home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

தேவப்பிரயாகை-சங்கம், தெக்ரி கார்வால், உத்தராகண்ட்


ஸ்ரீ ஹனுமான், தேவப்பிரயாகை, தெக்ரி கார்வால், உத்தராகண்ட்

ஜீகே கௌசிக்


தேவப்பிரயாகை

ஸ்ரீ ரகுநாத்ஜி மந்திர், தேவப்பிரயாகை, தெக்ரி கார்வால், உத்தராகண்ட் "தேவப்பிரயாகை" என்றால் சமஸ்கிருதத்தில் "தெய்வீக சங்கமம்" என்று பொருள். நமது வேதங்களின்படி, தேவப்பிரயாகை என்பது இரண்டு ஆகாய-பரலோக நதிகளான அலகானந்தா மற்றும் பாகீரதி ஆகிய இரு புனித நதிகளும் சங்கமித்து புனித கங்கையாக உருவெடுக்கிறது. உண்மையில் புனித நதிக்கு "கங்கா" என்ற பெயர் கிடைத்த இடம் இதுவேயாகும், இது பாரதத்தின் வடக்கு பகுதி முழுவதும் பாய்கிறது மற்றும் வங்காள விரிகுடாவோடு "கங்கா சாகர்" இல் இணைகிறது.

பிரயாகை என பெயர் வர மற்றொரு விளக்கம்: மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்பிராயாகை என்றாயிற்று.

இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள ஐந்து புனித சங்கமங்களில் ஒன்றான தேவப்பிரயாகை, பக்தியுள்ள இந்துக்களுக்கு புனித யாத்திரைக்கான முக்கியமான இடமாகும்.

உத்தராகண்ட் திவ்ய தேசங்கள்

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். இத்தலங்களுக்கு தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக கருதபடுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில், பத்ரிகாச்ரமம் [பத்ரிநாத்], திருப்பிரிதி [நந்தபிரயாக்-ஜோஷி மட்], மற்றும் தேவப்ரயாகை [திருக்கண்டமென்னும் கடிநகர்] ஆகிய மூன்று திவ்ய தேசங்கள் உள்ளன.

ஸ்ரீ ரகுநாத் மந்திர்

பெரியாழ்வாரால் பதினொரு பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன், வேணி மாதவன்) எனும் திருநாமத்தினாலும், தாயார் புண்டரீக வல்லி, விமலா என்னும் திருநாமத்தினாலும் மங்களாசாசனம். ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். கோயிலும் ஶ்ரீரகுநாத்ஜீ மந்திர் என்றே அழைக்கப்படுகிறது.

தேவப்பிராயகை மூன்று சிகரங்களால் சூழப்பட்டுள்ளது, இதற்கு கீத்தாஞ்சல் பர்வத், தஶரதாஞ்சல் பர்வத், மற்றும் நரசிங்கங்காசல் பர்வத் என அழைக்கப்படுகிறது. கீத்தாஞ்சல் பர்வத் என்னும் சிகரம் ரகுநாத் மந்திருக்கு மேலே உள்ளது. ஸ்ரீ ரகுநாத் மந்திர் அமைந்துள்ள இடம் நரசிங்காசல் சிகரம், சங்கத்தின் வலதுபுறத்தில் தஶரதாஞ்சல் ஆகும்.

ஸ்ரீ ராமர் அரியாணை, ஸ்ரீ ரகுநாத்ஜி மந்திர், தேவப்பிரயாகை, தெஹ்ரி கர்வால், உத்தராகண்ட் தேவப்பிராயாகை ஒரு சிறிய கிராமம், முக்கியமாக பத்ரிநாத்தில் பூஜைகள் செய்பவர்களின் குடும்பங்கள் குடிக்கொண்டுள்ளார்கள். குளிர்காலத்தில் பத்ரிகாச்ரமம் ஆலயம் மூடப்படும் போது, ​​பண்டிதர்கள் தங்குவதற்கு இங்கு வருகிறார்கள். இந்த பண்டிதர்கள் பத்ரிநாத்தின் புனித ஆலயத்தில் பூஜைகள் செய்வதற்காக தெற்கிலிருந்து ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இங்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குடும்பங்கள் இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரகுநாத் மந்திர் அருகே வசிக்கின்றனர்.

ஸ்ரீ ரகுநாத் மந்திர் தெஹ்ரி மகாராஜாவால் கட்டப்பட்டது. 1803 இல் ஏற்பட்ட பூகம்பத்தால் அது சேதமடைந்தது. தற்போதைய கோயில் தௌலத் ராவ் சிந்தியாவால் புனரமைக்கப்பட்டது.

ஒருபுறம் அலகானந்தா நதியும் மறுபுறம் பாகீரதி நதியும் இனிமையான பின்னணியாக அமைய, இந்த அழகான ஶ்ரீமகா விஷ்ணு கோயில் எளிமையாகவும் உள்ளது. சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களால், குறிப்பாக வைணவத் தத்துவத்தைப் பின்பற்றுபவர்களால் இத்தலம் புனிதமாக கருதப்படுகிறது. இந்த கோயிலின் பெருமாள் நீலமேகப் பெருமாள் என்று பாடப்பெற்றாலும், இங்குள்ளவர்கள் இவரை ஶ்ரீரகுநாத், புருஷோத்தமன் என்ற பெயரிலேயே அழைக்கின்றனர். இந்த இருபெயர்களும் ஸ்ரீ ராமரைக் குறிக்கின்றன.

மந்திர் வளாகத்தை அடைய கிட்டத்தட்ட ஐம்பது படிகள் ஏற வேண்டும். உயரமான கோபுரம் நீண்ட தூரத்திலிருந்தே காணப்படுகிறது. கோயில் வளாகம் மிகவும் எளிமையானது. கருடனுக்கு பிரார்த்தனை செய்தபின், ரகுநாத்ஜி பகவான் தரிசனம் செய்ய பிரதான மண்டபத்திற்குள் செல்லலாம். ஸ்ரீ ராமர்/ ஸ்ரீ ரகுநாத்ஜீயை பக்தியுடன் அமைதியான சூழலில் பிரார்த்தனை செய்யலாம். அவரின் அருளாசிகளை பெற்று அருகில் இருக்கும் சன்னிதிக்கு செல்வோம். கருவறைக்குத் தெற்கே நரசிம்மர் தனி சந்நதியில் சேவை சாதிக்கிறார். இங்கும் பிராத்தித்து ஆசிகள் பெறுவோம். சற்றே கீழே இறங்குவோமானால் திறந்த முற்றம். முற்றத்தில் ஸ்ரீ ராமரின் அரியாணையை காண முடியும். பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஸ்ரீ ராமரிடம் தாங்கள் வேண்டுகோளை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஸ்ரீ ராமர் பக்தர்களின் விண்ணப்பத்தினை ஏற்று அநுக்ரஹிப்பார்.

இந்த வளாகத்தில் ஒரு அரச மரம் உள்ளது, அங்கு ஸ்ரீ ராமர் தியானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையில் போரின்போது அறியாமல் செய்யப்பட்ட பாவங்களிலிருந்து விடுபட ஸ்ரீ ராமர் வேள்வி செய்ததாகவும், பெற்றோருக்கு தர்பணம் இங்கு செய்தாகவும் கருதப்படுகிறது.

ஸ்ரீ கடிநகர்

ஸ்ரீ ரகுநாத்ஜி மந்திர், ஸ்ரீ ஹனுமான் குஃபா, சங்கம், தேவப்பிரயாகை, தெஹ்ரி கர்வால், உத்தராகண்ட் முன்பு கூறியது போல, தேவப்பிரயாகை திவ்ய தேசங்களில் ஒன்றாகும், இது திருக்கண்டம், கடிநகர் என அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ பெரியாழ்வார் இந்த க்ஷேத்திரத்தின் இறைவனைப் புகழ்ந்து பதினொரு பாசுரங்களை பாடியுள்ளார். அவர் இறைவனைப் புகழ்ந்து பாடியபோது, ​​இங்கு பாயும் ஆறுகளின் அழகை அசாதாரண வார்த்தைகளில் விவரித்தார்.

அவரது வார்த்தைகளில்: கங்கை என்று சொன்னாலே தீரும் பாவங்கள் என்பதை "கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்" என்கிறார். அப்படிப்பட்ட இக்கங்கை முதலில் எம்பெருமானது திருவடியினின்றும் துளசியை தழுவி பின்பு சங்கரன் சடையினில் கொன்றை மலரைத் தழுவியபடி பின் நில உலகில் ஒளிமிகப் பெற்று பசுமைநிறமும் செந்நிறமுமாகத் தோற்றுகின்ற நீர்ப்பெருக்கினால் இருபுறமும் திரண்டு ஆரவாரித்துக்கொண்டு வருவதாக கங்கையை அநுபவிக்கிறார். ஒவ்வொரு பாசுரத்திலும் கங்கையின் பெருமையை கூறியிருப்பது மிகவும் விசேடமாக ஆழ்வார் கங்கையை அநுபவித்திருக்கிறார் என்பதை காண்போமாக.

ஸ்ரீ பெரியாழ்வாரின் இந்த வார்த்தைகள் இன்றும் உண்மைதான், இந்த மாபெரும் பக்தரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை உணர ஒருவர் சங்கத்தில் தங்க வேண்டும். இங்கு அலக்நந்தாவும் பாகீரதியும் இரு மலைகளின் இடையே பெரும் ஆரவாரத்துடன் வந்து சங்கமிக்கிறது. கண்கள் இரண்டு போதுமா அவைகளின் ஆரவாரத்தை கேட்க காதுகள் தான் இரண்டு போதுமா‍‌! இரு நிறங்களில் பச்சை வண்ணத்தில் அலக்நந்தாவும், சற்றே கலங்கிய பழுப்பு நிறத்தில் பாகீரதியும் வந்து ஒன்றாக சங்கமாவது பார்க்கப் பரவச மூட்டுகிறது.

கங்க நாம ஜனன சங்கம்

புண்ணிய நதி "கங்கா" என்ற பெயரை இங்கு தான் பெருகிறாள். இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடம் கூர்மையான மூக்கு போன்று துருத்திக்கொண்டு இருக்கும் மலை அடிவாரத்தில் இருக்கிறது. ஒருவர் அதை தூரத்தில் இருந்து பார்க்கும்போது அது மிகவும் அற்புதமான காட்சி. அலக்நந்தா மற்றும் பாகீரதி நதிகளின் பார்வைக்கு இரண்டு வெவ்வேறு வண்ணங்களிலும், கங்கையின் மூன்றாவது நிறமும் ஒருவரின் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த இரண்டு நதிகளின் சங்கத்தில் குளிக்க ஒருவர் கிட்டத்தட்ட ஐம்பது / அறுபது படிகளில் இறங்க வேண்டும். மழைக்காலத்தில் வெவ்வேறு நீர் நிலைகளுக்கு இடமளிக்கும் வகையில் குளியல் காட் பல நிலைகளில் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ ராமர் பாதம், ஸ்ரீ கங்கா மாதா மந்திர், தேவப்பிரயாகை, தெஹ்ரி கர்வால், உத்தராகண்ட் குளியல் "காட்"டில் ஒருவர் குளிக்கும் இடத்தை அடைந்த படிகளின் இருபுறமும் இரண்டு குகைகள் இருப்பதைக் காணலாம். ஒன்று சூர்யா குஃபா என்றும் மற்றொன்று அனுமன் குஃபா என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமரும் தேவப்பிரயாகையும்

"தங்கையை மூக்கும் தமையனைத் தலையும், தடிந்த எம் தாசரதி போய், எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட, எம் புருடோத்தமன் இருக்கை" என்று ஶ்ரீராமரை நினைவில் நிறுத்தி பெரியாழ்வாரால் புகழப்பெற்ற இத்தலத்தில் ஶ்ரீராமர் யாகம் செய்து, தன் பெற்றொருக்காக தர்பணம் செய்துள்ளார். இங்கு ஶ்ரீராம பாதம் பதித்ததால், ஶ்ரீராம பாதம் வடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் முன்னோர்களுக்காக இங்கு தர்பணம் செய்வது நண்மை பயக்கும் என கருதுகின்றனர். ஸ்ரீ ராமர் தியானித்த இடம் ரகுநாத் கோவிலில் உள்ளது. ஸ்ரீ ராமர் தியானித்த இடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பக்தரின் விருப்பம் நிச்சயம் நிறைவேறும்.

ஸ்ரீ ஹனுமான் குஃபா மற்றும் ஸ்ரீ ஹனுமான்

சங்கத்தில் உள்ள ஸ்ரீ கங்கா மா கோவிலுக்கு அருகில், சங்கத்தின் கரையில் “ஸ்ரீ ஹனுமான் குஃபா” என்ற பெயரில் ஒரு சிறிய குஃபா (குகை) உள்ளது. இங்கு சங்கமத்தில் ஸ்நானம் செய்த பின் ஶ்ரீஹனுமார் இந்த குகையில் பிரபு ஶ்ரீராமரை தியானித்து இருந்தார். இந்த குகையின் கூறையாக உள்ள பாறையில் ஸ்ரீ ஹனுமாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சங்கத்தில் புனித குளியல் முடித்த பின் ஸ்ரீ கங்கா மாதா, பத்மபதம் (பகவான் ஶ்ரீராமரின் பாதங்கள்), பின்னர் ஸ்ரீ ஹனுமார் ஆகியோருக்கு ஸ்ரீ ரகுநாத் கோயிலுக்குச் செல்வதற்கு முன் தங்கள் பிரார்த்தனைகளை சமர்பிக்கின்றனர். பின்பே ஸ்ரீ ரகுநாத்ஜி கோயிலில் சென்று ஸ்ரீ ராமரிடம் ஆசிகள் பெறுகின்றனர்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஸ்ரீ ஹனுமான், தேவப்பிரயாகை, தெஹ்ரி கர்வால், உத்தரகண்ட்"

 

அனுபவம்
தேவப்பிரயாகையின் இந்த புனித சங்கத்தில் ஸ்ரீ கங்கா மாதா, ஸ்ரீ ஹனுமான் ஆகியோரை வந்திப்பர்களுக்கு ஸ்ரீ ரகுநாத்ஜி ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்குவார் என்பது உறுதி.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+