home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஆற்றல் அருளும் ஆஞ்சனேயர்

 

திரு.டி.எஸ். இராகவன்


அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம். முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி. அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன், ஆகவேதான் அவனைப் பற்றிய ஒரு சுலோகம்

அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத|
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ||

என்கிறது. பள்ளித் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களாகட்டும், மகளுக்கு மணம் பேசச்செல்லும் பெற்றோராகட்டும் வியாபார விருத்திக்குச் செல்லும் வணிகர்களாகட்டும், வழக்குகளில் வெற்றிக்காக வாதிடும் வக்கீல்களோ, கட்சிக்காரர்களோ யாராயிருந்தாலும் மேற்கண்ட இரண்டு வரிகளையும் சொல்லி அஞ்சனையின் மைந்தனை மனத்திலிருத்தி பணியில் முனைந்தால், பல முறை தோற்றிருந்தாலும், வெற்றி நிச்சயம், இம்முறை.

சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரும்? வெறும் சட்டியைச் சுரண்டினால் என்ன வரும்? இருப்பவன் தானே இல்லாதவனுக்குக் கொடுக்க முடியும்? அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும், நிச்சயம் கிடைக்கும். யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். அவனிடமில்லாத்து ஒன்றில்லை. ஆகவே அவனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

என உறுதியளிக்கிறது மற்றமொரு சுலோகம்.

புத்தியின் வலிமையும் அறிவின் கூர்மையும் மிகுந்தவன், அனுமன். தோல்வியின் தொடர்ச்சியில் மனம் கலங்கிய நிலையில் நம்மில் பலர், எதிலும் முடிவெடுக்காமல், எதைக் கண்டாலும் தடுமாறுகிறோம். இப்படித்தான் தடுமாறினான் சுக்ரீவன் என்கிற வானர வீரன், வாலியினால் விரட்டப்பட்டவன், நாட்டை இழந்தவன், மனைவியைப பறிகொடுத்தவன். ஓடி ஒளிந்து வாழ்கிறான். செய்வதறியாது செயல் இழந்து நின்றான். அவனுடனிருந்த நண்பர்களும் புத்திகலங்கி திகைத்து வாழ்ந்தார்கள். அப்பொழுது மனைவியை மாற்றான் கவர்ந்து செல்ல இல்லாளைத் தேடி அலைகின்ற, வில்லேந்திய வீரன் இராமன் இலக்குவனுடன் அங்கு வந்து சேர்ந்தான். புத்தி தடுமாறிய இராமன், கொடிகளையும், செடிகளையும், விலங்குகளையும் பறவைகளையும் கண்டு பிரலாபித்தான். யாரிடம் கேட்பது, எதைக் கேட்பது என்று புரியாமல் புலம்பி நின்றான். புத்திமான் அனுமன் மதி மயங்கிய மன்னர்கள் இருவரையும் இணைத்து, அவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படச் செய்தான். யோசனையுடன் இருவரும் வெற்றிக்கு வழி கோலி ஒப்பந்தம் செய்தார். இதற்கு அடிப்படை, ஒரே பகலில் கதிரவனிடமிருந்து ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்ற, அனுமான் என்கிற புத்திமான். புத்தி வளர்வதற்கு அவனடி பற்றுவோம்.

பலவானுக்கெல்லாம் பலவான் என்று நாம் நினைக்கும் போது பீமஸேனன்தான் நம்முன் வருவார். அந்த பீமனுக்கும் பெரிய பலவான் நம் கடவுள். பல ஆண்டுகளாக, ஏன் நூற்றாண்டுகளாக வானோங்கி நிற்கின்ற மலைச் சிகரங்களை சடுதியிலே, நெடியாலே உருட்டிப் புரட்டி விடுகின்ற பலம் காற்றிற்குத்தானே உண்டு? காற்றின் கடுமையான பதிப்புத் தானே புயல் என்பது? அந்தப் புயலை எதிர்த்து நிற்கும் வலிமை யாருக்குத் தான் உண்டு? இராம-இராவண யுத்தத்திற்கு ஈடு, இராம-இராவண யுத்தம்தான் என்று கூறுவார்கள். அவ்வளவு கடுமை. இராவணன் யுத்ததில் முதல் நாள் போரில் பலவான்களை அனுப்பிப் பார்த்தான். இராமசேனையையும் பயமுறுத்தப் பார்த்தான். தூமராக்ஷன் என்கிற பலவான் வந்தான், பயங்கரப் படையுடன், முதல் அடியே இராவணனுக்கு மரண அடி என்பது போல, தூமராக்ஷனைத் தூள் தூள் ஆக்கினான் பலவான் வாயு குமாரன். வாயு புத்திரனை வணங்குவோம். வலிமை மிகப் பெறுவோம். இது உறுதி.

புகழ் என்பது எல்லாரும் விரும்புவதாயினும் எல்லாருக்கும் கிட்டுவதில்லை. சிலருக்கு வருவதேயில்லை. கிட்டிய புகழும் பலருக்கு நீடித்திருப்பதில்லை. பதவியில் ஒருவர் இருக்கும் வரை புகழ்ந்தவர் எல்லாம், பதவி விலகியவுடன் மதிப்பாரா? மறந்து விடுகின்றனரே! பயன் உள்ளவரை புகழுண்டு. காலம் காலமாக சிலருக்கு புகழுண்டு. மண்ணுள்ளவரை புகழுடையோரை யசஸ் உடையவர் என்கிறோம். ஆஞ்சனேயனைப் பாருங்களேன். பகவான் நாராயணன் இராமாவதாரம் எடுத்து அநுமனின் உதவியோடு அறத்தை நிலைநாட்டி வைகுந்தம் சென்றான். இராமாயணப் பாத்திரங்கள் அனைவரும் இவ்வுலகை விட்டுச் சென்றனர், ஆனால் அநுமன் அகலவில்லை. அதுமட்டுமன்று, யுகம் மாறியது. நாராயணன் கண்ணனாக வந்தான். அநுமனின் அருமை அறிந்து வீர விஜயனுக்கு உதவ வேண்டினான். இரண்டு யுகங்களுக்கும் அனுமன் புகழ் பரவியது. அது மட்டுமா? இந்தக் கலியிகத்திலும் அநுமனின் புகழ் உலகெங்கும் துதிக்கப் படுகிறது. ஆக அவன் புகழ், காலம் என்னும் எல்லையைத் தாண்டியது. அவன் புகழ் பாடும் நமக்கெல்லாம் புகழ்தானே?

தைரியம் என்ற சொல் எப்பேர்ப்பட்ட பணியாயினும் அதில் ஈடுபட்டு வெற்றியடையச் செய்வது உந்துதல். நம்மில் பலர் அது என்னால் முடியாது என்று பலனளிக்கும் பணிகளை விட்டு விலகிச் செல்கிறோம். இராமாயணத்தில் இலங்கையில் அன்னையிருப்பதை அறிந்து அங்கு சென்று தேட வேண்டிய காலகட்டம். அங்கதன், நீலன் போன்ற வீரர்கள் பலரும் தங்கள் வலிமையைப் பற்றிப் பேசிவிட்டு, ஆனால் சமுத்திரத்தைத் தாண்டிப் போய் வர முடியாது என்று ஒதுங்குகினார். அப்பொழுது மெய் வருத்தம் பாராது மனம் தளராது நூறு யோசனை தூரம் தாண்டும் துணிச்சல் கொண்டு விளங்கியவன் நம் ஆஞ்சனையனே. செயற்கரிய செயலாற்ற, தேவையுள்ள தைர்யம், ஆஞ்சனேயனை வழிபடுவோர்க்கெல்லாம் அமையும்.

பயமின்மை, தைர்யத்தினின்றும் வேறுபட்டது. சங்கடங்கள், ஆபத்துகள் நிறைந்த நேரங்களில் மனம் நிலைகுலையாது செயலாற்றும் நிர்பயத்துவம் என்ற பயமின்மை தேவை. அநுமனின் வாலிலே தீயிட்டு, அரக்கர் படை, வெகுண்டு மிரட்டினாலும், பயந்தானா அனுமன்? ஐயனுக்குத் தான் பயமே இல்லையே! தனக்கு நேர்ந்த அபாயத்தை, வாய்ப்பாக மாற்றி எதிரியின் ஊரை அழித்தான் அனுமன்.

அது மட்டுமா? இராவணன் உயர்ந்த அரியாசனத்தில் அமர்ந்திருக்க அநுமனைக் கயிற்றால் கட்டி, பிணைக் கைதியாக இந்திரஜித் தரையில் நிறுத்திய போது, பயந்தானா அநுமன்? அரக்கனின் அரியாசனத்திற்கு மேலாசனமாகத் தன் வாலாசனத்தை அமைத்துக் கொண்டு இராமனின் புகழ் பாடி அறிவுரை கூறினானே! அச்சுறுத்தும் அரக்கர் நடுவில், அச்சமே இல்லாது அறை கூவினானே! அநுமன் அருள் இருக்க நாம் ஏன் பயப்பட வேண்டும்?

பிறந்த உயிர்கள் அனைத்தும் ரோகங்களுக்கு ஆட்பட்டவை. ஆகவேதான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிறோம். சிறிய நகச்சுற்றிலிருந்து இதயநோய் வரை, எத்தனை நோய்கள்? துன்பம் கொடுப்பதில், பெரிய ரோகம், சிறிய ரோகம் என்பதில்லை. அவஸ்தைப் படும் போதுதான் தெரியும் அவை படுத்தும் பாடு. யுத்தகளத்தில் எல்லாரும் வீழ்ந்து கிடந்த நேரத்தில் அனுமன் சஞ்சீவி பர்வதத்தைக் கொணர்ந்ததால் இறந்தவர் பிழைத்தனர். காயங்கள் மறைந்தன. ரணங்கள் ஆறின. உடல் நோய் மட்டுமா? மன நோயும் போக்குவான் நம் ஐயன். இராமனின் உடைந்த உள்ளத்திற்கு புனல் அளிக்க கணையாழி தந்தானே! என்னதான் நோய்கள் நமக்கு வரட்டுமே! அநுமனின் பெயர் கேட்டால் அரண்டு ஓடி விடும்.

சிலருக்கு உடலும் உள்ளமும் ஒத்துழைக்காது. "கைகால் எல்லாம் ஓய்ச்சலாயிருக்கிறது. காய்ச்சல் வரும் போல் இருக்கிறது. ஒரே பாரமாயிருக்கிறது. கஷ்டமாய் இருக்கிறது" என்றெல்லாம் சிணுங்குவர். "என்னங்க வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. போர் அடிக்குதுங்க. போய்டலாமான்னு இருக்கு " என்று குறைபட்டுக் கொள்வோரும் உண்டு. ஆனால் கடலைக் கடந்து, இலங்கையில் பல இடங்களில் தேடியும் அன்னையைக் காணவில்லை. உடலும் உள்ளமும் அயர்ச்சி அடைதல் இயற்கை தான். அயர்ந்தானா அனுமந்தன்?

நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை|
நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:||

என்ற மஹா மந்திரம் கூறி உடலில் அயர்ச்சி இன்றி உள்ளத்தில் தளர்ச்சி இன்றி அசோக வனத்துள் நுழைந்தான். அன்னையைக் கண்டு முயற்சியின் இலங்கை அடைந்தான். கதிரவனைக் காணக் கைவிளக்கு தேவையா? இப்பொழுது புரியுமே, நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதாவது உடலும் உள்ளமும் துவளும் போதெல்லாம் அனுமன் புஷ்டியை அளித்துக் காப்பான்.

வில்லம்பின் கூர்மையை விட சொல்லம்பின் கூர்மை அதிகம். பூவின் மென்மையை விட நாவின் மென்மை இனியது; வாக்கின் வன்மை நல்லது செய்யும்; அல்லதும் செய்யும். ஒலியின் கனத்திலிருந்து தொனியின் வேகத்திலிருந்து மனத்தின் வேகம் தெரியும். சொல்கிற விதத்தில் சொன்னால் எல்லாம் சரியாகி விடும். இலங்கையிலிருந்து திரும்பிய அனுமன் அண்ணலிடம் என்ன சொன்னான்? "கண்டேன் கற்பினுக்கணியை என் கண்களால்"

இராமனின் முதல் கவலை சீதையை உயிரோடு கண்டானா என்பது. ஆகவே கண்டேன் என்றான். அடுத்த வேளை மாசு தூசு படியாதிருக்கிறாளா என்பது. கற்புடையோர்க்கெல்லாம் அணிகலன் என்கிறான். இவனே பார்த்தானா அல்லது பிறர் சொல் கேட்டு உத்தேசத்தில் சொல்கிறானா என்று கவலை கூட்டிய ஐயம். ஆகவே என் "கண்களால்", என்ன ஒரு நாவன்மை! என்ன சொல் வரிசை! அநுமனை வணங்கினால் அநுமனின் வாக்கு வல்லமை நமக்கும் கிட்டுமன்றோ!

அநுமனை வணங்கினால் நாளும் கோளும் நம்மை வாட்டாது. இதற்கு ஒரு ஸ்லோகம்.

அஞ்சனா கர்ப்பஸம்பூதம் குமாரம் ப்ரும்ம சாரிணம்,|
துஷ்டக்ரஹ வினாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹம்மஹே||

சோகமும் துரோகமும் நம்மை அண்டாதிருக்க திருவருள் மிகுந்திருக்க இதோ

மர்க்கடேச மஹோத்ஸாக ஸர்வ சோக விநாசக|
சத்ரூன் சம்ஹர மாம் ரக்ஷ ச்ரியம் தாஸாய தேஹிமே||

அனுமனைப் பணிவோம். அனைத்தும் பெறுவோம். ஆஞ்சனேயனைப் போற்றுவோம். ஆற்றலைப் பெறுவோம்!


ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.

 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+