home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஆஞ்சநேயர் அருள்

 

Kanchi periyava காஞ்சி ஸ்ரீ பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்


உடல் வலிமை இருந்தால் தான் எந்த ஒரு காரியத்தையும் திறம்படச் செய்ய முடியும். அதற்காகத் தான் சரீரத்திற்கு வலிமை மிகவும் அவசியம் என்கிறோம். வெறும் உடல் வலிமை மாத்திரம் இருந்தால் சண்டைக்குப் போகத் தோன்றும். வெறும் புத்தி வலிமை மாத்திரம் இருந்தால் வெறுமனே திட்டம் போடுவதிலேயே இருக்குமே தவிர, வேலைக்கு ஒன்றும் லாயக்குப்படாது. ஆக, உடல் வலிமையும், புத்தி வலிமையும் ஒரு மனிதனிடம் ஒருசேர சேர்ந்திருந்தால், ஒரு காரியத்தைச் சாதிப்பதற்கு, புத்தி வலிமையை வைத்துக் கொண்டு 'பிளான்கள்' போட முடியும். அதனால்தான் 'பௌத்திகசாரீர்' என்று வைத்து, உடல் வலிமை புத்தி வலிமை எல்லாவற்றையும் சேர்த்து உபயோகப்படுத்த வைத்தார்கள். உடல் வலிமை புத்தி வலிமை இரண்டும் இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்குச் சேவை செய்ய முடியும்.

ஹனுமாரிடம் இத்தனை நல்ல குணங்களும் இருக்கின்றன.

புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹநூமத்ஸ்மரணாத்பவேத்

அனுமாரைப் பிரார்த்தனை செய்தால், பூஜை செய்தால், நல்ல புத்தி, நல்ல சக்தி இதெல்லாம் கிடைக்கும். அவரை நினைத்த மாத்திரத்திலே இதெல்லாம் வரும். பலம் வரும். தேகபலம், மனோபலம்,புத்தி பலம் இப்படி எல்லாபலமும் வரும். நல்ல காரியங்களைச் செய்வதற்கு தைரியம் வேண்டும். அப்போது அது கிடைக்கும், கோழையாக இருக்கக் கூடாது. கோழைத்தனம் எப்போது வர வேண்டுமென்றால் தீய காரியம் செய்யும்போது கோழைத்தனம் வந்து அதிலிருந்து ஒதுங்க வேண்டும். அதைப்போய் தைரியமாய்ச் செய்யக் கூடாது. சோம்பேறித்தனம்தான் என்பது நம் வாழ்க்கையில் இருக்கவே கூடாது. சோம்பேறித்தனம்தான் மனிதனின் முதல் சத்ரு. வெளியிலிருந்து வரக்கூடிய மற்ற சத்ருக்களைக் காட்டிலும், நம்மிடையே நாமே வளர்த்துக் கொள்ளும் இந்தச் சோம்பலாகிய சத்ருதான் மிகவும் ஆபத்தானது. அதை முதலில் ஒழிக்க வேண்டும். இது எல்லாவற்றை காட்டிலும், எந்த இடத்தில் எப்படிப் பேசினால் சரியாக இருக்கும் என்று தெரிந்து பேச வேண்டும். தைரியமாய்ப் பேச வேண்டிய இடத்தில் தைரியமாய்ப் பேச வேண்டும். பணிவாய்ப் பேச வேண்டிய இடத்தில் பணிவாய்ப் பேச வேண்டும். பக்தியாய்ப் பேச வேண்டிய இடத்தில் பக்தியாய்ப் பேச வேண்டும். அதாவது அனுமார் எப்படிப் பேசுவாரோ அப்படிப் பேச வேண்டும்.

அனுமார் ராவண தர்பாரில் இருந்தபோது கம்பீரமாய்ப் பேசுவார். சீதையிடம் வரும்போது பணிவாய்ப் பேசுவார். ராமரிடம் பேசும்போது பக்தியாய்ப் பேசுவார். சுக்ரீவனிடம் வரும்போது வேறு மாதரியாய்ப் பேசுவார். வானர சைன்யத்துடன் பேசும்போது ஒரு தினுசாய்ப் பேசுவார். அப்படி எந்தெந்த இடத்தில் பேசும்போது எப்படிப் பேச வேண்டும் என்பது பெரிய கலை.

எப்போதுமே ஒரே மாதிரியாய்ப் பேசிக் கொண்டிருக்கக்கூடாது. இந்தக் கலை, நெளிவு சுளிவு நமக்குத் தெரிந்தால்தான் நாம் எப்படிப் பட்டவர்கள் என்று மற்றவர்களுக்குப் புரியாமல் இருக்கும். எப்போது பார்த்தாலும் கத்திக் கொண்டிருந்தாலோ, எப்போது பார்த்தாலும் மெதுவாய்ப் பேசினாலோ ஸ்வாரஸ்யப் படாது.

அரசியலில் தூக்கி வைத்து பேசுகிறார்களே அந்த வழியில்லை அது. விஷயத்தில் நல்ல விஷயமாகப் பேச வேண்டும்.

இந்த மாதிரி நல்ல பண்புடன் எல்லாம் நமக்கு வர வேண்டுமென்றால் ஆஞ்சநேய ஸ்வாமியினுடைய அருள் நமக்கு வரவேண்டும். அந்த அனுமான்போல் நாமெல்லாம் நாட்டுக்குச் சேவை செய்கிறோம். ராமருக்கு எத்தனையோ பேர் சேவை செய்தார்கள். சுக்ரீவன், லட்சுமணன், விபீஷணன், சீதை இப்படிப் பலபேர் சேவை செய்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருந்தது. அண்ணன் என்ற உறவு லட்சுமணனுக்கு இருந்தது. ராஜ்யம் கிடைக்குமா என்று விபூஷணனுக்கு ஆசை இருந்தது. ஆனால் ஹனுமானுடைய சேவையில் எந்தப் பின்னணியுமே கிடையாது. 'விஸ்வார்த்த சேவா, ஸ்வயம் சேவா' என்பார்கள். பிரதிபலனை எதுவும் எதிர்பார்க்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பணி புரிந்தவர் ஹனுமான். அவருடைய உள்ளத்திலே இருந்தது ஒன்றே ஒன்றுதான். அது ராமர் உட்காரக்கூடிய இடமாய் இருந்தது. வேறு எந்த விதமான சிந்தனையும் ஆசையும் அவருக்குக் கிடையாது. எந்த வாழ்க்கை பண்ணினாலும், வியாபரம் பண்ணினாலும், உத்யோகம் பண்ணினாலும் அது இல்லற வாழ்க்கை, தேச வாழ்க்கை என்று வரும்போது ஆத்மார்த்தமாக, பலனே எதிர்பார்க்காமல், புத்தி பூர்வமாக, சேவை செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஸ்வயம் சேவையெல்லாம் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் அதுபோல் நல்ல சேவை செய்து கொண்டு, ஆன்மிக வாழ்வு வாழ்ந்துகொண்டு, தேச பக்தியுடன், அதே சமயத்தில் தேசத்துக்கும், கலாசாரத்துக்கும் நல்ல சேவைகளெல்லாம் செய்துகொண்டு வாழ வேண்டும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: என்பார்கள். தர்மத்தை நாம் காப்பாற்றினால் அது நம்மைக் காப்பாற்றும். தர்மத்தை வாழ்க்கையில் காப்பாற்ற வேண்டும் என்றால் கடைப்பிடிக்க வேண்டும் என்று அர்த்தம். தர்மத்தின்படி நடக்க வேண்டும். தந்தையிடம் இப்படி நடக்க வேண்டும். ஆசிரியரிடம் இப்படி நடக்க வேண்டும். பெற்றோரிடம் இப்படி நடக்க வேண்டும். நாட்டுக்காக இன்னது செய்ய வேண்டும் என்று இருக்கிறதே, அதன்படி நடப்பதுதான் தர்மத்தைக் காப்பது.

அப்படி தர்மத்தைக் காப்பதற்கு யார் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சேவை செய்வார்களோ, அதற்கு தர்மரக்ஷணம் என்று பெயர். அப்படிச் செய்தால் அந்த தர்மதேவதை நம்மைக் காக்கும். அதன்படி ஒவ்வொருவரும் நம்மாலான நல்ல பணிகளைச் செய்து, ஆத்ம திருப்தியடைந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எல்லா நலன்களும் கிடைக்க வேண்டுமாய் வாழ்த்தி ஆசீர்வதிக்கிறோம்.

ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.

 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+