home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

சுயம்பூ மால் மாருதி மந்திர், பெல்காவி, கர்நாடகா


சுயம்பூ மால் மாருதி மந்திர், பெல்காவி, கர்நாடகா

டாக்டர். கௌசல்யா


பெல்காம் / பெல்காவி

பெல்காம் அதிகாரப்பூர்வமாக பெல்காவி என்று அழைக்கப்படுகிறது, இது பெல்காம் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமாகும். கர்நாடக மாநிலத்தின் வடக்கு முனையில் உள்ள இந்நகரத்தின் மேற்கில் கோவாவும் வடமேற்கில் மகாராஷ்டிராவும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது. இது கர்நாடகாவின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும். இது கர்நாடகாவின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதலில் வேணுக்ரமா (மூங்கில் நகரம்) இருந்த பெல்காம் நகரம் அதன் விசித்திரமான புவியியல் இருப்பிடத்தின் காரணமாக கலாச்சாரங்களின் புதையல் நகரமாகும். மனதை மயக்கும் சஹாயத்ரி (மேற்குத் தொடர்ச்சி மலையின்)மலையடிவாரத்தில், கட்டபிரபாவின் முக்கியமான துணை நதியான மார்க்கண்டேயா நதி வடகிழக்காக ஓட இந்நகரம் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகு மற்றும் சூழல், நிலப்பரப்பு, தாவரங்கள் சீதோஷ்ணநிலை ஆகியவை எப்படி கெலிடோஸ்கோப்பில் காட்சிகள் மிகவும் விரைவாக மாறுமோ அது மாதரி மாறுகிறது. அப்பொழுது இது ஒரு உண்மையான சொர்க்கமாக அல்லது "ஏழை மனிதனின் சுவிட்சர்லாந்தாக" மாறுகிறது.

பெல்காமின் ஆட்சியாளர்கள்

பன்னிரண்டாம் நூற்றாண்டின் போது ரட்டா வம்சம் அருகிலுள்ள சௌண்டட்டியில் இருந்து இடம்பெயர்ந்து மூங்கில் [சமஸ்கிருத மொழியில் வேணு] மரங்களால் மூடப்பட்டிருந்த இந்த இடத்தில் நகரத்தை நிறுவி நகரத்திற்கு “வேணுகிரமா” என்று பெயரிட்டனர். பின்னர் இந்நகரம் “வேணுபுரா” என்று அழைக்கப்பட்டது. பெல்காம் கோட்டையின் உள்ளே காணப்படும் தூண்களில் நகரி எழுத்துகளில் கன்னட கல்வெட்டுகள் உள்ளன, அவற்றில் ஒன்று 1199 ஆம் ஆண்டு ரட்டா மன்னன் நான்காம் ஶ்ரீகர்த்தவீரிய்யா காலத்தினை சேர்ந்தது.

பெல்காம் பின்பு யாதவ வம்சம், கில்ஜி வம்சம், விஜயநகர பேரரசு, பாமினி சுல்தானேட், பிஜாப்பூர் சுல்தானேட், முகலாயர்கள், மராத்தா-பேஷ்வாகள், மைசூர் இராஜ்யம், பின்னர் கிட்டூர் சென்னம்மா, ஆங்கிலேயர்கள் போன்ற பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது.

இந்த நகரம் கலாச்சாரத்தில் துடிப்பாக இருக்கும், ஏனெனில் இது வெவ்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது, மேலும் கொங்கன், மராட்டி மற்றும் கன்னடா என்று பல மொழிகள் பேசுபவர்கள், பலதரப்பட்ட கலாசாரத்தை பின்பற்றுபவர்கள் ஒன்றிணைந்து வாழும் நகரம் இது.

பெல்காம் கோயில்கள்

ஸ்ரீ விநாயகர், சிவன், பார்வதி, ஹரி தெய்வங்களுக்கு நகரத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. அதிக கோவில்கள் ஸ்ரீ அனுமனுக்கு இருப்பதற்கான தனித்துவம் இந்த நகரத்திற்கு உள்ளது. அவைகளில் பல பல நூற்றாண்டுகள் பழமையானவ என்பது இன்னும் விசேடம். நான் சமீபத்தில் இந்நகரத்திற்குச் சென்றிருந்தபோது, ​ஒரு நாத்திகரால் ஒரு ஹனுமார் மந்திர்க்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு தனி அனுபவம் எனக்கு ஏற்பட்டது!

ஸ்ரீ ஹனுமான் மந்திர் 

ஸ்ரீ ஹனுமான் மந்திரை அடைய சமீபத்திய ஆண்டுகளில் வந்துள்ள ஒரு பெரிய காலனி வழியாக நாங்கள் சென்றோம். தூரத்திலிருந்தே ஹனுமான் மந்திரின் பார்வை கண்களுக்கு இனிமையானது. பச்சை நிற பெரிய நிலப்பரப்புக்கு இடையே சிவப்பு நிற தனித்துவமான கட்டிடக் கட்டமைப்புடன் அமைந்திருந்த மந்திர் பார்க்க கண்களுக்கு இனிமையாக இருந்தது. என் நாத்திக நண்பர் ஒருவர் இந்த கோயிலுக்கு வருகை தருவதில் ஆச்சரியமில்லை. அவர் இந்த கோவிலுக்கு வருவதும், கோயிலுக்குச் செல்லும் படிகளில் மணிக்கணக்கில் உட்கார்ந்து, இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களைப் பார்ப்பதும் வழக்கமாம். அவர் கூறும் காரணங்கள் என்னவென்றால் சுற்றியுள்ள பசுமையின் இனிமை மனதை அமைதிப்படுத்தும், கூடுதலாக, இறைவனிடம் தங்கள் மன குறையை கூறவருபவர்களை பார்த்தால் என் நண்பருக்கு பிரச்சினையில் உள்ள ஒரே நபர் தான் மட்டும் அல்ல என்பது புரியுமாம். அல்லது தங்கள் விருப்பங்களை நிறைவேற்றியதற்காக நன்றியைத் தெரிவிக்க வரும் பக்தர்களைப் பார்க்கும்போது, ​தீர்வு இல்லாத ஒரு சிக்கலும் இல்லை என்பது விளங்குமாம். ஒரு குடியிருப்பு வளாகத்திற்குள் இருந்தபோதிலும் இந்த கோயில் மிகவும் அமைதியானது, நம்முள் நேர்மறை அதிர்வுகளை எவராலும் உணர முடியும். வழக்கம் போல் அவர் கோயிலுக்குச் செல்லும் படிகளின் நுழைவாயிலில் அமர்ந்து கொண்டார், எங்களை கோவிலில் பிரார்த்தனை செய்யச் செல்லச் சொன்னார்.

மந்திர்இன் தலப்புராணம்:

ஸ்ரீ பல்லப்பா நிகப்பா பூஜாரி, நிறுவனர் மால் மாருதி மந்திர், பெல்காம் கோவிலின் வயதான பூஜாரி என்னை வரவேற்றார். இந்த மந்திர் எவ்வாறு உருவானது என்பதை அவர் விவரித்தார். சுமார் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தாத்தா ஸ்ரீ பல்லப்பா நிகப்பா பூஜாரி என்ற விவசாயி ஒரு கனவு கண்டார். அவரது நிலத்தில் தான் இருப்பதாகவும் தன்னை வெளிக்கொணர வேண்டும் என்றும் பிரபு ஶ்ரீமாருதி கட்டளை இட்டார். அடுத்த நாள் அவரது தாத்தா ஶ்ரீமாருதியை தனது நிலத்தில் இறைவனின் வழிகாட்டலில் தேடிக்கொண்டிருந்தார். தினமும் அவர் பார்க்கும் அதே கருப்பு பெரிய கல் திடீரென்று, ஸ்ரீ மாருதியின் பிரதிபலிப்பைக் கொடுத்தது. கல்லை ஒரு நெருக்கமான நோக்கிய பொழுது ஸ்ரீ மாருதி உருவம் அதில் பதிந்திருப்பதும் அவரின் உருவை வெளிப்புற கோடுகளால் காணப்பட்டது. தாத்தா அக்கல்லை வெளி கொணர்ந்து ஶ்ரீமாருதியின் உருவத்தை அரிசி தானியத்தினால் [அக்ஷதை] கோடிட்டுக் காட்டத் தொடங்கினார். அவுட்லைன் முடிந்ததும் ஶ்ரீமாருதியின் உருவம் வெளிப்பட்டது, ஶ்ரீமாருதி ஆண்டவரின் சாந்தித்யத்தை உணர்ந்தார். அப்போது முதல் அவர் இம்மாருதியை வணங்கத் தொடங்கினார். அங்கு வரும் பக்தர்கள் அனைவரையும் இந்த கருமைமிகு கருங்கல்லில் அரிசி தானியம் வேய்து மாருதியை வணங்க அனுமதித்தார். அப்படி செய்யும் போது பகவான் அவர்களுக்கு முன்னால் உயிருடன் வருவதை பக்தர்கள் உணர்ந்தனர். அவரது தாத்தா மெதுவாக விவசாயத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். மற்றும் இரைவனை பூஜை மற்றும் பிரார்த்தனை செய்வதை தனது முக்கிய கடமையாக செய்தார். இன்று அவரது தாத்தா நிறுவிய அதே பாரம்பரியம் தொடர்கிறது. இக்கோயிலில் பக்தர்கள் அனைவரும் இறைவனுக்கு தாங்களே பூஜை செய்ய முடியும்.

ஸ்ரீ ஹனுமனுக்காக மந்திர்

அந்த நாட்களில் பெல்காவி இப்போது இருப்பது போல் வளரவில்லை. இந்த மந்திர் அந்த நாட்களில் பெல்காமின் மையத்தில் இருந்தது. இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீமாருதிக்கு கோவில் கட்ட ஆர்வம் காட்டிய பல பக்தர்களை ஈர்த்தார். பின்னர் தங்கள் குடும்பமும் மற்றும் பிற பல பக்தர்களின் தீவிர பங்களிப்புடன் இக்கோயில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ஸ்ரீ ரேணுகம்பாவின் மூர்த்தி நிறுவப்பட்டது பின்பு ஸ்ரீ மாருதியின் மூர்த்தம் நிறுவப்பட்டது.

மந்தீரின் செயல்பாடு 

சுயம்பூ மால் மாருதி மந்திர், பெல்காவி, கர்நாடகா அவரது தாத்தாவிற்கு ஶ்ரீமாருதி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஶ்ரீமாருதிக்கு வண்ண அரிசி தானியங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பூஜாரி தானே அலங்காரத்தை செய்யும் ஒரு சந்தர்ப்பம் அது. ஸ்ரீமாருதியை அலங்கரிக்கவும், கல்லில் இருந்து அவர் வெளிப்படவும் கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும். மந்திரில் தனது ஒரே வேலை மந்திரைத் திறந்து மூடுவதே என்று அவர் கூறும் அளவுக்கு தாழ்மையானவர். பக்தர்கள் அனுமனை வணங்க உதவி கேட்கும்போதெல்லாம் அவர் அவர்களுக்கு உதவி செய்வார் அவ்வளவே. மாருதி ஆர்த்திக்கு அறிமுகமில்லாதவர்களுக்காக ஆர்த்தி பாடலை அவர் பாடுவார், கற்பூரத்தை ஒளிரச் செய்வார், அந்த ஆர்த்தித் தகட்டை பக்தரிடம் காண்பிப்பார். அவர் அனுமனின் தாழ்மையான பக்தர் என்பதில் பெருமிதம் கொள்கிறார், மேலும் அனுமனின் மற்ற பக்தர்களுக்கு உதவுகிறார், இது ஸ்ரீ ராமருக்கு ஒரு சேவையாகும் என்பதில் பெருமிதம் கொள்கிறார்.

ஸ்ரீ ஹனுமான்

ஸ்ரீ மாருதியின் ஸ்வாம்பூ மூர்த்தம் பெரிய கருப்பு கல்லில் அமைந்துள்ளது. ஹனுமான் மூர்த்தியின் வெளிப்புறத்தை பாராட்ட பக்தர்களுக்கு சந்தன குழம்பினால் பிரபுவின் உருவஎல்லைகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ மாருதியின் மூர்த்தம் கிழக்கு நோக்கியுள்ளது. மாருதி சற்றே வளைந்த இடது காலை முதலில் வைத்து வடக்கு நோக்கி நடந்து செல்வதைக் காணலாம். அவரது கால்கள் இரண்டிலும் இறைவன் நூபுரம் அணிந்திருப்பதைக் காணலாம். பிரபுவின் இடது கை அவரது இடது தொடையிலுள்ளது, அக்கையில் கதையை பிடித்திருப்பதையும் காணலாம். பகைவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்று உறுதியளிப்பதைப் போல் இறைவனின் வலது கை அபய முத்திரை காட்டுகிறது. அவரது இரு மணிக்கட்டுகளிலும் அவர் கங்கணம் அணிந்துள்ளார், மேலும் இரு கைகளிலும் 'பூஜவலயம்' காணப்படுகிறது. இறைவன் இடுப்பில் கச்சம் அணிந்திருக்கிறார். அவரது மார்பில் அவர் இரண்டு மாலைகள் அணிந்துள்ளார், அவர் தலையில் அணிந்திருக்கும் கிரீடத்தையும் மீறி அவரது கேசம் வெளியே பாய்கிறது. அவர் கற்கள் பதித்த காதணி அணிந்துள்ளார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "சுயம்பூ மால் மாருதி மந்திர், பெல்காவி"

 

அனுபவம்
மாருதி தனது பக்தர்களின் தொல்லைகளை நீக்குவதற்காக இங்கு சுயம்பூவாக வந்துள்ளார், இந்த க்ஷேத்திரத்தில் சுயம்பூ சுவாமியை பிராத்தித்து, எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபடுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+