ஶ்ரீ அரங்கநாதன் திருக்கோயில் ஶ்ரீஆஞ்சநேயர், காரமடை, கோயம்பத்தூர், தமிழ்நாடு

ஜீ.கே.கௌசிக்

 

ஶ்ரீ அரங்கநாதன் திருக்கோயில், காரமடை, கோயம்பத்தூர், தமிழ்நாடுகாரமடை
கோயம்பத்தூர் மேட்டுபாளையம் நெடுஞ்சாலையில் மேட்டுபாளையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் அமைதியான தலம் காரமடை. அருகில் பவானி நதி ஓடுகிறது. காரமடையை சுற்றி பல நீர்நிலயங்கள் உள்ளன. நீர் தேக்கி வைக்கும் இடத்தை மடை என்று கூறுவார்கள். இங்கு காரை செடி அதிகம் வளர்வதால் இவ்விடத்திற்கு காரமடை என்று பெயர் வந்தது. வளமான பசுமை நிறைந்த இடம் என்பதால் இங்கு கால்நடைகளுக்கு மேச்சலுக்கு ஏற்ற இடமாகவும் இருந்ததால் இங்கு இடையர்கள் அதிகம். காரம்பசுகள் இங்கு அதிகம் காணப்படுகிறது.

காரமடை அடிப்படையில் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர், இவ்விடம் ஶ்ரீஅரங்கநாத சுவாமி மற்றும் ஶ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்களுக்காகவும் பிரபலம். பெரிய அளவில் இரும்பு ஆலை இங்கு ஆரம்பித்த பிறகு இவ்விடம் வளர ஆரம்பித்தது. காரமடையில் உள்ள பழமையான திருக்கோயில்களை இரும்பு ஆலையின் உதவியினால் புனரமைத்தனர்.

ஶ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோயில்
ஶ்ரீஅரங்கநாத சுவாமி வைணவர்களுக்கு மிகவும் முக்கியமாக பூஜிக்கும் தெய்வம். ஶ்ரீரங்கத்தில் இவர் கோயில் கொண்டிருப்பதால் வைணவர்கள் ஶ்ரீரங்கத்தையே கோயில் என்று கூறுவர்கள். ஶ்ரீஅரங்கநாதர் பக்தர்களுக்கு அருள காரமடையில் சுயமாக எப்படி வந்தார் என்பது மிகவும் சுவாரஸ்யமான செய்தி.

காரமடையில் இறைவன் வெளிப்பட்டார்
காரை மரங்களால் ஆன வனமாக இருந்தது இப்பகுதி. இடையர்கள் இப்பகுதியில் தங்கள் மாடுகளை மேச்சலுக்கு அழைத்து வருவார்கள். அப்படி மந்தையிலிருந்து ஒரு காரா பசு மட்டும் தனியாகி, வனபகுதியில் சென்று விடும். வீடு திரும்பும் பொழுது மந்தையில் சேர்ந்துக் கொள்ளும். ஒரு குறிப்பிட்ட பசு மட்டும் பால் குறைவாக கொடுப்பதை கவனித்தார்கள். அப்பசுவை கண்காணிக்க ஆரம்பித்த பொழுது அது மந்தையிலிருந்து தனித்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால்சுறப்பதை கண்டனர். அந்த இடத்தை தோண்டிய பொழுது அங்கிருந்து குருதி வருவதைக் கண்டவர், ஊருக்குள் ஓடி ஊர் மக்களிடம் நடந்ததை கூறினார்.

ஶ்ரீ அரங்கநாதன் திருக்கோயில் தல புராணம், காரமடை, கோயம்பத்தூர், தமிழ்நாடு

மாட்டை மேச்சலுக்கு அழைத்துச் சென்ற சிறுவன் காட்டிய இடத்தை கிராம பெரியவர்கள் பார்வை இட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது உணர்ச்சி வச பட்ட சிறுவன் அங்கு அரங்கநாத சுவாமி இருப்பதாக கூறி மூர்ச்சையிட்டான். செய்தி பரவியது. செய்தி கேட்ட மக்கள் தீவட்டியை எடுத்து கொண்டு, பூ, தேன், பழங்கள், சக்கரை, கற்கண்டு, தேங்காய் என்று பல பூஜை பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கு வந்தனர். தாங்கள் கொண்டு வந்த அனைத்தையும் இறைவனுக்கு அர்பணித்தனர். இறைவன் தங்களிடையில் தங்குவதற்கு இவ்விடத்தை தேர்தெடுத்ததில் மட்டிலா மகிழ்ச்சி கொண்டனர். மிச்சம் இருந்ததை பிரசாதமாக ஏற்றுக்கொண்டனர். இன்றும் இந்நிகழ்ச்சியை நினைவு கூற "பந்த சேவை, கவாளா சேவை" என்று ஆண்டு தோறும் கொண்டாடுகிறார்கள்.

அரங்கநாத சுவாமிக்கு காரமடையில் திருக்கோயில்
பிறகு, அரங்கநாதனுக்கு திருக்கோயில் கட்டப்பட்டது. பின் வந்த அரசர்கள், ஆட்சியாளர்கள் கோயிலை அபிவிருத்தி செய்தனர். சோழர்கள் காலத்து திருக்கோயில் இது. அவர்கள் இக்கோயிலுக்கு பல பணிகள் செய்துள்ளனர்.

கோயம்பத்தூரும் சுற்று வட்டாரங்களும் மதுரை சுல்தான்கள் ஆட்சியிலிருந்தது. பின் 1378ஆம் ஆண்டு மதுரை சுல்தான்களை முதலாம் புக்கராயர் ஸ்தாபித்த விஜயநகர சாம்ராஜ்ய பிரிதிநிதிகள் தோற்கடித்து விஜயநகர் சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தனர். மதுரைக்கு மகாநாயகரை நியமித்து மதுரையை விஜயநகரத்தின் பிரிதிநிதித்வத்துடன் தனி ஆட்சியாக்கினார்கள். மதுரை நாயக்கர்கள் என்ற பெயருடன் இப்பரம்பரை அறியப்படுகிறது. திருமலை நாயக்கரும், இராணி மங்கம்மாவும் இப்பரம்பரையில் மிகவும் பிரபலமானவர்கள். இந்த கோயில் வளாகத்தில் இரண்டு பெரிய மண்டபங்களும் மற்றும் கோயிலை சுற்றி மதில் சுவர்களும் கட்டியவர் திருமலை நாயக்கர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் கோயம்பத்தூர் மைசூர் மன்னர்கள் ஆட்சியின் கீழும் பின் ஆங்கிலேயர்கள் கீழும் வந்தது. மைசூர் அரசர்கள் மைசூர் அருகில் இருக்கும் ஶ்ரீரங்கபட்டிணத்தில் கோயில் கொண்டுள்ள அரங்கநாத சுவாமியின் அத்யந்த பக்தர்கள். கோயம்பத்தூரும் சுற்றுவட்டாருமும் அவர்கள் ஆட்சியின் கீழ் வந்த பொழுது காரமடை அரங்கநாதன் திருக்கோயிலுக்கு நிறைய கைங்கரியங்கள் செய்தனர்.

ஶ்ரீஹனுமாரின் பக்தர்களான ராயாஸ் மற்றும் மைசூர் ஆட்சியாளர்கள் கீழ் கோயம்பத்தூர் இருந்த சமயம், அந்த தாக்கத்தால் இங்கும் அனுமாரின் பக்தர்கள் அதிகரித்தனர்.

வெள்ளை குதிரை வாகனம், ஶ்ரீ அரங்கநாதன் திருக்கோயில், காரமடை, கோயம்பத்தூர், தமிழ்நாடு

வெள்ளை குதிரை வாகனம்
ஆங்கிலேயர்களின் காலத்தில் மேட்டுபாளைத்திற்கு இரயில் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இக்கோயிலை அகற்றி விட்டு இவ்வழியே இரும்பு பாதை அமைக்க திட்டம் வைத்திருந்தனர். செய்வதறியாத பக்தர்கள் அரங்கநாதனின் துணையை நாடினார்கள். அவர்களின் வேண்டுகோள் வீண் போகவில்லை. அன்று தலமை பொறியாளரின் கனவில் அரங்கநாதன் அவருக்கு அறிவுரை வழங்கினார். தலமை பொறியாளர் கோயில் இடிபடா வண்ணம் இரயில் பாதை திட்டத்தை மாற்றி அமைத்தார். அவருக்கு அரங்கநாதனின் மேல் இருந்த நம்பிக்கையை எடுத்து சொல்லும் வண்ணமும் அவரது பயபக்தியை சொல்லும் வண்ணமும் ஓர் காரியம் செய்தார். உத்ஸவ நாட்களில் அரங்கன் பவனி வர ஓர் வெள்ளை குதிரை வாகனம் செய்து கோயிலுக்கு தனது காணிக்கையாக கொடுத்தார்.

ஶ்ரீராமரும் ஶ்ரீஅரங்கநாதனும்
ஶ்ரீரங்க மாஹாத்மீயத்தில் கூறியுள்ள படி ஶ்ரீஅரங்கநாதரை ஸ்ரீராமர் நீண்ட நாட்கள் பூஜித்துள்ளார். ஸ்ரீராமர் அவ்விக்ரஹத்தினை இலங்கை மன்னன் விபீஷணருக்கு கொடுத்தார். இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது அவ்விக்ரஹத்தினை பிரியும் படியாயிற்று. அரங்கன் தனது பக்தன் தர்ம வர்மனுக்கு அருளுவதற்க்கு அவன் தவம் செய்திருந்த இடமான தற்போதய திருச்சிராபள்ளி அருகிலிருக்கும் ஶ்ரீரங்கத்தில் தங்கிவிட்டார். விபீஷணனின் விருப்பத்தினை ஏற்று அரங்கன் கடந்த நிலையில் ஶ்ரீரங்கத்திலிருந்து தென் திசை இலங்கை நோக்கி அருள்பாலிக்கிறார்.

அரங்கன் கடந்த நிலையில் ஶ்ரீரங்கத்தில் இருப்பது போல் இல்லாமல் காரமடையில் அவரது முகம் மட்டும் தான் அநுகிரகிக்கிறது. ஶ்ரீரங்கத்தில் ஶ்ரீராமர், ஶ்ரீசீதா, ஶ்ரீலக்ஷ்மணர்ருக்கு தனி சன்னிதியும், ஶ்ரீஆஞ்சநேயருக்கு தனி சன்னிதியும் இருக்கிறது, ஆனால் காரமடையில் கர்பகிரஹத்தின் மேற்கிலே ஶ்ரீராமர் இருபதாக ஐதீகம். ஆனால் ஶ்ரீஅனுமாருக்கு தனி சன்னிதி உள்ளது.

ஶ்ரீ அரங்கநாதன் திருக்கோயில், காரமடை, கோயம்பத்தூர், தமிழ்நாடு

காரமடையில் ஶ்ரீராமர்
காரமடையில் மூலவர் ஶ்ரீஅரங்கநாதன் கிழக்கு நோக்கியுள்ளார். உத்ஸவ மூர்த்தி ஶ்ரீவேங்கடேஸ்வரராக கொண்டாடபடுகிறார். உத்ஸவர் ஶ்ரீவேங்கடேஸ்வரர் கர்பகிரஹத்தினை அடுத்துள்ள மகாமண்டபத்தில் அருள்பாலிக்கிறார். மற்ற விஷ்ணு கோயில்களில் சடாரி சாதிப்பதற்கும் காரமடையில் சாதிப்பதற்கும் வித்யாசம் உண்டு. இங்கு விசேடமாக ஶ்ரீராமபாணத்தினால் சடாரி சாதிக்கப்படுகிறது. பக்தர்கள் சிரம் தாழ்ந்து சடாரியை ஏற்றுக்கொள்வார்கள், இங்கு ராமபாணம் பக்தர்கள் சிரத்தில் வைக்கப்படுகிறது. சக்ராயுதமும், ஆதிசேஷனும் ஶ்ரீராமபாணத்திலேயே இருப்பதாக ஐதீகம். இக்கோயிலில் மகாமண்டபத்தில் உத்ஸவ மூர்த்தியை வணங்கிய பின் சடாரி [ஶ்ரீராமபாணம்] சாதிக்கப்படுகிறது.

ஶ்ரீராமபாணதிற்கு ஆண்டுதோரும் விசேடமான பூஜை செய்து அதன் புனிதப்படுத்துகிறார்கள்.

ஶ்ரீஆஞ்சநேயருக்கு சன்னிதி
கோயிலின் வடக்கு பகுதியில் கிழக்கு நோக்கியுள்ள ஶ்ரீராமாநுஜர் சன்னிதியின் அருகில் வடக்கு நோக்கி ஶ்ரீஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி உள்ளது. மிக பழமையான ஶ்ரீஆஞ்சநேயர் சன்னிதிக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் மேல் வளைவும், அதற்கு ஏற்றால் போல் மேற்கூரை, விமானம் முதலியன கட்டப்பட்டன.

காரமடை ஶ்ரீஆஞ்சநேயர்
புடைப்பு சிற்பமாக நின்ற கோலத்தில் இருப்பவராக ஶ்ரீஆஞ்சநேயர் வடிக்கப்பட்டுள்ளார். ஶ்ரீஆஞ்சநேயர் மேற்கு நோக்கி அருள்பாலைக்கிறார். நின்ற கோலத்தில் இருக்கும் அவரது திருபாதங்களை தண்டையும் நூபூரங்களும் அலங்கரிக்கின்றன. இடது பக்க தொடையில் பதிந்திருக்கும் கங்கணம் அணிந்துள்ள இடது திருக்கரத்தில் சௌகந்திகா புஷ்பத்தின் காம்பை பிடித்துள்ளார். மலரா நிலையில் உள்ள இப்புஷ்பம் அவரது இடது தோளுக்கு மேல் தெரிகிறது. உயர்ந்து காணும் வலது திருக்கரத்தினால் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். மார்பினை பல ஆபரணங்கள் அலங்கரிக்கிறன. கந்தஹாரா என்ற தோள் அணி, கழுத்தை ஒட்டிய அணிகலம் ஆகியவை அணிந்துள்ளார். அவரது வால் தலைக்கு மேல் ஓங்கி முடிவில் சற்றே வளைந்தும், அவ்வளைவில் சிறு மணியுடனும் காணப்படுகிறது. தோள் வரை தொங்கும் காதணி அணிந்துள்ளார். கேச பாந்தம் என்னும் அணிகலத்தால் அழகாக சீவி முடிந்த முடியினை அலுங்காமல் வைத்துள்ளார். அவரது கண்கள் தியானத்தில் இருப்பது போலுள்ளது. தியானிக்கும் கண்களிலிருந்து வெளிப்படும் காருண்யத்தை எதிரில் இருக்கும் பக்தர்கள் உணரமுடிகிறது. தியானிக்கம் நிலையில் உள்ள காருண்யம் மிகு இவ்விறைவனின் உருவம் தியானிக்கப்பட வேண்டிய ஒன்று.


 

அனுபவம்
ஶ்ரீராமரையே தியானித்திற்கும் காரமடை ஶ்ரீஆஞ்சநேயரை தியானிப்பதே அனுபவம். ஆனந்தத்தை அனுபவியுங்கள், உலக சிந்தனையிலிருந்து வெளியேருங்கள்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
ஜூன் 2019

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

 


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே