home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸீதாராமருக்கு பக்கபலம் - ஹநுமார்

 

ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ மாஹா முனிவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்


பலமில்லாதவருக்கு பலம் ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி தான்: "நிர்பல் கே பல் ராம்". ஆபத்து வந்து சாய்கிற ஸமயத்தில் யார் வந்து தாங்கிக்கொண்டு பலம் தர முடியும்? ராமன்தான்!"ஆபதாம் அபஹர்த்தாரம்" என்கிறோம். "அக்ரத ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ" - அதாவது, நமக்கு முன்னேயும் பின்னேயும் இரண்டு பக்கங்களிலும் நம்மைச் சூழ்ந்து கொண்டு ஸதாவும் நம்மை ரக்ஷிக்கிற மஹாபலவான் யார்? அந்த ராமன்தான். நமக்குத் துளி ஆபத்து வருகிறதென்றாலும், அம்பை விடுவதற்கு ஸித்தமாகக் கோதண்டத்தின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்தபடி நம்மைச் சூழ்ந்திருக்கிறான். அவனை விட்டு விலகாத லக்ஷ்மணனும் அவனோடேயே இருந்து கொண்டிருப்பான். - "ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ ". ஆனால் இப்படிப்பட்ட புருஷ ச்ரேஷ்டர், வீரராகவன், விஜயராகவன் என்றே பேர் பெற்ற மஹா வீரர் ஆஞ்ஜநேயரைத் தமக்குப் பக்கபலமாகக் கொண்டதால் தான் அவதார கார்யத்தைப் பண்ண முடிந்ததாகக் காட்டியிருக்கிறார்!

மநுஷ வேஷம் ப்ரமாதமாய்ப் போட்டவர் அவர். ஸீதையை ராவணன் கொண்டு போய் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியாத மாதிரியே நடித்தார். சொல்லி முடியாத துக்கப்பட்டார். அப்போது அவள் இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி அவருக்கு உத்ஸாஹமும், தெம்பும், பலமும் தந்தது யார் என்றால் ஆஞ்ஜநேய ஸ்வாமிதான்.

ஸீதையைப் பிரிந்து இவர் பட்ட துக்கத்தைவிட இவரைப் பிரிந்து ஸீதை பட்ட துக்கம் கோடி மடங்கு. ப்ரிய பத்னி பக்கத்தில் இல்லையே, தன்னைப் பிரிந்து அவள் கஷ்டப்படுவாளே என்ற கஷ்டம் மட்டுந்தான் ராமருக்கு. ஆனால் அவளுக்கோ இதோடு ராக்ஷஸ ராஜ்யத்தில் மஹா காமுகனால் சிறை வைக்கப்பட்டிருப்பதான மஹா கஷ்டமும் சேர்ந்திருந்தது. 'அபலா'என்றே ஸ்திரீக்குப் பெயர் ஸாக்ஷாத் ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மி ஸீதையாக வந்து அபலையிலும் அபலையாக அசோகவனத்தில் படாத கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டத்துக்கு முடிவு ப்ராணனை விடுவதுதான் என்று சுருக்குப் போட்டுக்கொள்ள இருந்தபோது அவளுக்கு உத்ஸாஹத்தை, தெம்பை, பலத்தைத் தந்தது - ஆஞ்ஜநேயர்தான்.

அவர் செய்த அரும் செயல்கள் ஒன்றில்லை, இரண்டில்லை. ஆனால் இதற்கெல்லாம் சிகரமாக எதைச் சொல்லலாமென்றால் இந்த லோகம் முழுவதற்கும் ஸ்ரீயைக் கொடுத்து, ஸெளபாக்யத்தைக் கொடுத்து அநுக்ரஹிக்கும் தாயார் மனம் குலைந்து மட்கிக் கிடந்தபோது ஆஞ்ஜநேய ஸ்வாமி காய்ந்த பயிருக்கு மழையாகப் போய் அவளுக்கு உயிரும் உத்ஸாஹமும் தந்தாரே அதுதான்."ஜானகீ சோக நாசநம்" என்று இதைத்தான் சிறப்பித்துச் சொல்கிறோம்.

அஞ்ஜாநாநந்தனம் வீரம் ஜானகீ சோக நாசநம்

அஞ்ஜனை என்று யாரோ ஒரு வாநர ஸ்த்ரீக்குப் புத்ரராய் அவதாரம் பண்ணி அவளுக்கு ஆனந்தம் கொடுத்தார். இது பெரிதில்லை. எந்தப் பிள்ளை, அவன் என்ன துஷ்டத்தனம் செய்பவனாயிருந்தாலும், அம்மாவுக்கு மாத்திரம் ஆனந்தம் தருகிறவனாகத்தான் தோன்றுவான். அதனால்தான் பிள்ளையை 'நந்தனன்'என்பது. தசரத நந்தனன், தேவகி நந்தனன் மாதிரி அஞ்ஜநா நந்தனன். இது பெரிசில்லை. அந்த அம்மாவுக்கு மாத்திரமில்லாமல் லோகஜனனிக்கு, லோகமுள்ளளவும் வரப்போகிற அத்தனை அம்மாகளுக்கும் ஐடியலாக இருக்கும் ஸீதம்மாவுக்கு மகத்தான சோகம் ஏற்பட்டபோது அதைப் போக்கினாரே, அதற்குத்தான் நாம் அவருக்கு நமஸ்காரம் பண்ணிக் கொண்டேயிருக்கணும்.

ஸீதைக்குள் சோகாக்னி ஜ்வாலை விட்டுக் கொண்டிருந்தது. அவளுடைய ஜீவனை வற்றப் பண்ணிக் கொண்டிருந்தது. ராவணன் ஹநுமார் வாலில் நெருப்பு வைத்ததாகச் சொல்கிறார்களே, உண்மையில் அந்த நெருப்பாலா அவர் லங்கா தஹனம் செய்தார்? இல்லவே இல்லை. அந்த நெருப்புக்குள்ளேயே இன்னொரு நெருப்பை அவர் சேர்த்துக்கொண்டு இதனால்தான் ஊரை எரித்தார். ஸீதையின் சோகாக்னிதான் அது.

ய : சோக வந்ஹிம் ஜநாகாத்மஜாயா :
ஆதாய தேநைவ ததாஹ லங்காம்

"ஜநாகாத்மஜா"என்றால் ஜானகி. "சோக வந்ஹி"என்றால் துயரமாகிற அக்னி. அவள் இருந்தது அசோக வனம்;அவளுக்குள் இருந்தது சோக வந்ஹி!"தேநைவ"- அதனாலேயே, இந்த சோகாக்னியாலேயே;"லங்காம் ததாஹ"- லங்கையை எரித்தார்.

'ஆஞ்ஜநேயருக்கு வாலில் நெருப்பை வைத்தும் கொஞ்சங்கூட அவரை அது சுடவில்லை. ஸீதையின் அநுக்ரஹத்தால் அப்படியிருந்தது'என்று மாத்திரம் நமக்குத் தெரியும். ஆனால் ஊரையெல்லாம் எரிக்கிற பெரிய சக்தி அதற்கு வந்ததே அவளுடைய சோகத்தைத் தான் ராவணன் நெருப்பு என்ற ரூபத்தில் வைத்ததால் தான்!ஆஞ்ஜநேயர் வாலில் நெருப்பு வைக்கணும் என்ற எண்ணம் அவனுக்கு ஏன் வந்தது?அவனுக்கு அந்த எண்ணம் வருகிற ஸமயத்தில் ஸீதை அதற்கு மேலும் சோகாக்னியில் வாடினால் ப்ரபஞ்சமே தாங்காது என்ற கட்டம் வந்தது. அது எப்படியாவது வெளியே வந்து செலவாகும்படிச் செய்ய வேண்டும். அதை யாராவது தாங்கிக் கொண்டு வெளியிலே விட்டுவிட வேண்டும். யாரால் தாங்கமுடியும்?ஆஞ்ஜநேய ஸ்வாமியைத் தவிர யாராலும் முடியாது. இதனால்தான் அவரைத் தண்டிக்கணும் என்று ராவணனுக்குத் தோன்றினபோது ஈச்வர ஸங்கல்பத்தால், 'வாலில் நெருப்பு வைத்தாலென்ன?'என்று தோன்றிற்று. இப்படி ஆஞ்ஜநேயர் ஜநகாத்மஜாவின் சோக வந்ஹியை வாங்கிக் கொண்டே லங்கையை அதனால் தஹனம் செய்தார். அது ஸாதுக்களை, ஸஜ்ஜனங்களைக் கஷ்டப்படுத்தாமல் துஷ்டர்களை மட்டும் தண்டிக்கும்படிச் செய்தார்.

அந்த அக்னி அவளுடைய சோகமாயிருந்ததால் தான் அவளுடைய பதிக்குப் பரம் ப்ரியராக, பக்கபலமாக இருந்தவரைச் சுடாமல் அவருக்கு மாத்திரம் ஜில்லென்று இருந்தது.

ராமருக்கு ஆஞ்ஜநேயர் செய்த மஹா உபகாரம் ஸீதை இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துச் சொன்னது. ஸீதைக்கு அவர் செய்த மஹா உபகாரம் ராமர் எப்படியும் வந்து அவளை மீட்டுக்கொண்டு போவார் என்று அவள் உயிரைவிட இருந்த ஸமயத்தில் சொன்னது. இவ்வாறு இரண்டு பேரும் பலமே போனாற்போல இருந்தபோது பலம் தந்திருக்கிறார்.

ஆனால் இந்த இரண்டையும் அவர் எதைக்கொண்டு, எதன் பலத்தில் பண்ணினார்?
ராமநாம பலத்தினால்தான் பண்ணினார்!
அவர் ஸமுத்ரத்தைத் தாண்டிப் போனதால்தான் ஸீதையைக் கண்டுபிடிக்க முடிந்தது.
எப்படித் தாண்டினார்?
"ராம ராம"என்று சொல்லிக்கொண்டு அந்த நாமத்தின் சக்தியில்தான் தாண்டினார்.

ஸீதை ப்ராணனை விட இருந்த பொழுது அவளை எப்படிக் காப்பாற்றினார்?"அம்மா தாயே, உயிரை விடாதே!"என்று காலில் விழுந்தால்கூட அவளைத் தடுத்திருக்க முடியாதே! 'இதுவும் ராக்ஷஸ மாயை;ராவணன் செய்கிற சூது'என்றுதானே நினைத்திருப்பாள்?மாரீச மான் அநுபவத்துக்கு அப்புறம் அவளுக்கு எல்லாமே ராக்ஷஸ மாயையாய்த்தான் தெரிந்தது. அவளுக்கு அப்படித் தெரிந்தது என்பது ஆஞ்ஜநேயருக்கும் தெரிந்தது. (பரம சுத்த ப்ரம்மசர்யத்தால் ஸ்படிகம் மாதிரியாக ஆன அவருடைய மனஸில் யார் நினைப்பதும் பளிச்சென்று தெரிந்துவிடும்.) ஸீதை ப்ராண ஹானி செய்துகொள்ள இருந்த கட்டத்தில் என்ன செய்தார்? "ராம ராம"என்று நாமாவைத்தான் சொல்ல ஆரம்பித்தார். "ராம"என்றால், அதுவும் ஆஞ்ஜநேய ஸ்வாமியின் வாயால் சொன்னால், எந்த மாயையும் ஓடி விடாதா?அவளுடைய சோக வந்ஹியை நாமாம்ருதத்தைத் தெளித்துக் கொஞ்சம் சமனம் செய்தார். இப்படி அம்ருதத்தைத் தந்தவருக்கு அக்னியே ஜில்லென்றிருக்க அவள் அநுக்ரஹித்தாள்!

ஆஞ்ஜநேயரால்தான் தாங்கள் காப்பாற்றப் பட்டது போல் ராமரும் சீதையும் சொல்லிக் கொண்டார்கள். ஸீதையின் ப்ராணனை ரக்ஷித்துக் கொடுத்தது, ஸீதைக்கும் மேல் தமக்கு ப்ரியமான லக்ஷ்மணன் மூர்ச்சையாய் விழுந்தபோது ஸஞ்ஜீவி கொண்டுவந்து அவனை எழுப்பினது முதலானவற்றுக்காகத் தாம் ஆஞ்ஜநேயருக்குத் தீர்க்கமுடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே ராமர் எப்போதும் சொல்வார். "ஆஞ்ஜநேயருக்கு எப்படி என்ன ப்ரத்யுபகாரம் பண்ணுவோம், பண்ணுவோம்?" என்றே ஸீதைக்கும் ஸதா இருந்தது.

இரண்டு பேருமாகச் சேர்ந்து என்ன பண்ணினார்களென்றால்;
அயோத்திலே கோலாஹலமாகப் பட்டாபிஷேகம் ஆனவுடன், ராமர் பல பேருக்குப் பல பரிசு தரும்போது ஒரு முக்தாஹாரத்தை ஸீதைக்குப் போட்டார். அவள் அதைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, சுற்றியிருந்த அத்தனை பரிவாரங்களையும் பார்த்துவிட்டு ராமரையும் அர்த்த புஷ்டியோடு பார்த்தாள். இரண்டு பேரும் பரிபூர்ண ஐகமத்யம் (ஒரே சித்தம்) கொண்ட தம்பதி. அதனால் அவர்கள் மனஸுக்கு மாத்திரம் தெரிகிற மாதிரி ஆஞ்ஜநேயரை அந்தப் பெரிய ஸதஸிலே கொண்டாடுவதற்கு ஒரு ப்ளான் போட்டுக் கொண்டார்கள்.

ஸீதை ராமரைப் பார்த்த பார்வையாலேயே முக்தாஹாரத்தை அந்தப் பரிவாரத்திலே யாருக்குக் கொடுக்கலாம் என்பதற்கு அவருடைய அபிப்ராயத்தைக் கேட்டுவிட்டாள். உடனே ராமர், "பராக்ரமம், புத்தி, பணி எல்லாம் எவனுக்குப் பூர்ணமாக இருக்கிறதோ, அவனுக்கே கொடு"என்றார். பாராட்டிதழ் ('ஸைடேஷன்') படித்தவுடன் 'அவார்ட்' கொடுக்கிற மாதிரி, பேரைச் சொல்லாமலே ராமர் இப்படிச் சொன்னவுடன் ஸீதை மாலையை ஆஞ்ஜநேயருக்குக் கொடுத்துவிட்டாள்!

"ஹநுமானுக்குக் கொடு"என்று ராமர் நேராகச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் 'அவருக்கு மட்டுமென்ன ஸ்பெஷல் அவார்ட்?'என்று மற்றவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்னார் என்று பெர்ஸனலாகப் போகாமல், ஆப்ஜெக்டிவ்-ஆகப் பல உசந்த யோக்யதாம்சங்களைச் சொல்லி அவற்றை உடையவனுக்கு அவார்ட் கொடுத்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனால்தான் உத்தமமான யோக்யதை எல்லாம் ஹநுமாரொருத்தரிடமே பூர்ணமாக ரொம்பியிருந்ததால் ராமர் இப்படி ஸாமர்த்யமாகச் சொன்னது.

பட்டாபிஷேக கட்டத்திலே இப்படி ஆஞ்ஜநேயருக்கு இரண்டு பேருமாகச் செய்ததற்கு ஈடு எதுவும் இல்லை.

ஒரு பெரிய மலைக்கு மேலே சந்திரிகையில் தாவள்யமாயிருக்கும் ஒரு மேகம் படிந்தால் எப்படியிருக்குமோ அப்படி அந்த முத்து மாலை ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பெரிய சரீரத்திலே புரண்டது.

முதல் முதலாக அவரை ரிச்யமுக பர்வதத்தில் பார்த்தவுடனேயே ராமசந்திரமூர்த்தி, இவரால்தான் இனி ராமாயணம் நடந்தாக வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டார். அப்போது ஹநுமாரை ஸஹாயமாகப் பெற்றிருந்து ஸுக்ரீவன் பெண்டாட்டியை இழந்து வாலியிடம் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான். ராமர் இன்னார் என்று வேவு பார்த்து, அவர் நல்லவர், சக்தி உள்ளவர் என்று தெரிந்ததால் அவரைத் துணையாகக் கொண்டு வாலியை ஜயிக்க வேண்டும் என்பதற்குத்தான் ஹநுமாரை அவரிடம் அனுப்பியிருந்தான். இப்படிப்பட்ட நிலையில் ஸந்தித்தபோதிலும் ராமருக்கோ தனக்கே பலமாக இருக்கப் போவது இந்த ஹநுமார்தான் என்று தெரிந்துவிட்டது. அவரே ஈஸ்வரனாகயிருந்து பூர்வத்தில் பண்ணின ஸங்கல்பம்தானே இப்படியிப்படி இந்த ராமாயண நாடகம் நடக்க வேண்டுமென்று?

அதனால் இவர்களை யார் என்ன என்று ஆஞ்ஜேநேயர் விசாரித்த தினுஸிலேயே அவர் இவர் பெருமையை எடை போட்டு, "நவ வ்யாகரண பண்டிதன், சொல்லின செல்வன்" என்றெல்லாம் லக்ஷ்மணனிடம் ஏகமாகப் புகழ்கிறார். "ஏதோ வாக்குவன்மை படைத்தவன் தான் என்று நினைத்துவிடாதே! இவன் ஸர்வ வல்லமையும் படைத்தவன். இந்த லோகம் ஒரு தேர் என்றால் அதற்கு அச்சாக இருக்கிற ஆணி இவன்தான். இப்போது தெரியாவிட்டாலும் உனக்கே இதன் உண்மை நாள் தெரியும் பார்" என்கிறார்.

" ஆணியிவ்வுலகுக் கெல்லாம்..... பின்னர்க்
காணுதி மெய்ம்மை "

என்கிறார்.

அது ரிஷி சாபத்தால் ஹநுமார் தம் பலத்தை மறந்திருந்த ஸமயம். அதனால்தான் இவரைத் துணையாகக் கொண்டிருந்தும் ஸுக்ரீவன் ராஜ்யம், தாரம் எல்லாம் இழந்திருந்தது. 'சீக்கிரமே ஜாம்பவான் இவர் பலத்தை இவருக்கு நினைவுப்படுத்தி ரிஷி சாபம் போகும்படி செய்யப் போகிறார். அப்புறம் ஹநுமார் ஸாகர தரணம், லங்கா தஹனம் முதலான பெரிய காரியங்களைச் செய்யப் போகிறார்'என்பது ராமருக்குத் தெரியுமாதலால் "பின்னர் காணுதி மெய்ம்மை"- 'இவனுடைய மஹா ப்ரபாவத்தால் லோகமாகிய தேரையே நடத்திக்கொண்டு போகக் கூடியவன் என்கிற உண்மையை நீயே பின்னால் பார்ப்பாய்'என்று லக்ஷ்மணனுக்குச் சொல்கிறார்.

ராமாயணமே ஒரு லோகம் - ஸப்த காண்டமுடைய ஸப்த லோகமும்! இந்த ராமாயணத் தேர் ஓடாமல் நின்று போகிற ஸந்தர்பம் - ஸீதை காணாமல் போய், அவள் எங்கே இருக்கிறாள் என்றே ராமருக்குத் தெரியாமல் திரிந்து கொண்டிருக்கிற ஸந்தர்பம். அப்போது ஆஞ்ஜநேயரைப் பார்த்தவுடன் அவரை ராமர் தேருக்கு அச்சாணியாக முடுக்கிக் கொண்டுவிட்டார்! உடனே சர சர வென்று தேர் ஓட ஆரம்பிக்கிறது! பஹுகாலம் ஓய்ந்து கிடந்த ஸுக்ரீவன் வாலியிடம் சண்டைக்குக் கிளம்புவது, ராமர் வாலிவதம் செய்வது, வானரர்கள் சீதையைத் தேடுவது, கண்டு பிடிப்பது, ஸேதுபந்தனம், ராம ராவண யுத்தம், பட்டாபிஷேகம் என்று கிடுகிடுவென்று ஓட ஆரம்பித்துவிடுகிறது! இத்தனையிலும் பெரிய பங்கு ஹநுமாருக்குத்தான்!

அதுவரை, அதாவது ராமாயணத்தில் பேர் பாதி ஆகிறவரை, இவர் யாரென்றே தெரியாது. கிஷ்கிந்தா காண்டத்தில்தான் வருகிறார். உடனே இவர்தான் கதாநாயகருக்கும் மேலே என்பது போல் முக்யமாய் விடுகிறார்! அடுத்ததான ஸுந்தர காண்டம் முழுக்க இவர் பிரதாபமும், இவருடைய லீலையுமே! ராமாயணத்தில் ஸர்வ கார்ய ஸித்தி என்று ஸகலராலும் பாராயணம் செய்யப்படுவது எது என்றால் ராமருடைய பெருமைகள் தெரிகிற பாக்கி ஆறு காண்டமில்லை; ஆஞ்ஜநேய ப்ராபவமே விஷயமாயுள்ள ஸுந்தர காண்டம்தான்! அப்படி இவரைப் பார்த்தவுடனேயே "ராமாயணத் தேரை இனிமேல் நீயே கொண்டுபோ" என்று ராமர் கொடுத்து விட்டார். தம்முடைய நாமாவை அவர் மூலம் வெளியிட்டே ஸீதை உயிரை விடாமல் காப்பாற்றினார். தம்முடைய நாமாவினாலேயே அவர் பரம ஸுலபமாக ஸமுத்ரத்தைத் தாண்டச் செய்தார். தாமே லங்கைக்குப் போகிற போதோ கஷ்டப்பட்டு அணை கட்டிக்கொண்டு அதன்மேல் நடந்துதான் போனார்!

"தாம் செய்வதெல்லாம் ராமர் போட்ட பிச்சையே! ஸீதாதேவியின் அநுக்ரஹ லேசமே!" என்றுதான் ஆஞ்ஜநேயர் நினைத்தார். "ஸாகர தரணமும், லங்கா தஹனமும் தன் காரியமென்று லோகம் கொண்டாடுகிறதே! நிஜத்தில் அவருடைய நாமம் - தாரக நாமமல்லவா தரணம் பண்ணுவித்தது? அவளுடைய சோகமே அல்லவா தஹனம் பண்ணிற்று?" என்றே நினைத்தார். தங்கள் கார்யத்துக்கு நம்மையும் ப்ரயோஜனப்படுத்திக் கொண்டார்களே என்று ஸீதாராமர்களிடம் ஒரே நன்றி தீர்க்க முடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே நினைத்தார்.

நமக்கானால், நன்றி வாங்கிக் கொள்வதில் போட்டி!' நாம் பல பேருக்கு உபகரித்தோம். யாரும் ஸரியாக நமக்குத் திருப்பவில்லை' என்று அபிப்ராயம்! ஸீதா-ராமர்களுக்கும் ஆஞ்ஜநேயருக்குமோ பரஸ்பரம் மற்றவரால்தான் தங்களுக்கு பலம், அவருக்குத் தாங்கள் ப்ரத்யுபகாரமே பண்ணி முடியாது என்று அபிப்ராயம்.

இது ராமாயணத்திலே நமக்கு ஒரு பெரிய பாடம்.

மஹாபலம் பொருந்தின ஆஞ்ஜநேயர் அந்த பலத்துக்கெல்லாம் மூலம் ராமசந்திரமூர்த்தியே என்று, தமக்கு எத்தனை பலமோ அதைவிட அதிகம் பணிவுடன், விநயத்துடன் இருந்தார். பலமும் பணிவும் ஸாதாரணமாக நேரெதிராக இருப்பவை. இவரிடமோ இரண்டும் மாக்ஸிமமாக இருந்தன. நமக்கு பலமும் இல்லை; பணிவும் இல்லை. அவரைப் போல நல்ல கார்யங்களை ஸாதிப்பதற்கான பலத்தை நமக்குத் தந்து, ஆனால் அந்த பலத்தினால் அஹங்காரப்படாமல் அது ராமனின் பிரஸாதமே என்று உணர்ந்து அதை ராமார்ப்பணமே செய்யும் புத்தியை நமக்கெல்லாம் அவர் அநுக்ரஹிக்க வேண்டும்.

ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.

 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+