home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸமய ஸஞ்ஜீவி

 

Kanchi Bala Periyava காஞ்சி ஸ்ரீ பால பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சங்கர விஜேயேந்திர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்


ஸேவை, தொண்டு என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் அநுமான். எந்த விதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தொண்டு புரிய வேண்டும். அப்படி செய்ததால்தான் அநுமனின் இதயத்தில் பகவான் ஸ்ரீராமபிரான் அமர்ந்தார்.

அபிஷேக ப்ரிய: சிவ:
அலங்கார ப்ரிய: விஷ்ணு:
நமஸ்கார ப்ரியோ பாநு:

என்பார்கள். சிவனுக்கு எப்போதும் அபிஷேகத்தில் ப்ரியம் அதிகம். அது போல் மஹாவிஷ்ணு அலங்கார ப்ரியர். சூரிய பகவானுக்கோ நமஸ்காரம் செய்தால் போதும். பூரண திருப்தியை அடைவார். இதேபோல் ஹநுமத் ஸ்மரணாத் பவேத். ஸ்மரித்தால், நினைத்தால் போதும்; அநுமனின் அருளைப் பெற்று எல்லாச் செல்வங்களையும் பெறலாம்.

எல்லாவற்றுக்கும் மோலாக உயிர் இருந்தால் தானே எல்லாச் செல்வங்களையும் அநுபவிக்க முடியும். அத்தகைய உயிரையும் கொடுத்துக் காப்பாற்றுவார் அநுமான்.

ராமராவண யுத்தம் நடக்கிறது. அப்போது தேவேந்திரனையே வெற்றி கொண்ட ராவணனின் குமாரனான இந்திரஜித் பிரம்மாஸ்த்திரத்தைப் போட்டு வானர சைன்யங்கள் எல்லாவற்றையும் மயக்க நிலையை அடைந்தார்கள். அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்படாதவர் இருவர். அநுமன், விபீஷணன். இரவு வேளை, இரண்டு பேரும் கையில் தீவட்டியை ஏந்தியபடி யார் யார் எங்கெங்கே கிடக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். ஓரிடத்தில் ஜாம்பவான் வயது முதிர்ந்த நிலையில் படுத்திருந்தார். அவர் பிரம்மாவின் புத்திரர். எனவே அவரை அந்த அஸ்திரம் (பிரம்மாஸ்திரம்) ஏதும் பாதிக்கவில்லை. அந்த இருட்டு வேளையில் அவருக்கு விபீஷணரை மட்டுமே பார்க்க முடிந்தது. அநுமன் பக்கத்திலிருப்பது அவருக்குப் புலப்படவில்லை. அப்போது விபீஷணரைப் பார்த்து, 'அநுமார் உயிரோடு இருக்கிறாரா?' என்று கேட்டார். விபீஷணருக்கோ ஒரே ஆச்சரியம். ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் போன்ற போர் வீரர்கள் பலர் இருக்கையில் அநுமனை மட்டும் குறிப்பாகக் கேட்கிறாரே என்று. உடனே அநுமார் ஜாம்பவானின் முன் சென்று அவரை வணங்கினார். விபீஷணரின் சந்தேகத்தைப் போக்கும் வகையில் ஜாம்பவான் கூறுகிறார்:

தஸ்மின் ஜீவதி வீரேது ஹதமப் பலம் |
ஹநுமத் யுஞ்ஜித ப்ராணே ஜீவந்தோபி வயம் ஹதா: ||

அநுமார் உயிர் பெற்றிருந்தால் போதும், மற்றவர் மடிந்துவிட்டாலும் உயிர் பெற்று எழந்து விடலாம். அநுமார் உயிரை இழந்துவிட்டாலோ மற்றவர் உயிருடன் இருந்தாலும் மடிந்து போனது போல்தான்.

ஜாம்பவான் தான் அநுமாருக்கு ஊக்கத்தையும் உற்சாத்தையும் ஊட்டி இமயமலையிலிருந்து ஸஞ்ஜீவி மூலிகையைக் கொண்டுவரச் சொன்னார். அங்கே சென்ற அநுமார் அந்த மூலிகையைத் தேடுவதில் நேரத்தை வீணடிக்காமல் அந்த குன்றினையே, ஸஞ்ஜீவி பர்வதத்தையே பெயர்த்து கொண்டு வந்து வானர சைன்யங்களுக்கு மத்தியில் வைத்து தான் தாமதம், உடனேயே அந்த மூலிகையின் காற்றுப் பட்டு ராமர், லட்சுமணர் உள்பட அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

ஹநுமாரை நினைத்த மாத்திரத்தில், தியானம் செய்த உடனேயே நமக்கு புத்தி, பலம், தைரியம், பயம் இல்லாமை போன்ற நல்ல குணங்கள் நமக்கு உண்டாகின்றன.

ஆபத்துக்காலத்தில் உதவுபவன் தான் நண்பன், 'ஆபத்துக்குதவாத நண்பன்,' 'அரும் பசிக்குதவாத அன்னம்' என்று கூறி அவர்கள் பயனற்றவர்கள் என்பதைத் தெரிவிக்கிறது பழமொழி.

அநுமாரோ மூலிகையைத் தேடுவதில் நேரத்தை வீண்டிக்காமல் அந்தப் பர்வதத்தையே பெயர்த்துக் கொண்டு வந்தது புத்திக் கூர்மையைக் காட்டுகிறது. குன்றினையே தூக்கி செல்லும் அளவுக்கு அவர் பலசாலியாகவும் இருந்தார். அதனால் அவருக்கு கீர்த்தியும் உண்டாயிற்று.

ஜாம்பவான் கூறிய உடனேயே அநுமாருக்கு இந்தக் காரியத்தைச் சாதிக்க முடியுமா என்ற தயக்கமே ஏற்படவில்லை. அத்தகைய துணிச்சல் (தைரியம்) இருந்தால் அதில் (மூலிகையைக் கொணர்வதில்) வெற்றிகண்டார். அவர் 'பயம்' என்றால் என்ன? என்று கேட்பார். அப்படி நிர்பயம் உடையவர். இல்லாவிட்டால் 'தேவியை (சீதையை) விடுத்து உன் ஆவியைக் காத்துக் கொள்' என்று ராம்பிரான் விடுத்த அறிவுரையை ராவணனின் தர்பாரிலேயே அவனுக்கு எடுத்துக் கூற முடியுமா? ராவணன் அதைக் கேட்டு வெகுண்டு எழுகிறான். ஹநுமனை வதம் செய்யக் கட்டளையிடுகிறான். பின்னர் அதனை மாற்றிக் கொண்டு வாலில் தீயிடச் சொல்லுகிறான். அப்போதும் ஹநுமாருக்குப் பயமே தோன்றவில்லை. அந்த தீயைக் கொண்டே இலங்கையை எரிக்கிறார்.

ஹநுமாரைப் போன்று இன்றைக்கு நம் நாட்டு மக்களுக்கு மனோபலம் வேண்டும். 'மனமேவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:' என்பார்கள். நல்ல காரியங்களைச் செய்வதில் தைரியமும் தீய செயல்களைப் புரிவதில் பயமும் வேண்டும். இதைத்தான் பயபக்தி என்பார்கள் சான்றோர்.

பகவானிடத்தில் பயபக்தி இருந்தால் நமக்கு யாவும் நல்லதே நடக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தேவை. இதைத்தான் அரோகதா என்றார்கள். சோம்பேறியாகத் தூங்கிக் கொண்டு இருக்கக் கூடாது. உடலுக்குத் தூங்குவது அவசியம் ஆனாலும் நாம் நம் கடமையில் தர்மத்தில் தூங்கிவிடக் கூடாது.

நல்ல பேச்சுத் திறன் (வாக்படுத்வம்) வேண்டும். அநுமாருக்கு அந்தத்திறமை அதிகம் உண்டு. அதனால் தான் சுக்ரீவனுக்கு ராமரின் நட்பு கிடைத்தது. எல்லோரிடத்திலும் ஒரே மாதரிப் பேசக் கூடாது. இடத்துக்குத் தகுந்தாற்போல் சமயத்துக்கேற்றாற்போலப் பேசவேண்டும். சினிமாவில் வருவது போல் நடிப்பாக இருக்கக்கூடாது. நிஜவாழ்க்கைக்கு ஏற்றாற் போல உண்மையாக இருக்க வேண்டும்.

இத்தனை நல்ல குணங்களும் சிறப்பும் அநுமாரிடம் இருந்தன. கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தார் பாலகிருஷ்ணன். அதற்காகப் பெருமுயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. விளையாட்டாகச் செய்தார். இங்கே ஸஞ்ஜீவி பர்வதத்தை விளையாட்டுப் போலத் தூக்கிக் கொண்டு பறந்தோடி வந்த பலசாலியா இந்த அநுமான் என்று தோன்றும்படி ராமநாமம் ஒலிக்குமிடமெல்லாம் யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் - பணிவாக அடக்கமே உருவாக அமர்ந்து ராமரஸத்தில் மதுர ரஸத்தில் மூழ்கித்திளைத்திருப்பார். அந்த அடக்கம்தான் அவரை உச்சநிலைக்கு உயர்த்தியது. அவரை வழிபடுவதால் நினைப்பதால் நமக்கும் அவை கிட்டும் ராமாயணக் கதைகளும் பாரதக் கதைகளும் நமக்கு நல்ல புத்தியைப் புகட்டுகின்றன.

பாரதக் கதையிலிருந்து தீய ஆசைகளை நாம் கொள்ளக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தீயவனான துரியோதனனின் பக்கம் கௌரவரின் பக்கத்தில் இருந்ததால் பீஷ்மர், துரோணர் போன்ற பெரியவர்களும் அழிந்து விட்டனர். குருபக்திக்கு ஏகலைவனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அர்ச்சுனனுக்கு நிகராக மற்றொரு வில்வீரன் இருக்கக் கூடாது என்னும் எண்ணத்தில் துரோணாசாரியார் கேட்டபோது தன் கட்டை விரலையே காணிக்கையாகக் கொடுத்தான் அல்லவா? அவனுடைய குரு பக்தியைப் பாராட்ட வேண்டும்.

வாலியும் சுக்ரீவனும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் தாம். இருந்தாலும் அவர்களிடம் ஒற்றுமை இல்லை. அவர்களை நாம் பின்பற்றக் கூடாது. சகோதரனாக இருந்தாலும் தீய வழியில் சென்றால் அவனை விட்டுவிட வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விபீஷணன் விளங்குகிறான். நாம் ராம லட்சுமண பரத சத்ருக்னர் போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ராமாயணமும் பாரதமும் நமக்கு நல்ல அறிவுரைகளை வழங்குகின்றன. மகாத்மா காந்தி அடிகளும் "ஸப்கோ ஸன்மதி தே பகவான்" என்று எல்லாருக்கும் நல்ல புத்தியை வழங்க பகவானைப் பிரார்த்தித்தார்.

பெற்ற தாயாக இருந்தாலும் தர்மத்தை விட்டுச் சிறிதும் விலகாமல் தம் பிள்ளைகளுக்கு ஆசிகளை வழங்கும் கௌசல்யை, காந்தாரி அவர்களின் பாங்கினை நாம் கவனிக்க வேண்டும்.

ராஜ்யத்தைத் துறந்து காட்டுக்குச் செல்லும் ராமன் தாயை வணங்குகிறான். கோசலை அப்போது "தர்மஸ்த்வாம் அபிரக்ஷது" நீ உறுதியுடன் கடைப் பிடிக்கும் தர்மம் உண்னைக் காப்பாற்றட்டும் என்று ஆசீர்வதிக்கிறாள். போருக்குப் புறப்படும் துர்யோதனன் தாயை வணங்குகிறான். காந்தாரி அப்போது, "யதோதர்மஸ்ததோஜய:" தர்மம் எங்கே இருக்கிறதோ அங்கே வெற்றி உண்டாகட்டும் என்று தான் ஆசிகளை வழங்குகிறாள். தன் பிள்ளைக்கு வெற்றி கிட்டும் என்று அவள் நினைக்கக் கூட இல்லை. எனவே அவன் போர்க்களத்தில் விழுந்துமடிகிறான்.

ஹநுமான், விபீஷணன் இருவருமே சிரஞ்ஜீவிகள். அதுமட்டுமல்ல சமய சஞ்ஜீவிகள். ஆபத்துக் காலத்தில் சஞ்ஜீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து காப்பாற்றியவர் ஹநுமார். ஆபத்து கிட்டே நெருங்கிய போது அறிவுரைகளை ஏற்காத அண்ணனை விட்டு அண்ணலை- ராமரை அடைந்ததால்தான் தர்மம் வென்றது. இருவருமே சமயம் அறிந்து செயல்பட்டவர்கள்.

சரித்திர நாயகர்கள் (வரலாறு படைத்தவர்) அனைவருமே தியாகம் புரிந்தவர்கள். தன்னலம் அற்றவர்கள். அதுதான் நம்நாட்டுக்கு இப்போது தேவை. அந்த வழியிலே நீங்களும் சென்று வெற்றி வீரர்களாகத் திகழ்வீராக.

ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.

 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+