home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

மாருதியின் மஹத்துவம்

 

ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ மாஹா முனிவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்


(அனந்த ஸ்ரீ விபூஷித ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி வரிஷ்ட ஸ்வாமி ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதீஜீ மஹாராஜ் கா ப்ரஸாதம்)

ஸ்ரீமத் ராமாயணம் மிகவும் மஹிமை பொருந்திய ஒரு கிரந்தம். நடந்த விருந்தாந்தத்தை நடந்தபடியே எடுத்துச் சொல்லுகின்றது. இதிஹாஸம் என்றால் “இப்படித்தான் நடந்தது” என்று அர்த்தம்.

அது மநுஷ்ய ஜன்மா எடுத்தவன் செய்ய வேண்டிய கடமைகளை தர்மங்களை -தர்ம சாஸ்திரம் போல நடைமுறையில் எடுத்துக்காட்டுகின்ற உயர்ந்த க்ரந்தம். அதில் வருகின்ற கதா பாத்திரங்கள் -லட்சுமணன் பரதன் சத்ருக்நன் விச்வாமித்ரர் -ஸுக்ரீவன் - எல்லாருமே அவரவர் கடமைகளை -சரிவர அனுஷ்டித்து -ஆதர்ச புருஷர்கள் ஆனார்கள்.

ஆனாலும் ஸ்ரீராமன், ஸீதாதேவி இவர்களைப் போல ஹனுமானும் ராமாயணத்தில் பிரதானமான கதா பாத்திரமாகப் பளிச் சென்று தெரிகிறார். அஞ்ஜநா தேவியின் குமாரன் ஆஞ்ஜநேயன். மருத் என்றால் வாயு பகவான். அவருடைய குமாரன் மாருதி.

ஹனுமானுக்கு சரீரபலம் மாத்திரம் அல்ல - புத்தியும் கூர்மையானது - நேர்மையானது. பெரிய பயில்வான்களைப் போல -உடம்பு மட்டும் திடமாக -வீரியத்தோடு வளர்ந்திருந்தால் யுத்தங்களில் பராக்ரமத்தைக் காட்டி ஜெயித்திருக்க முடியும். ஆனால் உலகத்திலே நடக்கின்ற மற்ற எல்லாக் காரியங்களிலும் ராமாஜ்ஞையாலே ஏற்பட்ட கார்யங்களிலும் -ஹனுமான் புத்தி சாதுர்யத்தோடு புகுந்து ஸமயோசிதமாக பேசி நடந்து கொண்டு எல்லாவற்றையும் நல்ல படியாக சாதித்திருக்கிறார். தனியாக கொடுங்கோல் ராவண ராஜ்யத்தில் புகுந்தார். ஸீதைக்கு நம்பிக்கையூட்டி தைரியத்தையளித்தார். ராவணனுக்கு "ஸீதா மாதாவை என் பிரபுவிடம் ஸமர்ப்பித்து விட்டு பிழைத்துப்போ” என்று பவ்வியமாகவும் திடமாகவும் எடுத்துக்கூறினார். எத்தனைக்கெத்தனை வீரதீரனாக ராம கார்யங்களை சாதித்தாலும் -பெரிய பர்வதங்களையே புரட்டி எடுத்து கொண்டு வரக்கூடிய தோள் வலிமை இருந்ததோ அத்தனைக்கத்தனை பிரபுவின் ஸந்நிதியில் பய பக்தியோடு கைகட்டி வாய் புதைத்து ரொம்ப விநயத்தோடு ஸேவை செய்வதைத்தான் படங்களில் நாம் கண்ணார ஸேவிக்கிறோம். ஹநுமான் இப்படி சரீரத்தினாலும் மனஸ்ஸினாலும் கபடமில்லாமல் ஸேவையே லட்சியமாக -கைங்கர்யத்தில் ஈடுபட்டார். அப்பேற்பட்ட கொஞ்சம் கூட சுயநலமில்லாத ஹனுமானின் ஸேவைக்கு ஈடாக ஸன்மானம் செய்ய முடியாமல் ராமன் ஏழையாகி விட்டார்.

பரதனுக்கு தனக்கே சொந்தமான அயோத்யா ராஜ்யம் -சுக்ரீவனுக்கு வானர ராஜ்யம்-விபீஷணனுக்கு லங்கா ராஜ்ய மெல்லாம் வாரி வழங்கின பிரபுவுக்கு ஹநுமானின் ஸேவைக்கு ஈடான ஸன்மானம் உலகத்திலே ஒன்றுமே கிடையாது என்று தோன்றியது. தன்னையே ஹநுமானுககு அர்ப்பணம் செய்து அவரை மார்போடு அணைத்து ஆலிங்கனம் செய்து கொண்டார்.

இதிலேயிருந்து என்ன தெரிகிறதென்றால் எவன் ஒருவன் கொஞ்சம் கூட- தனக்கு இந்த காரியத்தினால் என்ன கிடைக்கும்? -என்பதை நினைக்காமல் ‘‘தேவைப்பட்டவருக்கு சகாயம் செய்கின்ற ஸந்தர்ப்பம் கிடைக்கின்றதே, அதுவே பாக்கியம்’’ என்று நினைக்கிறானோ அவனுக்கு -பரமாத்மா தன்னையே கொடுத்துவிடுகிறார். பரமாத்மா தன்னையே கொடுத்து விடுகிறார் என்றால் என்ன அர்த்தம்? அந்த ஜீவனுக்கு உபநிஷத்தில் சொல்லப்படுகின்ற ஆத்மஸாக்ஷாத்காரம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் தான் ஹநுமான் அதற்குப் பிறகு எப்பொழுது பார்த்தாலும் ராமபாத சேவை செய்து கொண்டு ராம நாமத்தில் ஆனந்தமாக சிரஞ்ஜீவியாக இன்றைக்கு கூட ப்ரத்யக்ஷமாக இருக்கிறார். தன்னை அண்டியவர்களுக்கு வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்.

ஸாரமென்ன? என்றால் ராம நாம ஜபத்தினுடைய பலம் கொண்டு -ஸீதா தேவியின் துக்கத்தைத் தீர்த்தார். ராமனுடைய பெருமையை உலகெல்லாம் கொண்டாடச் செய்தார். ராம நாம பலம் கொண்டு கடலைத் தாண்டினார். வாநரக் கூட்டத்திற்கு ராம நாம உபதேசம் செய்து பர்வதங்களைப் புரட்டிக் கொண்டு வருகின்ற பலத்தை வ்ருத்தி பண்ணினார்.

இதைத்தான் சங்கர பகவத் பாதாச்சார்யாள் ஹநுமத் பஞ்சரத்னம் என்ற ஸ்தோத்திரத்தில் குறிப்பாக எடுத்துக்காட்டுகிறார். ஸீதைக்கு ராம கதை சொல்லி அவளுடைய மனஸ்ஸில் இருந்த தாபத்தையெல்லாம் தீர்த்தார். தன்னுடைய ஸேவையினால் ராமனுடைய பெருமையை லோகம் பூராவும் தெரியப்பண்ணினார். கொடுங்கோல் ராவணனுடைய யசஸ்ஸெல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழித்தார். அந்த ஹநுமானின் மங்கள ஸ்வரூபம் எனக்கு தர்சனம் தரட்டும் என்று வேண்டுகிறார்.

தூரீகருத ஸீதார்த்தி:
ப்ரகடீக்ருத ராம வைபவஸ்பூர்த்தி:|
தாரித த சமுக கீர்த்தி :
புரதோ மம பாது ஹநுமதோ மூர்த்தி:॥

இந்த மஹத்தான ஸம்பவங்களை நினைத்துப் பார்த்தால் ராம நாம கீர்த்தனத்தினுடைய பெருமை ஸ்பஷ்டமாகத் தெரியும்.

ஸாதாரணமாக எல்லாருமே எந்த தெய்வத்தை உபாஸிக்கிறார்களோ -அந்த தெய்வத்தின் நாமத்தைத்தான் ஜபித்திக் கொண்டே இருப்பார்கள். பூஜையெல்லாம் அந்த தெய்வத்திற்குத்தான் செய்வார்கள். அந்த தெய்வத்தின் அநுக்கிரஹத்தை வேண்டுவார்கள்.

ஆனால் ஹநுமானுடைய வழி வேறு. ஹனுமானுக்கு ஸ்ரீராம நாமஜபத்தையோ கீர்த்தனையையோ தவிர வேறென்றும் பிடிக்காது. அவருக்கு எல்லாமே ராமன் தான். லங்கையில் ராம நாம கோஷம் செய்தே ராவணனுடைய பெரிய புகழை மறக்கச் செய்துவிட்டார்.

மஹாத்மாவான ஹநுமான் எப்போதும் நமக்கும் பிரஸந்நமாக இருக்கட்டும் என்று தான் கோரிக்கை. நமக்கும் அது போல நல்லோர்கள் எல்லாருமே ராம நாம ஜபம் செய்து -ஹனுமானுடைய க்ருபைக்குப் பாத்திரமாகட்டுமே. அவர்களுடைய ஜீவிதத்திலே நல்ல படியாக வாழட்டுமே என்று தான் கோரிக்கை.

லோகத்திலே -பணம் வேண்டுமானால் லட்சுமியை ஆராதிப்பார்கள். எடுத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் ஏழுமலையானை பிராத்திப்பார்கள் எடுத்த காரியம் தடை படாமலே இருக்க கணபதியை பிராத்தனை செய்வார்கள்.

ஆனால் -நாம எடுத்த காரியம் சரிவர நிறைவேற வேண்டுமானால் -நமக்கு அதற்குத்தகுந்த அறிவு இருக்க வேண்டும். உடம்பிலே பலம் இருக்க வேண்டும். ‘‘இவன் இந்த காரியத்தை சரியாகச் செய்வான்’’ -என்று தெரிந்தால் தான் நமக்கு நல்ல வேலை கிடைக்கும். அப்படிப்பட்ட யசஸ் இருக்க வேண்டும். செய்கிற காரியத்தில் தடை ஏற்பட்டால் அதற்காகச் சுணங்காமல் மறுபடியும் முயற்சி செய்ய மனோ தைரியம் இருக்க வேண்டும். கோழையாக இருக்க கூடாது. நல்ல ஆரோக்கியம் வேண்டும். ஸமயோசிதமாகப் பேசத் தெரிய வேண்டும். இத்தனையும் ராம நாம சொன்னால் ஹநுமானை நினைத்தால் - கை கூடும். அப்புறம் காரியஸித்தி கை மேலே. எல்லா தெய்வங்களும் கூட இருந்து சாதித்துக் கொடுக்குமே! வேறேன்ன வேண்டும்?

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா।
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமத் ஸ்மரணாத் பவேத்॥

(ஆனந்த ராமாயாணம் மனோஹர காண்டம் 13 வது ஸர்கம் 13 வது ச்லோகம்)

(கோரக்பூர் கீதா பிரஸ் என்ற தர்ம ஸ்தாபனம் பல்லாண்டுகளாக நடத்தி வருகின்ற “கல்யாண்” என்ற மாதாந்திர ஆஸ்திகப் பத்திரிகையின் நிறுவனர்கள் ஆண்டுதோறும் பல நூறு பக்கங்கள் கொண்ட ஒரு மலரையும் வெளியிடுகின்றனர். அதன் 1975ஆண்டு மலராக வெளியிடப்பட்ட “ஹனுமான் அங்க்” பதிப்பிற்கு ஸ்ரீ காஞ்சீ மஹாஸ்வாமிகள் -“ஸ்ரீ மாருதியின் மஹத்துவம்” என்ற தலைப்பில் -ஒரு வியாசம் அருளியிருக்கிறார்கள். ஹிந்தியில்அமைந்த அதனுடைய தமிழ் வடிவம்)

(ஶ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேய எழுதி பெங்களூர் ஶ்ரீமஹா பெரியவாள் டிரஸ்ட் வெளியீடான “ஜய ஜய ஹநுமான் பாகம் 1”லிருந்து)

ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.

 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+