மன்னார்குடியிலிருந்து எட்டு கி.மீ., நீடாமங்கலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் மன்னார்குடி கும்பகோணம் வழியில் இருக்கும் மிகவும் அமைதியான அருமையான கிராமம் பூவனூர். இக்கிராமத்தில் தனித்தன்மை வாய்ந்த அருமையான கோயில் ஶ்ரீ ஆஞ்சநேயருக்காக உள்ளது. ஶ்ரீ ராமநாமத்தின் மகிமையை எல்லோரும் புரியும் வகையில் எடுத்துரைத்த ஶ்ரீ பகவன்நாமா போதேந்திரர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயர் இவர்.
காஞ்சிபுரத்திலுள்ள மண்டல மிஷ்ரா அக்கிரஹாரத்தில், திரு கேசவ பாண்டுரங்கன் சுகுணா தம்பதிகளுக்கு புதல்வராக அவதரித்தவர். ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ ஶ்ரீ விஸ்வதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள் [ஶ்ரீ ஆத்ம போதர்] அவர்களின் ஆசியால் இத்தம்பதிகளுக்கு இத்தவ புதல்வர் பிறந்தார். புருஷோத்தமன் என்று பெயரிட்டு உபநயனம் செய்வித்த பிறகு வேத சாஸ்த்திரம் படிக்க காஞ்சி மடத்திற்கு அனுப்பபட்டார். பதினெட்டு வயதில் படிப்பை முடித்துக்கொண்டவர் "ஆத்ம வித்யா உபாஸனை" உபதேசம் தன் ஆசாரியரிடமிருந்தே தெரிந்து தெளிவு பெற இச்சைக்கொண்டார். ஆசாரியாள் அப்பொழுது காசி யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஞான தாகம் கொண்ட புருஷோத்தமன் தனது ஆசாரியாரை காசிபுரியிலேயே சந்திக்க முடிவு செய்தார். இதன் பொருட்டு உடன் படித்த மாணவன் ஞானசேகரனுடன் காசிக்கு பயணமானார்.
அந்நாட்களில் காசி யாத்திரை என்பது மிகவும் கடினம், சென்று வருவதை புனர்ஜன்மமாகவே கருதினார்கள். நண்பர்கள் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டனர். வழியில் யாருக்காவது ஏதாவது நடந்து விட்டால், மற்றவர் அவருக்கு காரியம் செய்துவிட்டு தன்னை கங்கையில் சேர்பித்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. செல்லும் வழியில் ஞானசேகரன் இயற்கை எய்தினார். புருஷோத்தமன் அவருக்கான ஈம கார்யங்களை செய்து விட்டு காசிபுரிக்கு சென்றார்.
காசிபுரியை அடைந்து ஆசாரியரை சந்தித்து, நடந்தவை எல்லாவற்றையும் கூறினார். தனது உடலை கங்கையில் சமர்பிக்க உத்திரவு நாடி நின்றார். கடவுளின் சித்தம் அதுவன்று, சற்றே வித்யாசமானது. ஆசாரியார் அவர்கள் புருஷோத்தமனிடம் ’சந்யாசம்’ என்பது மறு பிறவி என்பதை எடுத்துரைத்தார். அதனால் அவர் சந்யாசம் எடுத்துக் கொள்வதின் மூலம் சமூகத்திற்கு சேவையும் செய்ய முடியும் தனது நண்பனுக்கு கொடுத்த வாக்கையும் காக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார். இப்படியே ஶ்ரீ ஆசார்யரிடமிருந்து ஞான உபதேசம் பெற்று "போதேந்திர ஸரஸ்வதி" என்ற திருநாமத்துடன் சந்யாச ஆஸ்ரமத்தை ஏற்றார் புருஷோத்தமன்.
காஞ்சி மடத்திற்கு ஶ்ரீ போதேந்திரர், அவரது ஆசாரியர் ஶ்ரீவிஸ்வதிகேந்திர சரஸ்வதிக்கு பிறகு பொருப்பேற்றார். ஶ்ரீ போதேந்திரர் மடத்திற்கு தலைமை பொருப்பில் இருந்தாலும், அவர்கள் ராம நாமம் ஜபிப்பதின் மூலமாகவே ஒருவர் மோக்ஷம் அடைய முடியும் என்பதில் தீவீர நம்பிக்கைக் கொண்டிருந்தார். ராமநாம மகிமையை மக்களுக்கு எடுத்து செல்ல நினைத்தவருக்கு மடத்தின் பொருப்பு சுமையாக இருந்ததாக நினைத்தார். அதனால் மடத்தை தனது வாரிசாக தேர்ந்தெடுத்த ஶ்ரீ ஶ்ரீ அத்வைதாத்ம பிரகாச ஸரஸ்வதி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு முழு மூச்சாக பகவன்நாம பிரசாரத்தில் ஈடுப்பட்டார். ஶ்ரீ காஞ்சி மடத்தினை இதே பெயருடன் பல ஆசாரியர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் இவர் "பகவன்நாமா போதேந்திரர்" என்று அழைக்கப்பட்டார். 1692ஆம் ஆண்டு அவர் கோவிந்தபுரம் என்னும் க்ஷேத்திரத்தில் முக்தி அடைந்தார். கோவிந்தபுரம் திருவிடைமருதூருக்கும் கும்பகோணத்திற்கும் அருகில் உள்ள க்ஷேத்திரம். அமைதியான இரவு வேளையில் கோவிந்தபுரத்தில் உள்ள அவரது அதிஷ்டானத்தில், இன்றும் ராம நாமம் கேட்பது உண்மை.
பூவனூர், மன்னார்குடியிலிருந்து எட்டு கி.மீ., நீடாமங்கலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் மன்னார்குடி கும்பகோணம் வழியில் இருக்கிறது. பூத்து குலுங்கும் புன்னை வனமாக இவ்விடம் இருந்ததால் "புன்னை+பூ+வன+ஊர்" என்று பெயர் வந்தது. நாளடைவில் பூவனூர் என்றாயிற்று. காவிரி ஆற்றின் கிளையான வெண்ணி என்றழைக்கப்படும் வெண்ணாறு, அதன் கிளை ஆறு பாமினியாற்றங்கரையில் உள்ளது.
"பூவனூர் புகுவார் வினை போகுமே" என்று அப்பர் சுவாமிகளால் தேவார பாடல் பெற்ற தலம் இது. இந்த தலத்தின் இறைவனை திருஞானசம்பந்தர் அவர்களும் பாடியுள்ளார். ஶ்ரீ புஷ்பவனேஸ்வரர் என்றும் ஶ்ரீ சதுரங்க வல்லபர் என்பதும் தலத்தின் இறைவனின் பெயர். மற்ற தலங்களில் இல்லாத விசேடமாக இத்தலத்தில் இறைவி ஶ்ரீ கற்பகவல்லி தாயாராகவும், ஶ்ரீ ராஜராஜேஸ்வரியாகவும் அருள்பாலிக்கிறார். கொடி மரத்திற்கு அருகாமையில் ஶ்ரீ சாமுண்டீஸ்வரிக்கு தனி சன்னிதி இருக்கிறது. விஷ கடியின் வீர்யம் இறங்க இத்தலத்தில் பிராத்தனை செய்வது விசேடமாக கருதப்படுகிறது.
புன்னை பூ வனமான இத்தலத்தில் அழகிய பெரிய குளம் ஒன்று உள்ளது. சிவப்பு தாமரை பூக்கள் நிறைந்து காணப்படும் இதனை ’செங்குளம்" என்று அழைப்பார்கள். இக்குளத்தின் மேற்கு கரையில் மிக பெரிய புத்து ஒன்று இருந்தது. புத்தின் அருகில் ஶ்ரீஜடாமுடீஸ்வரரும் அவரது சீடர்களுடன் இருந்தார். கண்ணுக்கு புலப்படாத இவரின் இருப்பு புத்தின் அருகாமையில் சென்றால் உணரப்படும். அந்த எறும்பு புத்தின் அடியில் இருக்கும் சாலிகிராமத்தினாலான ஶ்ரீராம, சீதா, லக்மண, ஆஞ்சநேய விக்கிரகங்களை ஶ்ரீஜடாமுடீஸ்வரர் காவந்து செய்து வருகிறார் என்பது அப்பொழுது யாருக்கும் விளங்காத உண்மை.
ஶ்ரீ போதேந்திர சுவாமிகளின் ராமநாம சித்தாந்தம் பிரபலம். ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஜகத்குரு ஶ்ரீ போதேந்திர சுவாமிகள் இருந்த சமயம் பூவனூர் அருகில் ஒரு கிராமத்தில் முகாமிட்டுருந்தார். அவருக்கு முகாமில் ஶ்ரீராமரின் தெய்விக கட்டளை ஒன்று கிடைத்தது. அவருக்காக தான் காத்திருப்பதாகவும் தனக்கு கோயில் கட்டவும் உத்திரவும், தான் இருக்கும் இடத்திற்கான அடையாளங்களையும் கூறினார்.
ஸ்ரீ ராமரின் தெய்வீக விழி நடத்தலின் கீழ் ஸ்ரீ போதீந்திர ஸ்வாமிகளும் அவரது சீடர்களும் பூவனூருவுக்கு வந்தனர். ஶ்ரீ ஆசாரியார் அவர்கள் செங்குளத்தையும் அதன் மேற்கு கரையில் உள்ள எறும்பு புத்தையும் அதனை ஶ்ரீஜடாமுடீஸ்வர் காவல்காப்பதையும் கண்டார். ஆனால் ஶ்ரீராமரின் சாலிகிராம விக்ரகம் எங்குள்ளது என்பதை காணமுடியவில்லை. அவர் தனது முகாமிற்கே திரும்பினார். அன்று இரவே ஶ்ரீஜடாமுடீஸ்வரர் அவரது கனவில் வந்து ஶ்ரீராமரின் கட்டளைக்கு இனங்க எறும்பு புத்தின் கீழ் தன்னால் பாதுகாக்க படும் விக்ரகங்களை வெளி கொண்டு வந்து ஶ்ரீராமருக்கு கோயில் கட்டும் படி பணிந்தார்.
ஶ்ரீஜடாமுடீஸ்வரர் தனது குரு ஶ்ரீராமர் என்றும், ஶ்ரீராமருக்கு கட்டும் கோயிலின் வளாகத்திலேயெ தன்னையும் பிரதிஷ்டிக்க வேண்டும் என்றும், தனது குருவாகிய ஶ்ரீராமருக்கு பூஜைகள் முடிந்ததும், தன்னையும் ஆதாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தெய்வ கட்டளையின் படி ஶ்ரீ ஆசாரியார் அவர்கள் பூவனூருக்கு மறுநாள் விஜயம் செய்தார். செங்குளத்தின் மேற்கு கரையில் இருந்த எறும்பு புத்தின் கீழிலிருந்து சாலிகிராமத்தினால் ஆன ஶ்ரீகோதண்டராமர், ஶ்ரீசீதா தேவி, ஶ்ரீலக்ஷ்மணர் மற்றும் ஶ்ரீஆஞ்சநேயர் விக்ரஹங்கள் எடுக்கப் பட்டன. ஶ்ரீகோதண்டராமர், ஶ்ரீசீதா தேவி, ஶ்ரீலக்ஷ்மணர் ஆகியோருக்கு செங்குளத்தை நோக்கிய வண்ணம் தெற்கு நோக்கி திருக்கோயில் கட்டப்பட்டது. மற்றும் ஶ்ரீஜடாமுடீஸ்வரரையும் அதே வளாகத்தில் ஆவாஹனம் செய்தார். ஶ்ரீஜடாமுடீஸ்வரர் உருவமற்றவர் என்பதால் அவருடைய சாந்தித்யம் இக்கோயில் வளாகத்தில் உணரப்படும்.
செங்குளக்கரையில் எந்த இடத்திலிருந்து சாலிகிராம விக்ரஹங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் ஶ்ரீஆஞ்சநேயரை ஆசார்யார் அவர்கள் பிரதிஷ்டை செய்து அவ்விடத்தின் புனித தன்மையை பாதுகாத்தார். பின்பு திருக்கோயில் கட்டப்பட்டது.
இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீ ஆஞ்சநேயர் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் உள்ளார். லாகவமாக நின்ற நிலையில் நேற் நோக்கி ஆஞ்சநேயர் உள்ளார். இரு கால்களும் சுலபமாக பதிந்துள்ள நிலையில் சற்றே முன் நோக்கி வளைந்து நிற்கிறது இடது கால். இரு கமல பாதங்களிலும் தண்டை, நூபூரம் முதலிய அணிகலங்கள் உள்ளன. கூப்பிய இரு கரங்களும் தன் இதயத்திற்கு நேர் பிடித்து தனது ஆசானை வணங்குகிறார். வார்த்தையில் அணிவகுக்க முடியாத அவரழகை நேரில் காண வேண்டும். அவரின் இருப்பை நாம் அங்கு உணர முடியும்.
இத்திருக்கோயில் பல விசயங்களில் மேன்மையானது. முதலாவதாக பல ஆண்டுகள் ஶ்ரீராமருடன் தானும் தவமிருந்து வெளிவந்த இடத்திலேயே கோயில் கொண்டுள்ளது. இரண்டாவதாக ஶ்ரீராம நாம பெருமையை நமக்கு உணர்த்திய மகான் ஶ்ரீபோதேந்திரர் ஶ்ரீராம நாம பெருமையை எல்லோருக்கும் உணர்த்திய ஶ்ரீஆஞ்சநேயருக்காக கட்டிய கோயில். மூன்றாவதாக ஶ்ரீஆஞ்சநேயர் சாலிகிராமத்தில் வடிக்கப்பட்டவர். நான்காவதாக செந்தாமரை குளக்கரையில் அமைந்துள்ளது. ஐந்தாவதாக ஶ்ரீஆஞ்சநேயருக்கு என்று அமைக்கப்பட்ட பழமையான தனிக்கோயில்
அனுபவம்
இத்திருதலத்திற்கு வாருங்கள், ஆஞ்சநேயரின் முன் அமர்ந்து தியானம்
செய்யுங்கள். தாங்களை அறியாமலேயே அவருடைய கமல திருப்பாதங்கள் தாங்கள் கண் முன்பு தோன்றுவதை உணர்வீர்கள்.
ஶ்ரீராமரின் பெயரில் இருந்த தாங்கள் பக்தி மேம்படுவதை உணர்வீர்கள். தார்மீகமான கார்யங்களை செய்ய மேலும் உருதி பூண்டு
திரும்புவீர்கள்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு மே 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020