home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

அஞ்ஜனைச் செல்வன் 'அஜாட்யம்' அருளட்டும்

 

ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ மாஹா முனிவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்


ராமாயண பாராயணம், முதலானவற்றில் சொல்கிற ப்ரஸித்தமான ஆஞ்ஜநேய ஸ்தோத்ரங்களில் ஒன்று :

புத்திர் - பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||

ஹனுமத் ஸ்மரணையால் என்னவெல்லாம் கிடைக்கின்றன என்று சொல்கிறது : முதலில் 'புத்தி' - எல்லாவற்றுக்கும் முந்தி வேண்டியது அறிவுதான், அது; 'பலம்' - அப்புறம் தேஹ பலம்; 'யசஸ்-நல்ல கீர்த்தி; 'தைர்யம்' - தைர்யந்தான். 'நிர்பயத்வம்' - அஞ்சாமை என்பது... 'தைர்யம்' என்றாலே அஞ்சாமையும்தானே அடக்கம்? ஏன், தனியாக வேறே சொல்லணும்? [பதில்:] 'தைர்யம்' என்பதற்கு இன்னும் பல அர்த்தம் உண்டு. மனோத்ருடம், சாந்த குணம் முதலயவற்றைக் கூட 'தைர்யம்' குறிக்கும். இங்கே அப்படியொன்றாக இருக்கலாம். அல்லது 'தைர்யம்' என்பது அவரை (ஆஞ்ஜநேயரை) ஸ்மரிப்பவனுக்கு ஏற்படும் அஞ்சாமை என்றும், 'நிர்பயத்வம்' என்றால் இவனைக் கண்டால் மற்ற எவரும் பயப்படாத அபய ஸ்தானமாக இவன் இருப்பது என்றும் வைத்துக் கொள்ளலாம். ஸன்னியாஸி எந்த ப்ராணிக்கும் தன்னால் பயம் உண்டாகப்படாது என்று தீக்ஷை எடுத்துக் கொள்வது மாதிரி.... 'அரோகதா' என்றால் ஆரோக்யம். அதுவும் ஆஞ்ஜநேய ஸ்வாமியை ஸ்மரிப்பனுக்கு உண்டாகிறது. அப்புறம், ஆஞ்ஜநேய ஸ்வாமியை ஸ்மரிப்பவனுக்கு உண்டாகிறது. அப்புறம், 'அஜாட்யம்' என்று ஒன்று போட்டிருக்கிறது. அதற்கு 'ஜடமாக இல்லாத தன்மை' என்று அர்த்தம். முடிவாக 'வாக் - படுத்வம்', அதாவது வாக்குவன்மை, 'நவ வ்யாகரண பண்டிதன்' என்றும் 'சொல்லின் செல்வன்' என்றும் வால்மீகியும் கம்பரும் சொல்கிறவர் பக்தர்களுக்கும் சொல்வன்மை அருளுகிறார்.

பக்தி, பலம், யசஸ், தைர்யம், அபயத்வம், ஆரோக்யம், வாக் - படுதவம் என்ற இந்த ஏழும் அவச்யம் வேண்டிய விஷயங்கள் என்று தெரிகிறது. யாரும் சொல்லிக் கொடுக்கணுமென்றில்லாமல் நாமே இதற்கெல்லாம் வேண்டிக்கொண்டு விடுவோம். ஆனால் எட்டாவதாக இன்னொன்று, 'அஜாட்யம்' என்று சொல்லியிருக்கிறதே... ச்லோகத்தின் வரிசையில் இது எட்டாவது இல்லை; ஏழாவதாக வருகிறது. அப்புறம் 'வாக்படுத்'வத்தைச் சொல்லி முடித்திருக்கிறது. அந்த 'அஜாட்யம்' என்ன, அதை எதற்கு விசேஷமாக ப்ராத்தித்துப் பெற வேண்டுமென்று புரியாமலிருக்கலாம்.

ஆனால் எனக்கென்னவோ லோகம் போகிற போக்கில் இதுதான் அத்யாவச்யத் தேவை, இதற்குத்தான் ரொம்ப ப்ரார்த்தித்துக் கொள்ள வேண்டும், இதைத்தான் ஆஞ்ஜநேய ஸ்வாமி யதேஷ்டமாக வர்ஷிக்க வேண்டும் - என்று தோன்றுகிறது.

'அஜாட்யம்' - ஜடமாயில்லாமலிருப்பது என்றால் என்ன அர்த்தம்?

புத்தி மந்தித்து, சுறுசுறுப்பில்லாமல், உத்ஸாஹமில்லாமல் சோம்பேறியாக மசமசவென்று இருப்பது. ஜடம் என்றால் உயிரில்லாத 'மேட்டர்'. 'மேட்டர்', 'ஸ்பிரிட்' என்று இரண்டு சொல்வதில் உயிரில்லாத பூதங்கள், தாதுக்கள் எல்லாம் ஜடம். 'ஸ்யிரிட்' என்பது உயிர் என்னும் சைதன்யம். உயிராக, அறிவாக உள்ள 'சித்'திலிருந்து வருவது 'சைதன்யம்'. 'ஜட'த்திலிருந்து வருவது 'ஜாட்யம்'. மனுஷ்ய ஜீவனை 'சித்ருந்ஜட க்ரந்தி'யால் உண்டானதாகச் சொல்வார்கள். உயிரில்லாவிட்டால் உடம்பு வெறும் பௌதிக தாதுக்களாலான ஜடம் தானே? இதை உயிரோடு முடிச்சுப்போட்டு ஜீவாத்மா என்று வைத்திருப்பதுதான் சித்-ஜடக்ரந்தி, ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஜட சரீர ப்ரஜ்ஞையை ஒழித்துக் கட்டிவிட்டு 'சின்மய'மாகவே போய்விடு என்கிறார்கள்.

அது நடக்கிறபோது நடக்கட்டும். இப்போது இந்த ஜட சரீரத்திலேயே சித் விலாஸத்தினால் உத்ஸாஹத்தேடு ஸத் கார்யங்களைப் பண்ணிக் கொண்டிருப்பதற்கு வழியைப் பார்ப்போம். ஜடம் மாதிரி 'டல்' ஆக, மசமசவென்று உட்கார்ந்து கொண்டிருக்காமல், சுறுசுறுப்போடு, விழிப்போடு இருக்கக் கற்றுக் கொள்வோம். இப்போது 'ஜாட்யம்' (ஜடத்தன்மை) தான் வந்து நம்மை நன்றாகக் கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வேண்டாத விஷயங்களில் மஹா உத்ஸாஹத்தோடு ஈடுபட்டு ஈடுபட்டு, வெறும் அரட்டை, கார்யத்தில் லவலேசம் ப்ரயோஜனமில்லாத பாலிடிக்ஸ் டிஸ்கஷன், காப்பி, ஸினிமா, நாவல், கீழ்த்தரமான ரிக்ரியேஷன் என்று எனெர்ஜியெல்லாம் வேஸ்ட் செய்துவிடுவதால், எது அவச்யமோ அதைச் செய்வதற்குச் சூடு பிறக்காமல் 'டிப்ரெஸ்'-ஆக ஆகியிருக்கிறோம்? வீண் வ்யவஹாரங்களில் சக்தியைச் செலவழித்துவிட்டு நல்லது செய்யணும் என்னும்போது தூங்கிவழிந்து கொண்டிருக்கிறோம். ஜடமாக இருக்கிறோம்.

ஸயன்ஸ் என்றும், நவீன வசதி வாழ்க்கை என்றும் சொல்லிக் கொண்டு பாதி; சீர்திருத்தம், பகுத்தறிவு, புரட்சி என்று சொல்லிக்கொண்டு பாதி - இப்படிப் புறப்பட்டிருப்பவர்கள் மட்டும் கொஞ்சங்கூட ஜாட்யம் இல்லாமல் இஷ்டப்படிப் பண்ணிக்கொண்டிருப்பதைப் பார்த்தும் - தர்மம் என்ன கொள்ளை போகட்டும்; சாஸ்த்ரம் எப்படிப் பாழாகப் போகட்டும்; மதத்துக்கு, ஹிந்து கலாசாரத்துக்கு என்ன ஹானி வரட்டும், அத்தனையும் பார்த்துக் கொண்டு பேடிகள் உட்கார்ந்திருக்கிறோம். மஹாவீரனான அர்ஜுனன் யுத்த பூமியில் மனஸு தளர்ந்து உட்கார்ந்திருந்தபோது, பகவான் அவனிடம், 'அடேய். பேடி மாதிரி இருக்காதேடா - |க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த|' என்று கோஷம் பண்ணிக் கிளப்பிவிட்டார். இன்றைக்கு நமக்கெல்லாம் இந்த அனுக்ரஹத்தை ஆஞ்ஜநேய ஸ்வாமி நிரம்பப் பண்ண வேண்டும்.

'சதுஷ்ஷஷ்டி கலா' என்று அறுபத்து நாலு கலைக்கான சாஸ்தரங்கள் நம் தேசத்தில் இருந்ததே. இஞ்ஜினீயரிங் டெக்னாலஜி எல்லாவற்றிலும் வல்லுநர்களாக நம்முடைய பூர்விகர்கள் எத்தனையோ ஸாதித்துவிட்டுப் போயிருப்பதற்கு ஆதார சாஸ்த்ரங்கள் இருந்ததே. அவற்றை பராக்டிஸ் செய்பவர்கள்தான் இப்போதில்லை என்றால், அந்தச் சாஸ்த்ர புஸ்தங்களைக்கூட அல்லவா காணோம்? இந்த மஹத்தான நஷ்டத்துக்கு நம்முடைய ஜாட்யம் தானே காரணமாயிருந்திருக்கிறது? இன்னும் பாக்கியிருப்பதையெல்லாமும் இப்படியே தூங்கி வழிந்துகொண்டு வாரிக் கொடுக்காமலிருக்க அவர் நமக்கு அஜாட்ய அனுக்ரஹத்தைத்தான் விசேஷமாகச் செய்ய வேண்டும்.

'வாக்படுதவ'த்துக்கு முந்தி 'அஜாட்ய'த்தைச் சொல்லியிருக்கிறது. இன்றைக்கு நாமெல்லாம் 'வாக்'கிலே மஹா 'படுக்கள்'. வாய்ச் சொல் வீரர்கள். கார்யத்தில் ஜாட்ய மூர்த்திகள். ஆஞ்ஜநேய ஸ்வாமி நம்முடைய வாக்படுதவத்தைக் கொஞ்சம் குறைத்து அதையும் சேர்த்துப் போட்டுக்கொண்டு அஜாட்ய அனுக்ரஹம் பண்ணி நம்மைக் கார்யசூரர்களாக்கினால் தேவலை என்று தோன்றுகிறது.

அவர் அப்படியிருந்தவர்தான். ச்லோகத்தில் சொல்லியுள்ள புத்தி, பலம் ஆகிய எல்லாவற்றுக்குமே அவர் ஒரு ரூபம், எப்போதும் உத்ஸாஹமாக, சுறுசுறு விறுவிறு என்று அஜாட்ய ஸ்வரூபமாக இருந்தவர் அவர். சில்ப - சித்ரங்களில் அப்படித்தான் இருக்கிறார் - மலையையே அனாயாஸமாகக் கையில் தூக்கிக்கொண்டு ஆகாசத்திலே பறந்து கொண்டு இருப்பார். கொஞ்சம்கூடக் களைப்பு, சோம்பலே இல்லாமல் தர்மத்துக்காக ஸதா உழைத்தவர். முக்யமாக எத்தனை எதிர்ப்பு, விக்னம் வந்தாலும் அவர் கொஞ்சங்கூடத் தளராமலிருந்து எடுத்த கார்யத்தை வெற்றிகரமாக ஸாதித்ததைத் சொல்ல வேண்டும்.

நாமா, நல்லதற்காகப் புறப்படுவதே அபூர்வம். அப்படிப் புறப்பட்டாலும் ஏதாவது கொஞ்சம் தடை, ஆப்போஸிஷன் வந்துவிட்டால் தளர்ந்து போய்விடுகிறோம். ஆனாலும் வாக்படுக்களாக இருப்பதால் அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், 'இது கலி காலம். கெட்டதற்குத்தான் ஆதிகயம் என்று சாஸ்த்ரத்திலேயே இருக்கிறது. அதனால் நாம் பாட்டுக்கு ஒதுங்கியிருப்போம்' என்று கதைப்போம். இன்னும் மேலே போய், 'அத்வைதா', 'மாயா டாக்டரின்' என்று முடித்து விடுவோம். ஆனால் அதற்காகவே அவதாரம் பண்ணி, புஸ்தகமாக எழுதி அதை ஸ்தாபனம் பண்ணிய ஆசார்யாள் எல்லாருக்கும் அதைச் சொல்லவில்லை; அவரும் சும்மா இருக்கவில்லை. கார்ய சூரர்கள் என்று உச்சியில் வைத்துச் சொல்லக் கூடியவர்கள் இரண்டு பேர் என்றால் அதில் ஒன்று ஆஞ்ஜநேயர், மற்றது ஆசார்யாள்தான். சும்மாயிருப்பதுதான் 'கோல்' என்றாலும் அதில் நாமே போய் உட்கார முடியாது. நாம் ஸரியாக அப்படியிருந்து ஆரம்பித்து மேலேறிப் போனால் அதுவே ஒரு கட்டத்தில் நம்மைச் சும்மா உட்கார வைப்பதுதான் நிஜ சும்மா. இப்போது நாம் சொல்லும் சும்மாவெல்லாம் சிரித்து 'சும்மாக்கோஸரம்' சொல்லும் சும்மாதான். அது மனஸ் சும்மாயிருப்பது; இது உடம்பு மட்டும் சும்மாயிருப்பது. அதனால் மனஸ் இன்னும் ஜாஸ்தியாய் க்ருத்ரிம கல்பனைகள் பண்ணுவது; இல்லாவிட்டால் ஜடம் மாதிரி மரத்துப்போய்க் களைத்துத் தூங்கி வழிவது. மனுஷ்ய ஜன்மா எடுத்தவனுக்கு இரண்டுமே ரொம்பக் குறைவு, ரொம்பக் கௌரவ ஹானி.

பாராயணம், ஜபம், உபவாஸம், ஆலய தர்சனம், பஜனை என்று எத்தனை பேர் ப்ரமாதமாக ஆரம்பித்து நாள் போகப் போகப் போகக் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறோம். முத்ராதிகாரிகள் திட்டம் என்று ஜகத்தையே புரட்டிவிடுகிற மாதிரி நான் ஒன்று ஆரம்பித்ததில் நடந்து வந்த எத்தனை ஸத்கார்யங்கள், வாரவழிபாடு முதலியவை இன்றைக்குப் போன இடம் தெரியாமல் போயிருக்கிறது? சீட்டு கூத்து என்று ஆரம்பித்த எந்த க்ளப்பாவது க்ஷீணித்ததாகக் கேட்கிறோமா? அதிலே அஜாட்யம் இருக்கிறது.

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் அஜாட்யம், அவருக்கு வந்த விக்னம் - இந்த இரண்டு மாதிரியுமே எங்கேயும் பார்க்க முடியாது. அத்தனை விக்னத்தையும் தவிடு பொடியாக்கிய அஜாட்யம் அவருடையது. அவதாராம் பண்ணியவுடனேயே, (பரிவோடு) பச்சைக் குழந்தை... விர்ர்ர்ரென்று ஒரே வேகமாக, உதய ஸூர்யனை சிவப்புப் பழமென்று நினைத்துக் கொண்டு ஸூர்ய மண்டலத்திற்கே தாவிவிட்டது. அப்பவே எதிர்ப்பும் வந்துவிட்டது. இந்த்ரன் வஜ்ராயுதத்தால் அடித்துத் தள்ளினான். தாடையே பிளந்து போயிற்று. 'ஹனு' என்றால் தாடை. தாடை போன விசேஷத்தால் 'ஹனுமான்' ஆனார். அதற்காகச் சளைத்துவிடவில்லை. ஸூர்யனிடமே உதயகிரியிலிருந்து அஸ்தகிரி வரை சளைக்காமல், களைக்காமல் ஸூர்யனுக்கு எதிர்முகமாக ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டே கற்றுக்கொண்டார். குழந்தையாகவும் ஒரே உத்ஸாஹ விளையாட்டுப் பண்ணினார். துருதுருவென்று ரிஷிகளின் ஆச்ரமங்களுக்குள்ளேயெல்லாம் புகுந்து ஒரே விஷமமாகப் பண்ணினார். அவர்கள் கோபித்துக்கொண்டு, 'உன் திவ்ய சக்தி உனக்கே மறந்து போய் ராமாயண காலத்தில் அவருக்குக் கார்யம் பண்ணும்படி ஏற்படும் போதுதான் ஞாபகம் வரும்' என்று சபித்துவிட்டார்கள். அதற்காகவும் அவர் ஒன்றும் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டுவிடவில்லை. ஒரு வானரம் எத்தனை தொண்டு பண்ணமுடியுமோ அத்தனையும் ஸூக்ரீவனுக்குப் பண்ணிக் கொண்டிருந்தார். அங்கேயும் எதிர்ப்பு வந்தது. மஹாவீரனான வாலி ஸுக்ரீவனிடம் சண்டைக்கு வந்தான். அப்போதும் அவர் தளரவில்லை. ஒரு சாபம் காரணமாக வாலி வரமுடியாத ஓர் இடத்துக்கு ஸுக்ரீவனை அழைத்துக் கொண்டு போய் ரக்ஷித்து வைத்துக்கொண்டு தொண்டு செய்து வந்தார். அப்புறம் ஸாக்ஷாத் ராமசந்த்ர மூர்த்தி வந்த பிறகு அவருக்குத் திவ்ய சக்தியும் திரும்ப வந்தது. அஸாத்யமான கார்யமெல்லாம் பண்ணினார் - ஸமுத்ரத்தையே தாண்டுவது, மலையையே பறித்து எடுத்துக் கொண்டு வருவது, மஹா பலிஷ்டரான ராக்ஷஸர்கள் ஹதாஹதம் பண்ணுவது என்றிப்படி.

ஸமுத்ரம் தாண்டிப் போகும் போதுதான் எத்தனை விக்னம்? ஸுரஸை, ஸிம்ஹிகை, லங்கிணி என்று குறுக்கே எத்தனை ராக்ஷஸகள்? ஸுரஸை இவரை முழுங்கப் பெரிசாக வாயைத் திறந்தால், இவர் கொசு மாத்ரமாகி வாய்க்குள் புகுந்து காதால் வெளியே வந்துவிடுகிறார். அவளை அவர் சண்டை போட்டு வதைக்க முடியும். ஆனாலும் அத்தனை நாழி ஸ்வாமி கார்யம் 'டிலே' ஆகலாமா? என்று கார்யத்தில் அத்தனை கண்ணாக - அதுவும் அஜாட்யந்தான் - இப்படி தந்த்ரமாகப் பண்ணிவிட்டார். அதற்கு எவ்வளவோ 'ப்ரஸன்ஸ் ஆப் மைன்ட்' வேண்டும் - அறிவு பளிச்சென்று விழிப்பு நிலையில் இருக்கும் அஜாட்யம்.

கார்யத்திலேயே கண் என்பதால் களைப்பு, சலிப்பு, ஜாட்யம் கொஞ்சங்கூடத் தெரியாதவர். ஸமுத்ர மத்தியிலிருந்து மைநாகமலை எழுந்து, ஆகாச மார்க்கமாக வந்து கொண்டிருக்கும் அவரிடம், 'கொஞ்சம் எங்கிட்டே தங்கி ரெஸ்ட் எடுத்துக் கொண்டு விட்டு அப்புறம் போங்கோ' என்றது. அவரோ, 'முதலில் கார்யம் முடியட்டும். திரும்பி வரும்போது வேணுமானால் பார்த்துக்கலாம்' என்று அதற்கு ஒரு ஷொட்டு கொடுத்துவிட்டு மேலே போய் விட்டார் - ராமஸரம் மாதிரியே வைத்த குறி தப்பாமல்.

அப்புறம் எத்தனை ராக்ஷஸர்கள் அவரை என்ன பாடுபடுத்தினார்கள்? வாலிலேயே நெருப்பை வைத்து ஹிம்ஸித்தும்கூடக் கொஞ்சமாவது மனஸ் தளர்ந்தாரா? எடுத்த கார்யத்தை விட்டாரா?

இப்படியே கதை முழுக்க எதிர்ப்புக்கு மேலே எதிர்ப்பு, அப்படியும் சோர்வில்லாத கார்யம் என்றே போகிறது.

ரொம்ப உசத்தி என்னவென்றால், இத்தனை கார்யம், இத்தனை புத்தி, பலம், தைர்யம், அஜாட்யம் ஆகியவற்றில் ஒரு சின்னத் துளியாவது ஸ்வார்த்தமாக (அவருடைய ஸொந்த நலனுக்காக) ப்ரயோஜனம் பண்ணிக் கொண்டாரா? ஸொந்த வாழ்க்கை என்றே ஒன்று இல்லாதவர். 'ஸெல்ப்லெஸ் ஸர்விஸ், ஸெல்ப்லெஸ் ஸர்விஸ்' என்று அடிக்கடி கேள்விப் படுகிறோமே, வாஸ்தவத்தில் அதற்கு உருவமாயிருந்தவர் ஆஞ்ஜநேய ஸ்வாமி. பெண்டாட்டியா, பிள்ளையா, குட்டியா என்ன இருந்தது அவருக்கு? முதலில் கொஞ்ச நாள் ஸுக்ரீவனுக்கு, அப்புறம் ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு என்றே தன் வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணினார். அந்த ஸ்வயநலமின்மை, புத்தி, பணிவு ஆகியவற்றோடு சேர்ந்ததாலேயே அவருடைய புத்தி, பலம் இத்யாதி எல்லாம் அப்படிப் பூர்ணமாகச் சோபித்தது.

'புத்திர் - பலம் - யசஸ்' என்று மூன்றாவதாக வருகிறது. அந்த யசஸ் (புகழ்) ஸ்வயநலமில்லாத பக்திப்பணி என்பதாலேயே ஏற்பட்டது.

யசஸ் போக பாக்கி எல்லாம் - புத்தி, பலம், தைர்யம், நிர்பயத்வம், ஆரோக்யம், ஆஜாட்யம்கூடத்தான், அப்புறம் வரும் வாக்படுத்வம் ஆகிய எல்லாமும் - ராவணன், ஹிட்லர் போன்றவர்களுக்குக்கூடத்தான் இருந்து. ஆனால் அவர்களுக்கு யசஸ் உண்டா? பேரைக் கேட்டாலே திட்டத்தானே செய்கிறோம்? ஆகையால் என்ன தெரிகிறதென்றால் புத்தி, பலம் ஆகியவற்றால் ஒருத்தருக்கு யசஸும் வரவேண்டுமானால் அவர் அவை எல்லாவற்றையும் பரநலனாக ப்ரயோஜனப்படுத்தினால்தான் முடியும்.

அவரையும் நினைத்து நம்மையும் நினைத்தால்... (சட்டென்று மிகுந்த கருணையுடன்) ஒருத்தரும் வருத்தமே பட வேண்டாம். 'தூங்குமூஞ்சி, அது இதுன்னு பெரியவா கோவமா திட்டறாளே' என்று யாரும் துக்கப்பட வேண்டாம். கோபமே இல்லை. ஆஞ்ஜநேயரைப் பற்றிச் செல்லும்போது கோபமே வரப்படாது. அவர் கோபமே இல்லாதவர்... ராமர் அவருக்கு ஞானோபதேசம் பண்ணினாரென்று இருக்கிறது. ஸீதையும் அவருக்கு உபதேசம் பண்ணியிருக்கிறாள். ராமர் ஞானம் உபதேசித்தார். ஸீதை என்ன உபதேசித்தாள்? ஸீதையென்றால் யார்? ஸாக்ஷாத் தாயார். அதனால் ப்ரேமையை உபதேசித்தாள். ராவண வதமானதும், ஸீதையிடம் ஸந்தோஷ ஸமாசாரம் தெரிவிப்பதற்காக ஆஞ்ஜநேயர் அசோக வனத்துக்குக் குதித்துக் கொண்டு வந்தார். ராக்ஷஸிகளைப் பார்த்ததும் 'இத்தனை நாளாகத் தாயாரை என்ன பாடுபடுத்திக் கொண்டிருந்தார்கள்? இன்றைக்குத் தொலைத்து விடலாம் அத்தனை பேரையும் என்று புறப்பட்டார். அப்போது ஸீதை அந்த ராக்ஷஸிகளுக்கும் தாயாராக உபதேசம் பண்ணினாள். 'அப்பா, உசந்தவர்களின் லக்ஷணம் கருணைதான். லோகத்திலே தப்புப் பண்ணாதவர்கள் யார்? இவர்களைத் தொடாதே. இவர்கள் என்ன பண்ணுவார்கள்? ராஜஸேவகிகள், ராஜாக்ஞைப்படித்தானே பண்ணணும்? அதனால் ராவணன் சொற்படி ஹிம்ஸித்தார்கள். இப்போது விபீஷண ராஜாவானால் அவன் சொற்படி நமஸ்காரம் பண்ணுவார்கள்' என்றாள்.

அன்றிலிருந்து ஆஞ்ஜேநேய ஸ்வாமி ஒரே கருணையாக, அன்பாக ஆகி விட்டார். அதற்காக, தப்பு நடந்தால் சும்மா யிருப்பாரென்று அர்த்தமில்லை. அத்யாவச்யத்திலே தண்டிக்கவும் தண்டிப்பார், 'கோவிச்சுக்கவும் கோவிச்சுப்பார்'. இப்படி வெளியிலே இருந்தாலும் உள்ளே யாரானாலும் அவர்களிடம் பூர்ணமான அன்பு, 'இவா நல்லவாளாகணுமே' என்ற கவலைதான் இருக்கும்.

ஆகையினால் நான் நிஜமாகவே உங்களைக் கோபித்துக் கொள்கிறேனென்றால் எனக்கு அவரைப் பற்றி லெக்சர் அடிக்கவே அர்ஹதை (அருகதை) இல்லை என்று அர்த்தம். இப்படிச் சொன்னால்தான் தூண்டிவிடும் என்பதற்காகவே... 'ஷாக் ட்ரீட்மென்ட்' என்கிற மாதிரி... கொஞ்சம் 'புஸ்', 'புஸ்' என்கிறது.

கோபமே இல்லை. எங்கேயும் யாருக்கும் யாரிடமும் கோபம் வேண்டாம். சாந்தி, அன்புதான் ஸமஸ்த ப்ராணிகளிடமும் இருக்கணும். அதுதான் அவருக்குப் பிடிக்கும். ஆனால் அப்படிச் சொல்லிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தால் அவர் ஸரியென்று சொல்ல மாட்டார். மனஸில் எவரிடமும் அன்பு குறையாமலே, கார்யத்தில் பண்ண வேண்டியதை முழு விழிப்போடு சுறுசுறுவென்று பண்ணிக் கொண்டிருந்தால்தான் ஸந்தோஷப்பட்டு எல்லா அனுக்ரஹமும் பண்ணுவார்.

முதலில் அவர்தான் இந்த அனுக்ரஹமே... நம்மைச் சுறுசுறுப்பாக்குகிற அனுக்ரஹமே... அஜாட்ய அனுக்ரஹமே பண்ணவேண்டும். அதற்கு எல்லாரும் ப்ரார்த்தனை செய்து கொள்வோம்.

'அஜாட்யம்' அருளட்டும்

ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.

 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+