றிகண்டு பின் இப்பிரதேசத்தை அவர்கள் கீழ் கொண்டு வந்தனர். 1800ஆம் ஆண்டு கடப்பா ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் பெரும் பகுதி கடப்பா மையானா நவாபின் ஆட்சியின் கீழே இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கடப்பாவை முக்கிய மாவட்டமாக்கி கடப்பாவை தலைமையாக கொண்டு மேஜர் மன்ரோவை மாவட்ட ஆளுநராக நியமித்தனர் இவர் கீழ் நான்கு சிறிய மாவட்டங்கள் இருந்தன.

கடப்பாவின் மூன்று புறமும் நாலாமாலா மற்றும் பாலகோண்டா மலைகளால் சூழப்பட்டுள்ளது. சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் பென்னா நதி ஓடுகிறது. கடப்பா என்றால் தெலுங்கு மொழியில் "நுழைவாயில்" என்று பொருள். திருப்பதி சேஶாத்திரிமலை வாழும் ஶ்ரீவேங்கடாசலபதியை காண கடப்பா வழியாக யாத்திரையை தொடங்குவார்கள். அதனால் தெவுனி கடப்பா என்று அழைக்கப்படலாயிற்று. பின் கடப்பா என்றே அழைக்கப்படுகிறது.

கடப்பாவும் ஆஞ்சநேயரும்

இதற்கு முன் நாம் கடப்பாவிலிருந்து அருகாமையிலுள்ள பாலகோண்டா மலையிடை அமைந்துள்ள பள்ளத்தாக்கில் உள்ள வேம்பள்ளி கிராமத்தில் இருக்கும் கண்டி க்ஷேத்திரத்தைப் பற்றி பார்த்தோம். கடப்பா நகரத்திலேயே மிக பழமை வாய்ந்த ஶ்ரீஆஞ்சநேயருக்கான திருக்கோயில் ஒன்று பிரமின் தெருவில் இருக்கிறது. இது பழைய பஸ் நிலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டரும், புதிய பஸ் நிலயம், இரயில் நிலயம் ஆகியவற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்

ஜூல் ஶ்ரீமுக்ய ப்ராணா [ஆஞ்சநேயர்] திருக்கோயில், கடப்பா, ஆந்திரப்பிரதேசம் மேற்கு நோக்கியிருக்கும் கம்பீரமான அழகிய மூன்று நிலை இராஜகோபுரத்தின் ஐந்து கலசங்களுடனும் திருக்கோயில் நம்மை வரவேற்கிறது. இடது புறம் ஶ்ரீஆஞ்சநேயரின் சித்திரமும், வலது புறம் ஶ்ரீகுருராயர் ராகவேந்திரரின் சித்திரமும் இருக்கிறது. இராஜகோபுரத்தில் அதிகமாக வேலைப்பாடுகள் இல்லை. முதல் நிலையில் ஶ்ரீமாத்வாசாரியார், ஶ்ரீவியாசரின முன் அமர்ந்து இருப்பது போல் சுண்ணாம்பு கலவையாலான சிலை இருக்கிறது. மற்றும் துவார பாலகர்கள் இருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் திறந்த வெளி, வலது புறம் கோயில் கிணறு உள்ளது. அபிஷேகத்திற்கு நீர் இங்கிருந்து தான் வருகிறது. கிணற்றின் அருகில் பூஜைக்குரிய துளசி மாடத்தில் இருக்கிறது.

ஶ்ரீஆஞ்சநேயரின் சன்னிதிக்கு செல்ல எதிரில் தெரியும் கூறையிட்ட பாதையின் வழி செல்ல வேண்டும். அது முடியும் இடத்தில் பெரிய செவ்வகமான கூடம். கூடத்தின் மத்தியில் சன்னிதி. சன்னிதியின் நுழைவில் இருபுறமும் வாழைமரங்கள், அதில் பெரிய வாழைகுலை பூவுடன் இருப்பது போல் அழகாக வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது பார்ப்பதற்கு மங்களமாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

தல வரலாறு

ஶ்ரீஆஞ்சநேயரை தரிசிக்கும் முன் சற்று தல வரலாற்றை பார்ப்போமா? அப்பொழுது கடப்பா நிஜாம் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது [அதாவது வருடம் 1565க்கு பின் வருடம் 1800க்கு முன்]. கடப்பாவில் நிஜாமின் பிரதிநிதியின் மேற்பார்வையில் ஆட்சி செலுத்தி வந்தார் நிஜாம். அச்சமயம் நிஜாமின் பிரதிநிதியின் கனவில் ஶ்ரீஆஞ்சநேயர் தான் கடப்பாவில் ஆற்றில் இருப்பதாகவும் தனக்கு கோயில் அமைத்து வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் செய்ய சொன்னார். நவாபின் பிரதிநிதி தன் ஆட்களுடன் பென்னா ஆற்றிலும் மற்றும் கால்வாய்களிலும் ஆஞ்சநேயரின் விக்ரஹத்தை தேட ஆரம்பித்தனர்.

நீண்ட தேடலுக்கு பிறகு நதியின் நடுவில் சலவை தொழிளாளி, துணி துவைக்க உபயோகபடுத்தும் கல்லை திருப்பச் செய்தார்கள். ஆச்சரியம்! அக்கல்லின் மறுபுறத்தில் ஶ்ரீஆஞ்சநேயரின் அர்த சிலை [புடைப்பு சிலை] இருந்தது.

மகிழ்ச்சியாக நவாபின் பிரதிநிதி அந்த விக்ரஹத்தை இப்பொழுது திருக்கோயில் இருக்கும் இடத்திற்கு எடுத்து வந்து, முறை படி பிரதிஷ்டை செய்ய வைத்தார். பின் நவாபின் அனுமதியுடன் பாதாகாண்ட்லா என்னும் கிராமத்திலிருந்து மாத்வ பிராமணர்களை அழைத்து வந்து முறையாக கோயில் கட்டி நித்ய வழிபாடுக்கு ஏற்பாடுகள் செய்தார்.

நிஜாமின் பிரதிநிதியையும் நிஜாம் என்றே உள்ளூரில் அழைப்பார்கள். தனது கனவில் வந்து தனக்கு ஆசிகள் வழங்கியதால் நவாப் தினமும் வழிபாட்டு சமயம் வருவது வழக்கமாயிற்று. ஶ்ரீஆஞ்சநேயருக்கு ஆரத்தி எடுக்கும் சமயம் அதை தர்சிக்கும் நிஜாமிற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். அவருக்கு ஶ்ரீஆஞ்சநேயரும் ஆனந்தத்தில் ஆடுவது போல் காட்சி தருவார். அதனால் அவர் ஶ்ரீஆஞ்சநேயரை ஜூல் ஆஞ்சநேயர் என்று அழைக்கலானார். ஜூல்னா என்றால் ஆடுவது என்று பொருள். ஆனந்தத்தில் ஆடும் ஶ்ரீஆஞ்சநேயரை நவாப் கண்டு களித்திட்டார்.

ஆட்சி மாறிய பின் கடப்பாவின் ஆளுநராக இருந்த மேஜர் மன்ரோவிற்கும் இப்படி ஶ்ரீஆஞ்சநேயர் காட்சி தந்தார் என்பது மிகவும் ஆச்சரியம்.

ஜூல் ஶ்ரீஆஞ்சநேயர்

இந்த க்ஷேத்திரத்திலுள்ள ஶ்ரீஆஞ்சநேயர் மிக கம்பீரமாக நீண்டு நெடுத்துள்ளார் [மகாகாய:]. மேற்கு நோக்கியுள்ள இவர் தெற்கு நோக்கி நடப்பதுப் போல் இருக்கிறார். தூக்கிய வலது திருக்கரத்தால் பக்தர்களுக்கு ’அபயம்’ அளிக்கிறார். இடது திருக்கரம் தெய்வீக மலரான சௌகந்திகா புஷ்பத்தின் தண்டை பிடித்து, இடுப்பில் அரவணைத்துள்ளது. மலர் மேலே தெரிகிறது. குண்டலதாரியாக இருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் உயர்ந்து நுனி சற்றே வளைந்துள்ளது. ஶ்ரீவியாச ராஜாவின் பிரதிஷ்டைகளில் காண்பது போல், இவருக்கு இங்கு வாலில் மணியில்லை. அழகிய அலை போல் காற்றில் அசைந்தாடும் தலை கேசம் சிறிய முடிச்சிட்டு இருக்கிறார், தோள்களில் அவை கவிழ்ந்திருக்கும் அழகே தனி. திருக்கரங்களில் கேயூரமும் கங்கணமும் அணிந்துள்ளார். திருப்பாதங்களில் தண்டை அணிந்துள்ளார். அவரது கண்டங்களை பல விதமான மாலைகள் அலங்கரிக்கின்றன. அவரது மீசை அவர் மஹாவீரர் என்பது பறைசாற்றுகிறது. அவரின் கண்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. கண்கள் காருண்யத்தையும் கருணையையும் ஒரே சமயத்தில் அள்ளி கொடுக்கிறது.

பகவானுக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பார்த்தால், அவர் உடலில் இருக்கும் ரோமங்களும் தெரியும்.

பூஜைகள்

தினசரி பூஜைகளை தவிர நவராத்திரியின் பொழுது விசேட பூஜைகள் நடத்தப்படுகிறது. ஶ்ரீஹனுமத் ஜெயந்தி மற்றும் மாத்வ நவமியின் போது விசேடமாக உத்ஸவங்கள் நடத்தப்படுகின்றன.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஜூல் ஶ்ரீமுக்ய ப்ராணா திருக்கோயில், கடப்பா"

 

அனுபவம்
இந்த பழமையான திருக்கோயிலுக்கு வந்து ஶ்ரீஜூல் ஆஞ்சநேயரை தரிசித்தால், பக்தர்கள் மனம் ஆனந்தத்தில் ஆடும், மகிழ்ச்சியில் பொங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+