home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள் சமீபத்திய சேர்க்கை
boat

-புதிய பக்தர்களை வரவேற்கவும், க்ஷேத்திரத்தின் வளர்ச்சிக்காகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், பனஸ்வாடி, பெங்களூரு

ஸ்ரீ ஹரி சுந்தர்

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், பனஸ்வாடி, பெங்களூரு - கூகிள் மேப் தெருக் காட்சி


பெங்களூரு

கோட்டையும் பேட்டையும் இன்றைய பெங்களூரு நகரத்திற்கு அடித்தளமாக அமைந்தன. ஆங்கிலேயர்கள் ஒரு பாசறையை அமைத்தவுடன், அது வளரத் தொடங்கியது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, கனரகத் தொழில்கள் வந்தன, பெங்களூரு மேலும் வளர்ந்தது. தகவல் தொழில்நுட்பத் தொழில்கள் பெருமளவில் வந்ததால், நகரத்தை நிர்வகிப்பது ஒரு கடினமான பணியாக மாறியது. யெலஹங்கா, ஹெப்பால் மற்றும் அனேகல், ஒவ்வொன்றும் அதன் சொந்த கிராமப்புற வரலாறுகளைக் கொண்டிருந்தாலும், நகர்ப்புறப் பகுதிக்குள் வந்ததால் பழங்காலத்தின் அழகை இழந்தன.

பின்னர், இறுதியாக, இந்நகரம் 1986 இல், நகரம் பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம் என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இது கிராமங்கள் தங்கள் சமூக மற்றும் வரலாற்று அடையாளத்தை இழப்பதை ஓரளவுக்குத் தடுத்தது. ஆனால், அதுவரை பெங்களூரு நகரத்துடன் இணைந்திருந்த பல கிராமங்கள், தங்கள் பெயரைத் தவிர மற்ற அடையாளங்களை இழந்திருந்தன.

கர்நாடகாவின் கிராமங்கள்

ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியின் முகப்பில் உள்ள 'ஸ்ரீராம கான மோஹிதா' ஸ்ரீ ஆஞ்சநேயரின் சுதைச் சிற்பம். இந்தியாவில், ஒரு பகுதியின் இயற்கை அம்சங்கள், வரலாற்று முக்கியத்துவம் அல்லது குடியேற்றம் ஆகியவற்றுடன் தொடர்பை வைத்து தான் அவ்விடத்திற்குகோ அல்லது கிராமத்திற்கோ பெயர் சூட்டப்படுகிறது. கர்நாடகா இதற்கு விதிவிலக்கல்ல, பல கிராமங்களுக்கு இந்த அடிப்படையில் பெயரிடப்பட்டது. "ஹள்ளி" மற்றும் "வாடி" என்ற இரண்டு பொதுவான பின்னொட்டுகளாக இங்கு கிராமப் பெயர்களில் அடிக்கடி காணப்படுகின்றது. இரண்டு சொற்களும் கன்னடத்தில் "கிராமம்" அல்லது "குடியேற்றம்" என்று பொருள்படும். இன்றைய பெங்களூரில், 'ஹள்ளி' என்ற பின்னொட்டுடன் கூடிய இடங்களை நாம் ஏராளமாகக் காண்கிறோம்; அவற்றில் பல கிராமங்களாக இருந்து, இப்போது நகரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன.

பாரம்பரியமாக, ஒவ்வொரு கிராமத்திற்கும் 'கிராம தேவதை' என்று அழைக்கப்படும் ஒரு தெய்வம் உண்டு. செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக அந்த தெய்வம் வணங்கப்படுகிறது. பல கிராமங்களில் கிராமத்தின் பாதுகாவலராகவும், எதிரிகள் மற்றும் தீமைகளிலிருந்து காப்பவராகவும் இரண்டாவது தெய்வமாக ’எல்லை தெய்வம்’ உள்ளது. சில கிராமங்களில், தனி எல்லை தெய்வம் இல்லை. 'கிராம தேவதை' கிராமத்திற்குள் நிறுவப்பட்டிருக்கும்போது, எல்லை தெய்வம் கிராமத்தின் எல்லையில் நிறுவப்படுகிறது. இந்த தெய்வங்கள் கிராமத்திற்கு கிராமம் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களில் வேறுபடுகின்றன. ஸ்ரீ ஆதி சங்கரர் சிருங்கேரியில் பீடத்தை நிறுவியபோது, சிருங்கேரியைப் பாதுகாக்க காலபைரவர், ஆஞ்சநேயர், துர்காம்பா மற்றும் காளிகாம்பா ஆகிய நான்கு காவல் தெய்வங்களை நிறுவினார். இதைத் தொடக்கமாகக் கொண்டு, ஆஞ்சநேயரை காவல் தெய்வமாக வழிபடும் வழக்கம் கர்நாடகா, தெற்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் பரவலாகியது. ஸ்ரீ வியாசராஜர் ஸ்ரீ ஆஞ்சநேயரை பாதுகாப்புத் தெய்வமாகப் பரப்பியதன் மூலம் இந்த வழக்கம் மேலும் வேரூன்றியது.

சிருங்கேரி "ஸ்ரீ கரே ஆஞ்சநேயர் கோயில்" பற்றிய விரிவான தகவல்களை வாசகர்கள் எங்கள் தளத்தில் காணலாம்.

வடகிழக்கு பெங்களூரு

பெங்களூரின் வடகிழக்குப் பகுதியில், கச்சரகனஹள்ளி, லிங்கராஜபுரம், பையப்பனஹள்ளி, ஜீவனஹள்ளி, கரியன்னபாளையம், கடுகுண்டனஹள்ளி, செல்லகெரே, ஹென்னூர், மேகனஹள்ளி, தொட்ட பனசவாடி மற்றும் சிக்க பனசவாடி உள்ளிட்ட பல கிராமங்கள் பெங்களூர் நகரமயமாகியதில் அடங்கியுள்ளன. இந்தப் பகுதி இராணுவப் பாசறைக்கு அருகில் இருந்ததால், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இங்கு குடியேற ஈர்க்கப்பட்டனர். இதன் மூலம், முதலில் லிங்கராஜபுரத்திலும், அதைத் தொடர்ந்து கம்மனஹள்ளி போன்ற இடங்களிலும் வளர்ச்சி தொடங்கியது.

ஸ்ரீ ஆதி சங்கரர் சிருங்கேரியில் பீடத்தை நிறுவியபோது, சிருங்கேரியைப் பாதுகாக்க காளபைரவர், ஆஞ்சநேயர், துர்காம்பா மற்றும் காளிகாம்பா ஆகிய நான்கு காவல் தெய்வங்களை நிறுவினார். இதைத் தொடக்கமாகக் கொண்டு, ஆஞ்சநேயரை காவல் தெய்வமாக வழிபடும் வழக்கம் கர்நாடகா, தெற்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் பரவலாகியது. ஸ்ரீ வியாசராஜர் ஸ்ரீ ஆஞ்சநேயரை பாதுகாப்புத் தெய்வமாகப் பரப்பியதன் மூலம் இந்த வழக்கம் மேலும் வேரூன்றியது.


இந்த கிராமங்களில் நெல், கேழ்வரகு, உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகள் மற்றும் சாமந்தி, மல்லிகை போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களை விழுங்கி, பங்களாக்களுக்கும் தேவாலயங்களுக்கும் நகரமயமாதலுக்கு வழிவிட்டது.

பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னோடியான நகர மேம்பாட்டு அறக்கட்டளை வாரியம் இந்த பகுதிகளை மேம்படுத்தியது. லிங்கராஜபுரத்தை விட கம்மனஹள்ளி வேகமாக வளர்ந்து, அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களை ஈர்த்தது. பல கிராமங்கள் தங்கள் அடையாளங்களை இழந்து கம்மனஹள்ளியின் ஒரு பகுதியாக மாறிய போதிலும், அது இறுதியில் பன்முகத்தன்மை கொண்டதாகவும், ஒரு பன்னாட்டுப் பெருநகரப் பெயரையும் பெற்றது. இருப்பினும், பானசவாடி என்ற ஒரு கிராமம் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளால் தனது அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

பானசவாடி

கம்மனஹள்ளி தனது பெயரை நிலைநாட்டுவதற்கு முன்பே, பானசவாடி பல பெங்களூருவாசிகளுக்கு நன்கு அறியப்பட்ட இடமாக இருந்தது. பானசவாடியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், அக்கோவிலின் மூலவரின் கண்களிலிருந்து வழியும் கண்ணீருக்காகப் புகழ்பெற்றது.

அதன் புவியியல் அளவு காரணமாக, இந்த கிராமம் தொட்ட பானசவாடி மற்றும் சிக்க பானசவாடி என இரண்டு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. கன்னட மொழியில் தொட்ட என்றால் பெரியது, மற்றும் சிக்க என்றால் சிறியது என்று பொருள். இந்த கோவில் தொட்ட பானசவாடியில் அமைந்துள்ளது. சிஐடி-யால் இந்த பகுதி மேம்படுத்தப்படுவதற்கு முன்பு, நகரத்திலிருந்து நேரடி பேருந்து வசதிகள் இல்லாததால், பல பெங்களூருவாசிகள் டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் போன்ற வழக்கத்திற்கு மாறான போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்தி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வந்தனர் என்பது குறிப்பிட தக்கது.

ஸ்ரீ ஜி.கே. கௌஷிக் பகிர்ந்த நினைவுகள்:

"எங்கள் அம்மா இந்தக் கோவிலுக்குச் சென்றதாக என் அண்ணன் என்னிடம் கூறியது எனக்கு நினைவிருக்கிறது..." 1950-களில், ஒரு குறிப்பிட்ட இடம் வரை பேருந்தில் சென்று, பின்னர் வயல்வெளிகள் வழியாக நடந்து கோயிலை அடைவது வழக்கம். நான் 1973-லும், பின்னர் 1983-லும் இந்த கோவிலுக்குச் சென்றிருந்தேன், அப்போதும் கிராமப்புறச் சூழல் அங்கு முழுமையாக நிலவியது.

ஆஞ்சநேயர் கோவில்

ஸ்ரீ ராமர் சன்னதி முகப்பில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதை, ஸ்ரீ லட்சுமணர் ஆகியோரின் சுதைச் சிற்பம். பக்தர்களின் தாராளமான நன்கொடைகளால், காலப்போக்கில் இறைவனின் ஒரு எளிய ஆலயம், ராஜகோபுரம், ஸ்ரீ ராம பரிவாரத்திற்கான சன்னதி, பஸவேஸ்வரர் [சிவன்] சன்னதி, அன்னதானக் கூடம், திருமண மண்டபம் போன்றவற்றுடன் ஒரு பெரிய கோவிலாக வளர்ந்துள்ளது. பழமையான ஆலமரமும் ஸ்ரீ ஆஞ்சநேயரும் இந்த வளர்ச்சிகளுக்கு சாட்சியாக இருந்துள்ளனர்.

கோவிலை அடைய பான்ஸ்வாடியின் குறுகிய சாலைகள் வழியாகச் செல்ல வேண்டும். வடக்கு நோக்கி அமைந்துள்ள மூன்று நிலை ராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும், திறந்தவெளி முற்றத்தில் இடதுபுறம் ஒரு பிரம்மாண்டமான பழமையான ஆலமரம் உள்ளது. ஸ்ரீ ராம பரிவாரத்திற்கான சன்னதியின் நுழைவாயில் நேராகத் தெளிவாகத் தெரிகிறது, அதன் முகப்பில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதை மற்றும் ஸ்ரீ லட்சுமணர் ஆகியோரின் அழகாகச் செதுக்கப்பட்ட சுதைச் சிற்பம் உள்ளது. இடது மூலையில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கான சன்னதி உள்ளது, அதன் முகப்பில் 'ஸ்ரீராம கான மோகித' ஆஞ்சநேயரின் சுதைச் சிற்பம் உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதி ஆலமரத்தின் அடியில் அமைந்துள்ளது என்பதை காணலாம்.

பக்தர் முதலில் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசித்து, சன்னதியைச் சுற்றி வந்து [பிரதட்சிணம் செய்து], பின்னர் ஸ்ரீ ராமரை தரிசிக்கச் செல்கிறார்.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி, பான்ஸ்வாடி, பெங்களூரு. இந்த விக்கிரகம் ஒரே கல்லால் ஆன சிலை வகையைச் சேர்ந்தது, இது ஒரு பெரிய ஒற்றைக் கல் தொகுதியிலிருந்து செதுக்கப்பட்டுள்ளது. 'பிரபை'யுடன் புடைப்புச் சிற்ப பாணியில் செதுக்கப்பட்ட இறைவனின் சிலை, ஏறக்குறைய நான்கு அடி உயரம் கொண்டது.

சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது, மேலும் இறைவன் தெற்கு நோக்கி நடப்பது போல் காட்சியளிக்கிறார். இறைவன் தனது தாமரைப் பாதங்களில் 'தண்டை' மற்றும் 'நூபுரம்' அணிந்துள்ளார். இறைவனின் வால் அவரது தாமரைப் பாதங்களுக்கு அருகில் காணப்படுகிறது. பாரம்பரிய கச்சம் பாணியில் உடுத்தப்பட்ட வேட்டி, ஒரு அலங்கார இடுப்புப் பட்டையால் பிடிக்கப்பட்டுள்ளது, ஒரு 'பிச்வா' [போர்க் கத்தி]யும் காணப்படுகிறது. மார்பில் யக்ஞோபவீதம் மற்றும் சில மாலைகள் காணப்படுகின்றன. அலங்காரக் கங்கணங்கள் அவரது மணிக்கட்டையும், கேயூரம் மேல் கையையும் அலங்கரிக்கின்றன. கேயூரம் அவரது புஜ பலத்தை எடுத்துக் காட்டுகிறது. அவரது இடது கையில் சௌகந்திக மலரை ஏந்தியிருக்கிறார், மேலும் அவரது வலது கை அபய முத்திரையில் உயர்த்தப்பட்டு, இறைவன் தனது பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குகிறார்.

அழகான கன்னங்கள், பரந்த நெற்றி, குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட காதுகள், எல்லாவற்றிற்கும் மேலாக, பெரிய மற்றும் ஒளிரும் கண்கள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரது தலையில் உள்ள கிரீடம் அவரது தெய்வீக அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், பனஸ்வாடி, பெங்களூரு"

 

அனுபவம்
இறைவன் தனது பக்தர்களுக்கு அருள்புரிவதற்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இந்த க்ஷேத்திரத்திற்குச் சென்று, தரிசனம் பெற்று, வாழ்க்கையில் சிறந்தவற்றை நீதியான வழியில் அடைவதற்கான நம்பிக்கையை மீண்டும் பெறுங்கள்.       

தமிழாக்கம் : ::
பதிப்பு:  ஜூன் 2026


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+